கடந்த காலங்களில் நாம் விட்ட தவறுகளை தொடர்ந்தும் விட்டுக்கொண்டு பொய்யான வாக்குறுதிகளுக்கும், ஏமாற்று வேலைகளுக்கும் இனியும் சோரம் போனால் நமது எதிர்காலம் கேள்விக்குறியாகும். எமது வாக்குகளினால் நாம் தெரிவுசெய்யும் நமது பிரதிநிதிகள் எமது பிரச்சினைகள், தேவைப்பாடுகள் தொடர்பில் நன்றாக தெரிந்தவர்களாகவும் எதிர்கால சந்ததியினருக்கு தேவையான திட்டங்களை தீட்டக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பிலான காரைதீவு பிரதேச சபை வேட்பாளர் யூ.எல்.என். ஹுதா உமரின் தலைமையில் மாளிகைக்காட்டில் இடம்பெற்ற பெண்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில், எமது மக்களின் தேவைகள் என்ன என்பதும் அவர்களின் எதிர்காலம் என்ன என்பதும் தெரியாமலே தமது காலத்தை கடத்தியவர்களை நாம் நிராகரிக்க வேண்டும். எங்களின் வேட்பாளர்கள் சமூக பற்றுள்ளவர்கள், எதிர்கால சந்ததிகள் பற்றிய கவலையை உடையவர்கள்.
எங்களை அரசியலிலிருந்து ஓரங்கட்டவும், இல்லாமலாக்கவும் பல்வேறு வேலைத்திட்டங்களை கடந்த காலங்களில் பலரும் முன்னெடுத்தபோது எங்களின் எண்ணங்கள் உண்மையாக இருந்ததால் தாய்மார்களாகிய நீங்கள் நோன்பு நோற்று இறைவனிடம் கையேந்தி பிராத்தித்தீர்கள். இறைவன் எங்களை பாதுகாத்தான். நமது எண்ணங்கள் தூய்மையாக இருந்தால் இறைவன் பாதுகாப்பான். எமது மக்களை வழிநடத்த தூய்மையான அரசியல்வாதிகள் அரசியலின் ஆரம்ப படியிலிருந்தே உருவாக்கப்பட வேண்டும். அப்படியானவர்களையே நாங்கள் உங்கள் முன்னால் கொண்டுவந்துள்ளோம். ஹுதாவை வெற்றிபெற செய்யுங்கள். உங்களுக்கும் எனக்குமான பாலமாக இருந்து மாளிகைக்காட்டு மண்ணுக்கான தேவைகளை, உரிமைகளை பெற்றுத்தருவார் என்றார்.
இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளரும், கட்சியின் பிரதித்தேசிய அமைப்பாளருமான எம்.ஏ. அஸ்ரப் தாஹீர், உயர்பீட உறுப்பினர்களான மான்குட்டி ஜுனைதீன், மாவட்டகுழு செயலாளர் ஆசிரியர் ஏ.சி.ஏ. காதர், பொருளாளர் தொழிலதிபர் கலீல் முஸ்தபா உட்பட அகில இலங்கை மக்கள் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment