ரமழான் என்பது மறுமை வாழ்வுக்காக அதிகமதிகம் நன்மைகளை செய்துகொள்ளும் பருவ காலமாகும். இக்கால கட்டத்தில் அல்லாஹ்வின் அருள், பாவமன்னிப்பு, நரக விடுதலை போன்ற நற்காரியங்கள் செய்து ஒரு பர்ழுக்கு 70 பர்ழுடைய நன்மையையும், ஒரு ஸூன்னத்திற்கு ஒரு பர்ழுடைய நன்மையையும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு மருதமுனை ஐம்இய்யதுல் உலமா அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநலன்சார் அமைப்புக்களின் சம்மேளனம் நேற்று முன்தினம்(26) மாலை மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசலில் மருதமுனையில் செயற்படும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் அதில் கற்பிக்கும் ஆசியர்களுடனான ஓர் முக்கிய கலந்துரையாடலும் இப்தார் நிகழ்வும் சம்மேளன தலைவர் எப்.எம். அஹமட் அன்ஸார் மௌலானா (நழீமி) தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் உட்பட மருதமுனை ஐம்இய்யதுல் உலமா அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநலன்சார் அமைப்புக்களின் சம்மேளன பிரதிநிதிகள், தனியார் கல்வி நிலையங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் ஆசியர்கள் கலந்து கொண்டு கல்வி மற்றும் மார்க்க விடயங்களை ஆராய்ந்து முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினர். அதில் ரமழான் நோன்பு விடுமுறையை இபாதத் செய்வதற்கும், ஆன்மீக மேம்பாட்டிற்கும் பயன்படுத்த வேண்டியிருப்பதால் சகல டியூஷன் வகுப்புகளையும் லுஹர் தொழுகைக்கு (12.00 மணிக்கு) முன் முடித்து மாணவர்களின் நல்லொழுக்க செயற்பாடுகளுக்கு முக்கியத்துவமளிப்பது என்றும் பிந்திய 10 நோன்பில் சகல டியூஷன் வகுப்புகளையும் ரத்துசெய்து இபாதத் செய்வதற்கும், ஆன்மீக மேம்பாட்டிற்கும் பயன்படுத்த முழுமையாக ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் சகல தரப்பினரும் ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைத்ததுடன் மார்க்க விடயங்களுக்கு முன்னுரிமையளித்து குறித்த தீர்மானத்தை நிறைவேற்றுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த விடயங்களை செய்ய முழுமனதுடன் முன்வந்த தனியார் கல்வி நிலையங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரிய சமூகத்தினருக்கும் குறித்த நிகழ்வில் இப்தார் ஏற்பாடுகளை செய்திருந்த மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் எம்.ஐ.எம். முஹர்ரப் அவர்களுக்கும் மருதமுனை ஐம்இய்யதுல் உலமா அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநலன்சார் அமைப்புக்களின் சம்மேளனம் நன்றிகளை தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment