பவளவிழா சுதந்திர தினத்தின் முக்கியத்துவம்.



சுதந்திர இலங்கையின் 75வது சுதந்திரதினம் 04.02.2023 இன்றாகும். அதாவது பவளவிழா கொண்டாடப்படுகிறது.
இலங்கைமாதா மூன்று தசாப்த காலம் கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சின்னாபின்னமாக்கப்பட்டு இன்று ஓரளவு நிம்மதிப்பெருமூச்சு விடும் நிலைக்கு மாறியுள்ளாள். அதற்கு அப்பால் கொரோனா பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் மேலும் நலிவடைந்துள்ளது.

இன்று நிலவுவது நிரந்தர சமாதானமா? இல்லையா? என்பது ஒருபுறம்..

சரி அதற்கான பூரண சுதந்திரம் நிலவுகின்றதா என்றால் அதுவும் கேள்விக்குரிய தொன்றாகிறது. எனவே ஒவ்வொரு இலங்கையனும் நிரந்தர சமாதானத்திற்காக மேலும் பலதூரம் பயணிக்கவேண்டியுள்ளது என்பது மட்டும் நிதர்சனமான உண்மையாகும்.

சுதந்திர தினம் என்பது ஒரு நாட்டுக்கு மிக முக்கியமானதொரு தினம் ஆகும். அதுவும் 75ஆண்டுகள் என்பதால் மிகவும் முக்கியமானது.

சுதந்திரம் என்பதன் பொதுவான பொருள் என்னவென்று ஆராய்ந்தால் அந்நாட்டு மக்களின் அடிமை நிலை நீங்கி மக்களின் உரிமைகள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதே ஆகும்.

எமது தாய்த் திருநாடான இலங்கைத் திருநாடு சுதந்திரம் பெற்று இன்றோடு 75 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றது.

பாடசாலைகள் வியாபாரத் தலங்கள் உட்பட அனைத்து அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு மக்கள் அனைவரும் இந்த மாபெரும் தினத்தை கொண்டாடுகின்றனர்.

வீடுகள், வாகனங்கள், வியாபார நிறுவனங்களில் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு இம் மாபெரும் தேசிய வைபவம் கொண்டாடப்படுகிறது.

1948.02.04 அன்று இலங்கைக்கு பிரித்தானிய ஆட்சியினால் சுதந்திரம் வழங்கப்பட்டது. எமது நாட்டின் அடிமைக் கோலம் நீங்கியது. மக்கள் அனைவரது அடிமைக் கோலம் நீங்கப் பெற்று அவர்களது கோரிக்கைகள் மக்களின் உரிமைகள் என்பன நிறைவேற்றப்பட்டது.

எமது தாய்த்திருநாடான இலங்கைக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த அன்றைய சுதந்திரப் போராட்டத் தியாகிகளை, வீரர்களை எம் மண்ணின் மைந்தர்களை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அவர்களை நினைவு கூருவதற்கும் இன்றைய சுதந்திர தினமானது ஏற்ற தினமாகவே அமைகிறது.

தாய்நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே அந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளிடம் காணப்பட்டது. அவர்கள் அன்று எடுத்த முயற்சியின் விளைவாகவே இன்று இலங்கை சுதந்திரமடைந்து ஒரு குடியரசு நாடாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அன்றைய சுதந்திர வீரர்கள் தமக்குள் எந்தவித இன மத பேதமின்றி நாம் அனைவருமே இலங்கைத் தாயின் மைந்தர்கள் என்ற ரீதியில் போராடியதால் மட்டுமே சுதந்திரத்தை எமது நாட்டிற்கு பெற்றுத்தர முடிந்தது.

சுதந்திரப் போராட்டத் தியாகிகள் கொண்ட மன உறுதி, ஒருமைப்பாடு சுதந்திர தாகம் இவை அனைத்துமே இனி வரும் சந்ததியினருக்கும் ஒவ்வொரு இலங்கையருக்கும் இருக்க வேண்டியதாகும்.

மேலும் ஒவ்வொரு இலங்கைக் குடிமகனும் தன் நாட்டை, தனது தாய் மண்ணை நேசிப்பவனாகவும் அதற்கு மரியாதை செலுத்துபவனாகவும் இருப்பது எமது நாட்டிற்கு பெருமை தரும் ஓர் விடயமாகும்.

இலங்கை மிகப் பழைமையான வரலாறு கொண்ட ஒரு நாடாகும். இயற்கை எழில் மிக்க ஒரு நாடாகவே அன்று முதல் இன்று வரை காணப்பட்டு வருகிறது.

இலங்கையில் இயற்கை எழிலோடு தேயிலை, தென்னை, இறப்பர் பயிர்ச் செய்கைகள் இடம்பெற்று வருகின்றன. இலங்கையானது அக்காலத்தில் முக்கிய வர்த்தக கேந்திர நிலையமாகவும் செயற்பட்டு வந்தது. இங்கு இயற்கைத் துறைமுகங்கள் காணப்படுகின்றன. மேலும் இங்கு கறுவா, ஏலம் போன்ற பல வாசனைத் திரவியங்களும் காணப்பட்டமையால் அந்நியர்களின் பார்வை இலங்கை மீது பதிந்தது.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர். ஆங்கிலேயரின் வருகையின் காரணங்கள் தங்களது மதத்தைப் பரப்புவதும் வர்த்தகமும் ஆகும். இலங்கையைக் கைப்பற்றினால் வர்த்தக நடவடிக்கைகளை செம்மையாக நிறைவேற்றலாம் என்ற எண்ணம் அவர்களிடம் காணப்பட்டது. அவர்கள் இலங்கையைக் கைப்பற்றி ஆட்சி நடத்தினர்.

இலங்கை கைப்பற்றப்பட்டதும் எமது நாடு அடிமைத்தனத்தினுள் சிக்கியது. மக்களின் கோரிக்கைகள் உரிமைகள் பிரித்தானிய அரசினால் மறுக்கப்பட்டன. மக்கள் அடிமைப் படுத்தப்பட்டனர். எமக்கு சுதந்திரமே கிடையாதா? என்று மக்கள் ஏங்கித் தவித்தனர். அந்த வேளையில் தான் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் தோன்றினர். இவர்கள் எழுத்து மூலம், பல பத்திரிகைகள் மூலம் சுதந்திர பிரசாரம் செய்தனர். இவ்வாறு இவர்கள் எடுத்த விடாமுயற்சியின் பலனாக 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கை சுதந்திரம் பெற்றது.

இந்த சுதந்திர தினத்தை முப்படைகளின் மரியாதைகளோடு நாம் கொண்டாடி வருகிறோம். நாம் எமது நாட்டின் மீது அக்கறை கொண்ட நற்பிரஜைகளாக தேச பக்தி கொண்டவர்களாக என்றும் வாழ்வோமாக!


விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :