அரசுடனான தமிழ்த் தலைமைகள் பேச்சு வார்த்தைக்கு இந்தியா மத்தியஸ்தம் வகிக்க வேண்டும். அத்தோடு இலங்கையிலே தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு எனக்கூறப்படும் சமஸ்டியை பெற்றுத்தர இந்தியா அனுசரணையாளராக இருக்க வேண்டும்.
இவ்வாறு ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச்செயலாளர் கதிர் நேற்று பாண்டிருப்பில் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு சபை அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பில் நடத்தி வரும் சமஸ்டியை பெறுவதற்காக தமிழ் தலைமைகள் ஒன்று பட வேண்டும் என்ற போராட்டத்தின் மூன்றாம் நாள் நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய முன்றலில் இடம் பெற்று வரும் போராட்டத்தில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் உபதலைவர் நகுலேஸ்வரன் ஆகியோரும் அன்று கலந்து கொண்டனர்.
அங்கு கதிர் மேலும் உரையாற்றுகையில்..
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு வருகை தர இருக்கின்றார். அவரது வருகை தமக்கு நல்ல தீர்வை பெற்றுத் தரும் என்று எமது தமிழ் மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
பிரிக்கப்படாத வடக்கு கிழக்கு மாகாணம் என்பது தமிழர்களின் பூர்வீகமான வாழ்விடம். இதைப் பெறுவதற்காக ஆயுத ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் போராடி வந்தோம். விலைமதிக்க முடியாத பல உயிர்களை இழந்தோம் .பல கோடி சொத்துக்களை இழந்தோம்.
இன்று வட கிழக்கு பிரிக்கப்பட்டு சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை என்று பல கூறுகளாக பிரிந்து இருக்கின்றோம். அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகமாக வாழ்கிறோம்.
எனவே இங்கு மகளிர் அணி முக்கியமான கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபடுகிறது .
தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்று பட வேண்டும் .உண்மை . கட்டாயம் இந்த ஒற்றுமைக்காக இந்த மகளிர் சமூகம் எடுத்துக் கொள்கிற முயற்சியை பாராட்டுகின்றேன். தமிழ் தலைமைகள் ஒன்றுபட்டு அரசிடம் பேச வேண்டும் .
எமக்கான நிரந்தர தீர்வு என்ன என்பதை தமிழ் மக்கள் அறுதியாகக் கூறியிருக்கின்றார்கள். அதுதான் சமஷ்டி. அயல் நாடான இந்தியா இந்த விஷயத்திலே இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் .
இந்திய வெளிவிவகார அமைச்சர் இங்கு வருகின்ற பொழுது நல்லதொரு கருத்தைச் சொல்வார் என்று இலங்கை தமிழ் மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றார்கள். இந்திய அரசு தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வை பெற்று தரும் என்ற நம்பிக்கை இருக்கின்றது .
அதற்கு முன்னோடியாக இலங்கை அரசியல் யாப்பில் 1988இல் ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்தில் தமிழருக்கான அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும்.
அதனை ஒரு அடித்தளமாக வைத்துக்கொண்டு இந்திய அரசின் அனுசரணையோடு சமஸ்டியை பெறுவதற்கு நாங்கள் பயணிக்க வேண்டும். அம்பாறை மாவட்ட மகளிரை வாழ்த்துகின்றேன்.என்றார்.
0 comments :
Post a Comment