சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உப தலைவராகவும், சாய்ந்தமருது ஸகாத் நிதிய தலைவராகவும் நீண்டகாலம் சேவையாற்றிய சாய்ந்தமருதூரின் மூத்த உலமா ஓய்வுபெற்ற பிரதியதிபர் அல்ஹாஜ் யூ.எல்.எம். காஸிம் மௌலவி அவர்கள் சனிக்கிழமை மாலை காலமானார்.
இவர் மாளிகைக்காடு கமு/கமு/அல்- ஹுசைன் வித்தியாலய பிரதியதிபராக இருந்து அப்பாடசாலையின் வளர்ச்சியிலும், பின்தங்கிய மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்க மேம்பாட்டிலும் முழுமையாக தன்னை அர்ப்பணித்திருந்தார். ஓய்வுபெற்ற சாய்ந்தமருதின் மூத்த உலமாவான அல்ஹாஜ் யூ.எல்.எம். காஸிம் மௌலவி அவர்கள் பிரதேசத்தின் மார்க்க கல்வியை மேம்படுத்த தஃவா இஸ்லாமிய கலாபீடத்திலும் முன்னின்று தலைமை வகித்து அர்ப்பணிப்புடன் பாடுபட்டார். சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உபதலைவராக மட்டுமின்றி அகில இலங்கை உலமாக்கள் சபை சாய்ந்தமருது கிளையிலும் தலைவராக, செயலாளராக இருந்து தனது மார்க்க பணியை சிறப்பாக செய்துள்ளார்.
சாய்ந்தமருது ஸகாத் நிதிய தலைவராக நீண்டகாலம் சேவையாற்றிய அவர் மக்களுடன் இனிமையாக பழகி மக்களின் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதில் முன்நின்றதுடன் இணைக்க சபையிலும் சிறப்பாக பணியாற்றி நீதியை நிலைநாட்டி பிணக்குகளை இருசாராரும் பொருந்திக்கொண்டு ஒற்றுமையாக செல்லுமளவுக்கு தீர்ப்புக்களை வழங்கி மக்களிடம் நன்மதிப்பை பெற்றிருந்தார்.
எல்லோருடனும் இனிமையாக பழகும் இவரின் மரணச்செய்தியறிந்து பெருந்திரளானோர் ஜனாஸா வீட்டை வந்தடைந்திருந்தனர். சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் சாய்ந்தமருது தக்வா மையவாடியில் அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
பள்ளிவாசல்களின் இமாமாக, பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களின் நிர்வாகியாக, ஆசிரியராக, பிரதியதிபராக, சமூக அமைப்புக்களின் பிரதானியாக மற்றும் சிறந்த உலமாவாக அவர் சமூகத்தின் பால் நிறைய சமூக சேவைகளை செய்துள்ளார். அன்னாரின் மரண செய்தியறிந்து உலமா சபையினர், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல், மாளிகைக்காடு அல்- ஹுசைன் வித்தியாலய பழைய மாணவர் சமூகம், சிவில் அமைப்புகள், அரசியல்பிரமுகர்கள் எனப்பலரும் இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment