கணக்கீட்டுத் தராதரங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் அரச கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு தொழில்வல்லுநர்களுக்குப் பயிற்சியளிப்பதற்கு உதவி செய்யும் அமெரிக்கா




பெப்ரவரி,16 கொழும்பு: இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (CA Sri Lanka) மற்றும் அதன் பொதுத்துறைப் பிரிவான இலங்கை பொது நிதிக் கணக்காளர்கள் சங்கம் (APFASL) என்பன இணைந்து நடத்திய இலங்கையின் அரச கணக்கீட்டுத் தராதரங்கள் 11-20 தொடர்பான ஒரு பயிற்சியில் இலங்கையின் அரச கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு தொழில்வாண்மையாளர்களின் முதலாவது குழு கலந்துகொண்டது.

வர்த்தகம், தேசிய செலவினங்கள் மற்றும் வருவாய் முடிவுகளை விரைவுபடுத்துவதற்கான பங்காண்மை (PARTNER) நடவடிக்கையின் கீழ் அமெரிக்க அரசாங்கமானது அதன் அபிவிருத்திப் பிரிவான சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் ஊடாக இப்பயிற்சிக்கு உதவி செய்தது.

மொத்தமுள்ள 600 அரசதுறை கணக்காளர்கள் மற்றும் கணக்காய்வாளர்களில் 50 பேரினைக் கொண்ட முதலாவது குழுவினர், சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப அட்டுறு கணக்கீட்டு முறையின் கீழ் நிதிநிலை அறிக்கைகளை தயாரித்து வழங்குவதற்கான ஒரு கட்டமைப்பை வழங்கும் தராதரங்கள் தொடர்பாக கற்றுக்கொண்டனர். 1,200 அரசதுறை ஊழியர்களுக்கு USAID, CA Sri Lanka மற்றும் APFASL ஆகியவற்றின் பங்காண்மையானது தரவு முகாமைத்துவம், பகுப்பாய்வு மற்றும் மூலோபாய முடிவெடுத்தல் ஆகிய விடயங்களுக்குத் தேவையான தகவல் தொழிநுட்ப அமைப்புகளை செயல்விளைவுள்ள முறையில் பயன்படுத்துவது தொடர்பாகவும் பயிற்சியளிக்கும்.

“இந்நாட்டின் நீண்டகால அபிவிருத்தி பங்காளர்களில் ஒருவராக, இலங்கையின் பொது நிதி முகாமைத்துவ நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கும், நெறிப்படுத்துவதற்கும், அதன் மூலம் பொருளாதார மீட்சிக்கான பாதையை மேம்படுத்துவதற்கும் உதவிசெய்வதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என USAIDஇன் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான செயற்பணி இயக்குநர் கெப்ரியல் கிராவ் பயிற்சியினைத் தொடங்கிவைக்கும் போது தெரிவித்தார். “முக்கிய கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு தொழில்வல்லுநர்களின் திறன்கள் மற்றும் தகுதிகளை மேலும் பலப்படுத்துவதானது, மேம்படுத்தப்பட்ட நிதிப் பகுப்பாய்வு, திட்டமிடல் மற்றும் முகாமைத்துவம் ஆகிவற்றின் ஊடாக இந்த நீண்ட கால இலக்கிற்கு பங்களிப்புச் செய்ய உதவும்”. என அவர் மேலும் தெரிவித்தார்.


APFASL இன் தலைவர் திரு.வி.கனகசபாபதி தனது ஆரம்ப உரையில் “எந்தவொரு நாட்டினதும் நீண்ட கால இலக்குகளை அடைவதற்கு வலுவான பொது நிதி முகாமைத்துவம் இன்றியமையாததாகும், எனவே, CA Sri Lankaவின் பொதுத்துறைப் பிரிவு என்றவகையில், இலங்கையில் அரச நிதி முகாமைத்துவ நடைமுறைகளை வலுப்படுத்த உதவுவதில் ஒரு ஊக்கியாக இருப்பதில் APFASL மிகுந்த பெருமிதம் கொள்கிறது. அமெரிக்க அரசாங்கம் எங்களின் முக்கியமான பணியை அங்கீகரித்துள்ளதுடன், அரசதுறை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு தொழில் வல்லுநர்கள் சிறப்பாக செயல்பட உதவுவதற்கான எங்கள் முயற்சிகளுக்கு உதவிசெய்வதை எண்ணி நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.” எனக் கூறினார்.


“எமது பொருளாதாரத்தின் பருமனுடன் ஒப்பிடுகையில், சுமார் 1.5 மில்லியன் மக்களைப் பணிக்கமர்த்தியுள்ள இலங்கையின் அரசதுறையானது அளவில் பெரியதாகக் கருதப்படுகிறது. 22 மில்லியன் மக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கு உதவக்கூடிய திறவுகோலையும் இந்தத் துறையே கொண்டுள்ளது. மிகச்சிறப்பான பொது நிதி முகாமைத்துவமானது இந்த முக்கியமான நோக்கத்தை அடைவதிலும், அரசதுறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதிலும் மிகமுக்கிய பங்கினை ஆற்றும். பொருளாதாரத்திற்கு செயல்விளைவுள்ள முறையில் பங்களிப்புச் செய்வதற்கு அரசதுறைக்கு உதவி செய்வதற்கு கணக்காளர்களின் தேசிய அமைப்பு என்றவகையில், CA Sri Lanka மற்றும் APFASL என்பன உறுதிபூண்டுள்ளன. USAID உடன் இணைந்து இந்த முக்கிய நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்தமையானது இந்த தீர்க்கமான இலக்கை அடைவதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.” என CA Sri Lankaவின் துணைத் தலைவர் திரு.ஹேஷன குருப்பு தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி மற்றும் மேம்படுத்தப்பட்ட சர்வதேச வர்த்தகம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் தொலைநோக்கிற்கு உதவியாக வர்த்தகத்தை எளிதாக்குவதற்கும் பரந்த அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்கான அரசின் வினைத்திறனை வலுப்படுத்துவதற்கும் USAID இன் PARTNER செயற்திட்டம் உதவுகிறது. இந்த செயற்திட்டம் ஆரோக்கியமான, கல்வியறிவுள்ள மற்றும் தொழில்புரியும் சனத்தொகையொன்றை ஊக்குவிப்பதற்காக அமெரிக்க மற்றும் இலங்கை மக்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலைத்திருக்கும் பங்காண்மையின் அங்கமொன்றாகும். USAID இன் பணிகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு, தயவுசெய்து usaid.gov/Sri-Lanka இனைப் பார்வையிடவும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :