திருடப்பட்ட தாலிக்கொடி உருக்கிய நிலையில் மீட்பு-சந்தேக நபரான பெண்ணிற்கு 14 நாட்கள் விளக்கமறியல்



பாறுக் ஷிஹான்-
பிள்ளைக்கு பாலூட்டுவதாக தெரிவித்து வீட்டினுள் சென்று சூட்சுமமாக தாலி கொடியை களவாடி சென்ற சந்தேக நபரான பெண்ணை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்லப்பர் வீதியிலுள்ள வீடு ஒன்றினுள் இருந்த 8 பவுண் பெறுமதி உடைய தாலிக்கொடி காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்திற்கு கடந்த சனிக்கிழமை(25) அன்று முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைய சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஜீ.துசார திலங்க ஜெயலால் வழிநடத்தலில் பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான டேவிட் டினேஸ் தலைமையிலான குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்திருந்தனர்.

இதன் போது குறித்த வீட்டில் கடந்த வியாழக்கிழமை(16) அன்று சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் எனினும் தாலிக்கொடி காணாமல் சென்றிருந்ததை பின்னர் அறிந்து உடனடியாக கடந்த சனிக்கிழமை(25) முறைப்பாட்டினை பாதிக்கப்பட்ட தரப்பினர் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கி இருந்தனர்.

இதனை அடுத்து குறித்த வீட்டில் வந்து செல்கின்ற நபர்கள் தொடர்பில் ஆராய்ந்த பொலிஸ் குழு இத்திருட்டு சம்பவத்தில் ஒரு குடும்பமே பின்னணியில் செயற்பட்டுள்ளதை அறிந்தது.இதன் பிரகாரம் பொலிஸ் விசேட பிரிவின் தகவலுக்கமைய முதலில் குறித்த குடும்பத்தின் உறவு முறையிலான 40 வயதுடைய பெண் சந்தேக நபரை பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர்.வழமை போன்று அடிக்கடி குறித்த வீட்டிற்கு வருகின்ற குறித்த சந்தேக நபர் சம்பவ தினமன்று தனது கைக்குழந்தைக்கு பாலூட்டுவதற்கு வெளிநபர்கள் இருப்பதனால் சங்கடமாக இருப்பதாக வீட்டு உரிமையாளரான தனது உறவினர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய வீட்டு உரிமையாளர் குழந்தையை வீட்டினுள் எடுத்து சென்று பாலூட்டுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.இந்நிலையில் வீட்டினுள் சென்ற குறித்த சந்தேக நபரான பெண் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 8 பவுண் தாலிக்கொடியினை களவாடி அவ்விடத்தில் இருந்து அகன்று சென்று விட்டார்.

பின்னர் வீட்டு உரிமையாளர் தனது வீட்டினுள் பாதுகாப்பாக இருந்த தாலிக்கொடி காணாமல் சென்றதை அறிந்து பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு வழங்கியுள்ளார்.இதற்கமைய செயற்பட்ட பொலிஸ் குழு சந்தேக நபரான 40 வயதுடைய பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(26) அன்று கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் குறித்த சந்தேக நபருக்கு ஒத்தாசையாக செயற்பட்ட தாய் தம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தந்தை தொடர்ந்தும் தலைமறைவாகி இருந்து வருகின்றார்.
இத்திருட்டு சம்பவம் போன்றவற்றில் கிடைக்கின்ற தங்க ஆபரணங்களை தம்பி தனது தனிப்பட்ட தேவைக்காக விற்பனை செய்து வருவது பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.அத்துடன் குறித்த திருட்டினை 40 வயதுடைய சந்தேக நபரான பெண் ஏற்கனவே தனது சொந்த தேவைக்காக தன்னால் அடகு வைக்கப்பட்ட நகையை மீட்டு கொள்வதற்கு இவ்வாறு களவாடியதாக தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
நகை திருட்டில் ஈடுபட்ட குறித்த சந்தேக நபரான பெண்ணிடம் நகைகளை பெற்று விற்பனை செய்த சந்தேக நபரும் கைதாகியுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

திருடப்பட்ட தாலிக்கொடி உருக்கிய நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :