வாழைச்சேனை மீனவர்களுக்கும்- கல்முனை பிராந்திய மீனவர்களுக்கும் பிரச்சினை : பேச்சுவார்த்தை மூலம் தீர்வை வழங்கிய முக்கியஸ்தர்கள் !



நூருல் ஹுதா உமர்-
ட்டக்களப்பு மாவட்ட வாழைச்சேனை பிரதேச மீனவர்களுக்கும், அம்பாறை மாவட்ட கல்முனை பிராந்திய மீனவர்களுக்கும் வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்திலும், கடற்கரைகளிலும் தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் முரண்பாடுகள், பிரச்சினைகளை ஆராய்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணும் பேச்சுவார்த்தை மாளிகைக்காடு அந்நூர் கலாச்சார மண்டபத்தில் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸின் ஒருங்கமைப்பில் நேற்று மாலை இடம்பெற்றது.

உலமாக்கள், காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எஸ். ஜெகத், அம்பாறை மாவட்ட மீன்பிடி திணைக்கள உதவிப் பணிப்பாளர், அம்பாறை மாவட்ட அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ், மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் எம்.எம். பௌசர், வாழைச்சேனை அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன உப தலைவரும், பொலிஸ் பரிசோதகருமான ஏ. அமீரலி, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் சங்கம், சம்மேளனம், சமாசம் போன்றவற்றின் தலைவர், செயலாளர்கள், நிர்வாகிகள், வாழைச்சேனை மீன்பிடித்துறைமுக அபிவிருத்திக்குழு நிர்வாகிகள் உட்பட பலரும் மத்தியஸ்தம் செய்து மீனவர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான தீர்வொன்றை முன்வைத்தனர்.

படகு தரித்தல், மீன் விற்பனை, போதையொழிப்பு, மீனவர்களுடனான கொடுக்கல் வாங்கல்கள், மீன் வியாபாரிகளுடனான உறவுகளை பேணுதல், போன்ற விடயங்களை ஆராய்ந்து அவற்றுக்கு இருதரப்பும் பேச்சுவார்த்தைகள் செய்து ஒப்பந்தமொன்றை அமைப்பது தொடர்பிலும், இருதரப்பினதும் அங்கத்துவத்துடன் கூடிய கண்காணிப்பு நிர்வாக குழுவை அமைப்பது தொடர்பிலும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் போதை பொருள் பாவித்த மீனவரினால் கல்முனை மீனவர்கள் தாக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு வாழைசேனை மீனவர்கள் பாதிக்கப்பட்ட கல்முனை மீனவர்களிடம் தமது மனவருத்தங்களை தெரிவித்தனர். இனிவரும் காலங்களிலும் தொடர்ந்தும் ஒற்றுமையாக கடற்தொழிலில் ஈடுபடும் பொறிமுறை தொடர்பிலும் பேசப்பட்டு இருதரப்பையும் இணக்கத்துடன் சமரசம் செய்து வைக்கப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :