மருதமுனையின் முதல் நிருவாக சேவை விஷேட தர அதிகாரி ஏ.எச்.எம்.அன்சார் 38 வருட அரசசேவையில் இருந்து ஓய்வு.


கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர்-
ருதமுனையின் முதல் நிருவாக சேவை விஷேட தர அதிகாரி ஏ.எச்.எம்.அன்சார் ஆசிரிய சேவையில் 6 வருடங்களும்,நிருவாக சேவையில் 32 வருடங்களுமாக 38 வருட அரச சேவையில் கிழக்கு மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), சுகாதார, சுதேச வைத்திய,சமூக சேவைகள், சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை மற்றும் கிராமிய மின்சார அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி,காணி மற்றும் காணிகள் அபிவிருத்தி, திறன் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு என்பற்றில் செயலாளராக சிறப்பாகக் கடமையாற்றி 2022-12-31ஆம் திகதி ஓய்வுபெற்றார்.

இவரது பதவிக்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற முஸ்லிம்,தமிழ். சிங்கள மக்கள் எதிர்நோக்கிய பல பிரச்சனைகளுக்குத் திர்வுகளைப் பெற்றுக் கொடுத்தவர்.அத்துடன் அமைச்சுகளின் கீழ் வருகின்ற வேலைத்திட்டங்களை பாகுபாடின்றி விகிசாரத்திற்கு ஏற்ப பகிர்ந்தளித்தவர்.பெரும் தொகையான வீதிகள் புனரமைப்பு,மின்சார அபிவிருத்தி,சமூகசேவை அபிவிருத்தி மற்றும் வைத்தியசாலைகள் தரமுயரத்தல்,புனரமைத்தல்,அபிவிருத்தி என்பவற்றில் அதிக அக்கறை காட்டி செயற்பட்டவர் பலரின் பதவி உயர்வுகள்,நியமனங்கள் என பலரின் வாழ்வியலுக்கு வழிகாட்டியவர்.

இவர் ஆடம்பரம் இல்லாமல் அமைதியாக இருந்து மக்களுக்கு ஆழமான சேவையாற்றிய நிருவாக ஆளுமை.கடமையில் இல்லாத நேரத்தில் அரச வாகனத்தை பயன்படுத்தாத அரச அதிகாரி.தனது துவிச்சக்கர வண்டியிலும், மோட்டார் சைக்கிளிலுமே தனது பயணத்தை மேற்கொள்வார்.நிருவாக சேவை அதிகாரியாக இருந்து சொத்துச் சேர்க்காத நேர்மையான அதிகாரி.தனது பதவிக்காலத்தில் தனது அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசங்களில் இன.மத. வேறுபாடின்றி மக்களுக்கு சேவையாற்றியதுடன் பதவி சாராத வகையிலும் பலரின் தேவைகளை நிறைவு செய்து கொடுத்த ஆளுமை.
இவர் மருதமுனையைச் சேர்ந்த மீராலெப்பை அப்துல் ஹமீட்,முகம்மது தம்பி அவ்வா குட்டி தம்பதிக்கு மகனாக 1962ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி மருதமுனையில் பிறந்தவர்.முதலாம் வகுப்பு தொடக்கம் ஐந்தாம் வகுப்பு வரை மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்தில் கல்வி கற்று புலமைப்பரிசில் முதல் பரீட்சையில் சித்தியடைந்தவர்.ஆறாம் வகுப்பு தொடக்கம் க.பொ.த. சாதாரண தரம் வரை மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி கற்றவர்..க.பொ.த.உயர் தரத்தில் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்று உயர்தர பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதல் நிலையினைப் பெற்று 1983/1984 கல்வியாண்டுக்காக யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ நிருவாகப் பிரிவிற்கு தெரிவு செய்யப்பட்டார்.

1984ஆம் ஆண்டு காலப்பகுதில் நடைபெற்ற ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தார்.1984-12-27ஆம் திகதி ஆசிரியர் நியமனம் பெற்று ஆசிரியராக அனுராதபுரம் ஹொரோப்பொத்தான தேர்தல் தொகுதியின் வீரச்சோலை முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆசிரியராக அரச சேவைக்குள் நுழைந்தார் அங்கு ஆசிரியராக 4 வருடங்களும் நான்கு மாதங்களும் கடமையாற்றியாற்றி 1986ஆம் ஆண்டு தொடக்கம் 1989-04-18ஆம் திகதிவரை அதிபராகவும் கடமையாற்றி அங்கிருந்து விடை பெற்றார்.பின்னர் 1989-04-19ஆம் திகதியில் இருந்து 1991-04-18ஆம் திகதி வரை மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி(தேசிய பாடசாலையில்)ஆசிரியராகக் கடைமையாற்றினார்.

1990 ஆம் ஆண்டில் இலங்கை நிருவாக சேவை பரீட்சையில் சித்தியடைந்து 1991-04-19ஆம் திகதி மருதமுனையின் முதலாவது நிருவாக சேவை அதிகாரியாக தெரிவாகி அட்டாளைச்சேனை உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு உதவி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார்

பின்னர் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு 1994-09-01ஆம் திகதி உதவிப் பிரதேச செயலாளராக இணைக்கப்பட்டார்.அதைத் தொடர்ந்து 2001-10-17ஆம் திகதி பொத்தவில் பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளராக நியமனம் பெற்று கடமையாற்றிய நிலையில் 2003-07-07ஆம் திகதி கல்முனை பிரதேச செயலகத்தில் பதில் பிரதேச செயலாளராகக் கடமையாற்றி 2003-09-09ஆம் திகதி நிரந்தர பிரதேச செயலாளராக் கடமையேற்றார்.

சுனாமியின் பின்னரான பணி

கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் சுனாமியின் பின்னரான மீள் எழுச்சியின் பிதாமகன் பிரதேச செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் என்றால் அது மிகையாகாது. 2004.12.26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது கல்முனை பிரதேச செயலகப்பிரிவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் இப்பிரதேசத்தின் மீள்புனரமைப்பிற்காக இரவு பகலாக பாடுபட்டவர்.சுனாமிப் பேரலை தாக்கிய பின்னர் பாதிப்புக்குள்ளான மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து மக்களைப் பாதுகாப்பதில் அதிக அக்றை காட்டினார்.

மரணித்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து மருதமுனை,கல்முனை,நற்பிட்டிமுனை,மத்தியமுகாம்.சம்மாந்துறை போன் பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு துரிதமாகச் செயற்பட்டு நல்லடக்கப்பணியில் ஈடுபட்டார்.அத்துடன் உடனடித் தேவைகளாக இருந்த மருத்துவ சேவை,பராமரிப்பு,தற்காலிக முகாம்கள், சமைத்த உணவு,குடிநீர்,ஆடைவகைகள், மருந்துவகைகள் என்பவற்றைப் பெற்றுக் கொடுத்தார்.அத்துடன் அரசசார்பற்ற நிறுவனங்களின் ஊடாக தற்காலிக் கூடாரங்கள்,சமையல் உபகரணங்கள்.படுக்கை விரிப்புக்கள் உள்ளீட்ட மக்களுக்குத் தேவையான அனைத்துத்தேவைகளையும் பெற்றுக் கொடுத்து மக்களை ஆசுவாசப் படுத்தினார்.

வீட்டுத் திட்டங்கள்,வீதிகள் அமைத்தல்,பாடசாலைகள் நிர்மாணம், வைத்தியசாலை நிர்மாணம் மற்றும் இது போன்ற பல இன்னோரன்ன நடவடிக்கைகள் அனைத்திலும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு ஏனைய பிரதேசங்களையும் விட சிறப்பாக மீள்நிர்மாணம் செய்ய நடவடிக்கை எடுத்தார்.இதே சமயம் கல்முனை தமிழ்ப்பிரதேசத்தில் தமிழ் மக்களுக்கான காணி சம்மந்தமான விடயங்கள் மற்றும் வீட்டுத் திட்டங்கள் போன்றவற்றையும் சிறப்பாக செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை நிருமானிப்பதற்கு கல்முனை இறைவரிக் கண்டத்தில் 13 ஏக்கர் காணியையும்;,மருதமுனையின் மேற்குப் புறத்தில் மேட்டு வட்டடையில் 33ஏக்கர் காணியையும், கல்முனை இஸ்;லாமாபாத் பிரதேசத்தில் 7 ஏக்கர் காணியையும் அரசாங்கத்தால் சுவீகரித்தும்,அரச நிதியில் வாங்கியும் கல்முனை.மருதமுனை,இஸ்லாமாத்,பெரியநீலாவணை,அக்பர் கிராமம் போன்ற பிரதேசங்களில் வீட்டுத்திட்டங்கள், பாடசாலைகள், வைத்தியசாலை.கல்வி அலுவலகம் மற்றும் அரச அலுவலகங்கள் என பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார்.

பின்னர் 2007-05-17ஆம் திகதி மீண்டும் பொத்தவில் பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டார்.அங்கு 2010-05-10ஆம் திகதி வரை சிறப்பாக கடமைகளை முன்னெடுத்தார்.குறித்த காலப் பகுதியில் அக்கரைப்பற்று மற்றும் லாகுகல பிரதேச செயலகங்களிலும் பிரதேச செயலாளராக் கடமையாற்றியுள்ளார்.இதன் பின்னர் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றியாறினார்.

2011-01-01ஆம் திகதி முதல் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம்,கட்டடங்கள்,வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சிற்கு செயலாளராக நியமிக்கப்பட்டார்.அதன் பின்னர் 2015-06-05ஆம் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்)கடமையேற்று சிறப்பான வகையில் நிருவகித்தார்.2017-09-06ஆம் திகதி கிழக்கு மாகாண சுகாதார,சுதேச வைத்திய,சமூக சேவைகள், சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை மற்றும் கிராமிய மின்சார அமைச்சிற்கு செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இக்கால கட்டத்தில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு உதவிகள் மூலம் கிழக்கு மாகாண வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டது.அதன் பின்னர் 202202-07ஆம் திகதி தொடக்கம் மீண்டும் வீதி அபிவிருத்தி, காணி மற்றும் காணிகள் அபிவிருத்தி,திறன் மற்றும் நீர் வழங்கல் அமைச்சிற்கு செயலாளராக நியமிக்கப்பட்டார்.இவர் 2010-07-01ஆம் திகதியில் இருந்து இலங்கை நிருவாக சேவையின் விசேட தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டு பணியாற்றிய நிலையில் 2022-12-31ஆம் திகதி தனது அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :