திருக்கார்த்திகை விளக்கீடு மற்றும் சிவபெருமான் நடராஜ திருக்கோலத்தில் காட்சி கொடுத்த புனித நன்நாளை முன்னிட்டு உலக சேமத்திற்கான புனித பௌர்ணமி தின நிகழ்வு மட்டக்களப்பு ஶ்ரீ பேரின்ப ஞான பீடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பீடத்தின் குருமுதல்வர் ஆன்மீக ஜெகத்குரு மகாயோகி கே.எஸ்.புண்ணியரெத்தினம் சுவாமிகளின் தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காயத்திரி மகா யாகம் முறையே திருவிளக்கு பூஜையில் ஆரம்பித்து சுவாமிகளின் ஞான குருநாதரான பகவான் காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளின் தெய்வீக திருப்பாதங்களுக்கு அபிஷேக தூப தீப புஷ்பங்கள் சொரிந்து ஆராதனைகள் பக்திப் பரவசத்தோடு நிகழ்த்தப்பட்டது.
அதன் பின்னர் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட உயிர் காக்கும் சஞ்ஜீவினி மூலிகைகள் இடப்பட்டு மிக மிக சக்திவாய்ந்த காயத்திரி மகா மந்திரம் மகா மிருத்தியுஞ்ஜெய மந்திரம் மேலும் நோய்ப்பிணியிலிருந்து காக்கும் தன்வந்திரி மகா மந்திரம் என பல மகா மந்திரங்கள் பாராயணம் செய்யப்பட்டு உலக சேமத்திற்கான மகா யாகம் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
தொடர்ந்து ஆனந்த தியான வழிபாடும் சுவாமிகளினால் ஆன்மீக அருளுபதேசமும் அன்னதானமும் ஆசிகளும் அனைத்துப் பக்தர்களுக்கும் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிற்பகல் 6:00 மணிக்கு திருக்கார்த்திகை விளக்கீடு நிகழ்வும் ஶ்ரீ பேரின்ப ஞான பீடத்தில் மிகவும் பக்திப் பூர்வமாக நடைபெற்றது.
0 comments :
Post a Comment