பொருளாதார நெருக்கடியால் தற்காலிக பின்னடைவைச் சந்தித்த நாட்டில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் அடுத்த வருடம்



முனீரா அபூபக்கர்-

பௌதீக வள அபிவிருத்திக்குரிய நான்கு பிரதான நகரங்களாக கொழும்பு, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன ...

அந்த நகரங்களை இணைக்கும் 9 பொருளாதார வழித்தடங்கள்...

தம்புள்ளை, கண்டி மற்றும் காலி அபிவிருத்தி திட்டங்கள் தயார்...

பொருளாதார நெருக்கடியால் தற்காலிக பின்னடைவைச் சந்தித்த நாட்டில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் அடுத்த வருடம் மீள நடைபெறும் என விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நான்கு முக்கிய நகரங்கள் பௌதீக வள அபிவிருத்திக்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அந்த நகரங்களை இணைக்கும் வகையில் 9 பொருளாதார வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த நகரின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு உரிய திணைக்களங்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் முக்கிய வர்த்தக மற்றும் நிதி நகரமாக கொழும்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபையானது எதிர்வரும் 8 வருடங்களுக்கான கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டத்தை ஏற்கனவே வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ளது. அதன் கீழ் கிரிமண்டல மாவத்தை நகர அபிவிருத்தித் திட்டம் மற்றும் நகர மறுமலர்ச்சி வீடமைப்புத் திட்டங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொரளை நகர அபிவிருத்தி திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

ஹம்பாந்தோட்டை நகரின் அபிவிருத்திக்காக தயாரிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை பெரு நகர அபிவிருத்தித் திட்டத்தை இது புதுப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட சர்வதேச மாநாட்டு மண்டபம், துறைமுகம், மத்தள விமான நிலையம், உலர் வலய தாவரவியல் பூங்கா மற்றும் நிர்வாக வளாகம் என்பன ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. புதிய திட்டங்களாக, வங்கியின் பிராந்திய திட்டம் மற்றும் மருத்துவமனை சதுக்க அபிவிருத்தித் திட்டம் ஆகியவை எதிர்காலத்தில் செயல்படுத்தப்பட உள்ளன.

திருகோணமலையை ஒரு பெரிய வணிக நகரமாக அடையாளம் காணவும் மற்றும் பல உள்ளூராட்சி நிறுவனங்களை உள்ளடக்கவும் திருகோணமலை நகர அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. இதன்படி, திருகோணமலை துறைமுக அபிவிருத்தி, எண்ணெய் முனைய அபிவிருத்தி மற்றும் கப்பல்துறை கைத்தொழில் வலயம் என்பன அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து திட்டங்களைத் தயாரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ் குடாநாட்டுக்கான அபிவிருத்தி திட்டமும் தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதன் கீழ் காங்கேசந்துறை நகர அபிவிருத்தி, துறைமுக அபிவிருத்தி, பலாலி விமான நிலைய வசதிகளை விஸ்தரித்தல், கைத்தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அபிவிருத்தி மற்றும் பல கலப்பு அபிவிருத்தித் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இந்த நான்கு முக்கிய நகர அபிவிருத்தி திட்டங்களுடன் தம்புள்ளை, கண்டி மற்றும் காலி அபிவிருத்தி வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காலி அபிவிருத்தி திட்டம் ஏற்கனவே அதன் கீழ் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. காலி கோட்டை தபால் நிலைய மீள் அபிவிருத்தி, ஒலுவாகொட சூழலியல் விவசாய அபிவிருத்தித் திட்டம் மற்றும் காலி மத்திய கலப்பு அபிவிருத்தித் திட்டம் ஆகியவையும் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
போகம்பர சுற்றுலா மற்றும் கலாச்சார அபிவிருத்தி நிலையம், கட்டம்பே நடுத்தர வர்க்க வீடமைப்பு வளாகம், கட்டுகஸ்தோட்டை மொத்த விற்பனை நிலைய அபிவிருத்தித் திட்டம், கன்னோரவ கல்வி மைய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பல கலப்பு அபிவிருத்தித் திட்டங்கள் கண்டி அபிவிருத்தியின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளன. தம்புள்ளை அபிவிருத்தித் திட்டம் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் வர்த்தமானியில் வெளியிடப்பட உள்ளது. இதன் கீழ் பல்வகை போக்குவரத்து நிலையம், சீகிரியா சுற்றுலா அபிவிருத்தி திட்டம், தம்புள்ளை இனாமலுவ சிகிரியா வழியாக ஹபரணைக்கு செல்லும் பாதை அபிவிருத்தி, ஹபரணை சுற்றுலா அபிவிருத்தி திட்டம், கலேவெல மாற்று பாதை திட்டம் மற்றும் நாவுல பொது விளையாட்டரங்கம் நவீனமயப்படுத்தப்படவுள்ளது.

தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக தற்காலிக பின்னடைவை சந்தித்த இவ்வாறான பாரிய திட்டங்கள் அடுத்த வருடம் துரிதப்படுத்தப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஜனாதிபதியும் சம்மதித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் கூறினார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :