கடந்த 2023 .01. 19ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷேக் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி அவர்களது தலைமையில் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
இந் நூற்றாண்டு விழாவுக்கு இலங்கையின் மேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கௌரவப் பிரதமர் தினேஷ் குணவர்தன, பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மகிந்தயாப்பா அபேவர்த்தன , முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க மற்றும் இராஜதந்திரிகள், வெளிநாட்டுப் பிரமுகர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நலன் விரும்பிகள், பெண்கள் மற்றும் சமயத் தலைவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை விசேட அம்சமாகக் கொள்ளப்படுகிறது.
நாட்டின் பல பகுதிகளிலிருந்து வருகை தந்த ஆலிம் களால் மாநாட்டு மண்டபம் நிறைந்து காணப்பட்டமை விழாவின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டியது.
இம்மாநாட்டின் போது பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களின் மாநாட்டு உரை சகல தரப்பினரினதும் கவனத்தை ஈர்த்தது.
நாட்டின் ஜனாதிபதி அவர்கள் கொண்டிருந்த ஆழ்ந்த அறிவுப் புலமை அவரது உரையில் வெளிப்பட்டது.
உலக மகா யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இருந்த உலக நிலவரம்,அக்கால எல்லையில் ஜம்இய்யாவின் தோற்றம்,கிலாபத் கோட்பாட்டின் வீழ்ச்சி,அப்பாசிய தலைநகர் பக்தாதின் செல்வாக்கு, முஸ்லிம் ஸ்பெயின் ஐரோப்பிய உலகிற்கு வழங்கிய அறிவியல் புரட்சி,சமய சமூக நல்லிணக்கம், சமயத்தின் அடிப்படை கருத்துக்களைப் பேணி நவீன, கலாசார மாற்றங்களை சமூகங்களிடையே நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பௌத்த,கிறிஸ்தவ,இந்து சமயங்களை மேற்கோள் காட்டி தற்கரீதியாக முன்வைத்து உரை நிகழ்த்தினார்.
இலங்கை முஸ்லிம் மக்கள் இலங்கையில் பல பாகங்களிலும் வாழ்ந்த போதிலும் அவர்கள் வாழ்கின்ற பிரதேசங்களின் தன்மைக்கு ஏற்ப பிரச்சினைகள், தேவைகள் வித்தியாசப் படுகின்றன இந்நிலையில் சகல தரப்பாருடனும் பேசவேண்டிய தேவையுள்ளது இதற்காக வேண்டி "சமூக நீதிக்கான ஆணைக் குழு"ஒன்றினை தான் ஏற்படுத்தவுள்ள தாகவும் அதற்காகமுஸ்லிம் மக்களின் பங்களிப்பினை பெற்றுத் தருமாறு ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமைத்துவத்தை கோரியதுடன் முஸ்லிம் தனியார் சட்ட விவகாரங்கள் சம்பந்தப்பட்ட விடயத்தில் தன்னால் எந்த அழுத்தமும் பிரயோகிக்கப்படமாட்டாது என உறுதிபடக் கூறியதுடன் முஸ்லிம் தனியார் சட்ட விவகாரங்கள் தொடர்பில் ஜம்இய்யாவின் மூலமான கருத்தில் அவர் உறுதியாக உள்ளதை அவரது உரையில் அறிய முடிந்தது.
மேலும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் முஸ்லிம் சமூகம் தொடர்பாக அதிக பொறுப்புக்களை கொண்டுள்ளது என தமது உரையின் போது நினைவு கூர்ந்தமை விசேட செய்தியாக அமைந்தது.
இதேவேளை ஜம்இய்யாவின் தலைவர் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள், அவர்களது தியாகம், சகவாழ்வு,இன ஐக்கியம் அதற்காக ஜம்இய்யாவின் ஈடுபாடு என்பவற்றை விளக்கியதுடன் வரலாற்று ரீதியான ஆவணங்களையும் எடுத்துக்காட்டி முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் இன சௌகரியத்துடன் வாழ்ந்து வருகிறது என்பதை மிகவும் தெளிவாக அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மதினா சாசனத்தை மையமாகக் கொண்டு எமது இன ஐக்கிய செயற்பாடுகள், சமூக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதையும் இவர் குறித்துக் காட்டியதோடு முஸ்லிம்கள் இந்த நாட்டில் எப்பொழுதும் ஐக்கியமாக வாழ்வதற்கு விரும்புகின்றவர்கள் பயங்கரவாத பிரிவினைவாத எந்தவொரு செயற்பாட்டுக்கும் இவர்கள் ஆதரவு அளிப்பவர்கள் அல்ல என உறுதிபட எடுத்துச் சொன்னமை வலுவாக அமைந்தது.
இம்மாநாட்டில் அனைத்து சமய பீடங்களின் தலைவர்களின் உரைகள் இடம் பெற்றமையும் , ஜம்இய்யாவின் சேவைகளைக் கௌரவித்து தபால் தலை வெளியிடப்பட்டமையும் , 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற உள்ள நிலையில் சகலரையும் நாட்டுக்காக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி நாட்டுக்கு அறைகூவல் விடுக்க இம்மாநாட்டினை பயன்படுத்தியதையும் ஜம்இய்யாவின் சேவைக்கு கிடைத்த தேசிய அங்கீகாரமாக் கொள்ளப் படுகிறது.
மேலும் இம்மாநாடு சிறப்பாக நடைபெற மிகுந்த சிரத்தையினை ஜம்இய்யா எடுத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
நூற்றாண்டு கால தலைவர்கள், செயலாளர்களின் வாழ்க்கை வரலாற்றை நூலுருவில் கொண்டு வந்தமை சிறப்பான அம்சமாகக் கொள்ளப் படுகின்றது.
துறைசார்ந்தவர்கள் கௌரவிக்கப்பட்டமையும் கடந்த கால ஜம்இய்யாவின் செயற்பாடுகள் காட்சிப் படுத்தப் பட்டமையும் மாநாட்டு நிகழ்வுகள் நேரம் பேணப்பட்டு முன்னெடுக்க பட்டமையும் மிகவும் சிறப்பு.
அதேவேளை தலைநகரில் ஆலிம்களால் சர்வதேச தரத்தில் ஒரு மாநாட்டினை நடாத்த முடியும் எனவும் அவர்கள் மொழி ஆளுமை கொண்டவர்கள் எனவும் இம்மாநாடு அறிமுகப் படுத்தியது அல்ஹம்துலில்லாஹ்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அவர்கள் அல்லாஹ்வின் உதவியால் மிகவும் சிறந்த முறையில் ஜம்இய்யாவினை சகலரின் உதவியுடன் இயக்கிக் கொண்டு செல்கிறார் என்ற செய்தியினை நூற்றாண்டு விழா உணர்த்தியது.
மாநாடு சிறப்பாக முடிவடைந்த பொழுதிலும் ஒரு சமூகத்தினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ள ஓர் அமைப்பின் நூற்றாண்டுக்கான இந்த மாநாட்டில் இன்னும் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும் என்று பலரும் பேசிக்கொண்டதை அவதானிக்க முடிந்தது.
குறிப்பாக ஜம்இய்யாவுடைய வரலாற்றை, சேவைகளை சொல்லுகின்ற பொழுது கடந்த 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னரான வரலாறு அங்கே முதன்மைப்படுத்தப்பட்டிருந்ததையும் அதற்கு முந்தி உள்ள வரலாறுகள் , சான்றுகள் எடுத்துரைக்கப்பட்டமை ஒப்பீட்டளவில் மிகக் குறைவாக இருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
நூற்றாண்டு விழா சம்பந்தமாக வெளியிடப்பட்ட மலரில் மேலும் பல தகவல்களைச் சேர்த்து வெளியிட்டிருக்கலாம்.
அம்மலரில் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுச் சுருக்கத்தையும் ஜம்இய்யாவின் மாவட்ட கிளைகள் சம்பந்தப்பட்ட வரலாற்று விபரங்களையும் இடம்பெறச் செய்திருந்தால் அது மிகவும் சிறப்புக்குரிய ஒரு அம்சமாக கருதப்பட்டிருக்கும்.
நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்ச்சியில் பல துறைகளில் சேவை செய்து ஓய்வு பெற்ற எமது சிரேஸ்ட ஆலிம்களான நிருவாக , கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் , மற்றும் அறபுக் கல்லூரிகளில் தமது ஆயுளை அர்பணித்து நீண்ட காலமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சிரேஸ்ட அதிபர்கள், ஆசிரியர்கள், ஜம்இய்யாவின் வயது மூத்த ஆலிம்கள் மற்றும் மாவட்ட ஜம்இய்யாவின் நீண்ட காலம் தலைவர்களாக இருந்து செயல்படும் எமது மூத்த ஆலிம்களை இம்மாநாட்டில் அழைத்து கௌரவித்து இளைய தலைமுறையினருக்கு அடையாளப் படுத்தி ஊக்கப் படுத்தி இருக்கலாம்.
ஜம்இய்யாவின் 75வது ஆண்டு விழாவை கொண்டாடுகின்ற பொழுது அரபுக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஜம்இய்யாவை ஜனரஞ்சகப்படுத்த எடுத்த முயற்சி போன்று நூற்றாண்டு விழாவுக்காக போட்டி நிகழ்ச்சிகளை அரபுக் கல்லூரிகள் மட்டத்தில் நடாத்தி பரிசில்கள் வழங்கி கௌரவித்து இருக்கலாம்.
இதேவேளை இந்நூற்றாண்டு விழா ஜம்இய்யாவின் பிரதேச, மாவட்ட வரலாறுகளை முறையாகப் பேணிப் பாதுகாக்க வேண்டியதன் தேவையை உணர்த்தியுள்ளது.
அறபுக் கல்லூரிகளில் ஆங்கிலம், சிங்களம் கட்டாய பாடங்களாகக் கொள்ளப்பட்டு அவை மௌலவிப் பரீட்சைக்குரிய ஒரு பாடமாகக் கொள்ளப் படுவதை வேண்டி நிற்கிறது.
சர்வதேச தரத்தில் ஆலிம்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்கிறது.
கருத்து வேறுபாடுகளை மறந்து பொதுவாக எல்லோரும் ஒருமித்து பயணிக்கக்கூடிய விடயத்தில் சகல ஜமாஅத்தினரும் ஒற்றுமைப் பட்டு இயங்குவதை ஊக்கப் படுத்துகிறது.
இம்மாநாடு சிறப்புற உழைத்த அத்தனை உள்ளங்களையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.
எதிர் காலத்தில் ஜம்இய்யாவின் செயற்பாடுகள் மேலும் சிறப்புற பிரார்த்திக்கிறேன்.
0 comments :
Post a Comment