அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் சாலிஹ் அபுல் கலீஸ் 15.03.2023 தொடக்கம் கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளராக அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மருதமுனை அல்ஹம்றா மகாவித்தியாலயம், கல்முனை கார்மேல் பற்றிமா கல்லுாரி போன்றவற்றின் பழைய மாணவரான அபுல் கலீஸ் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 1989களில் விவசாய விஞ்ஞானப் பட்டத்தை நிறைவு செய்து, அங்கேயே விலங்கு விஞ்ஞான துறையில் ஆராய்ச்சி உதவியாளராக சிறிது காலம் பணியாற்றினார். பின்னர் அதே காலப் பகுதியில் உதவி ஆசிரியராக நியமனம் பெற்று கல்முனை மஹ்மூத் பெண்கள் கல்லுாரியில் தாவரவியல் பாடத்தை சுமார் இரண்டரை வருடங்கள் மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். பின்னர் போட்டிப் பரீட்சை மூலம் இலங்கை விஞ்ஞான சேவை, விவசாய சேவை போன்றவற்றிற்குள் உள்வாங்கப்பட்ட இவர், விவசாயத்தில் இருந்த பெரும் நாட்டம் காரணமாக
விவசாய சேவையை தேர்ந்தெடுத்தார்.
அம்பாறை மாவட்டத்தின் விவசாய விரிவாக்கல் பகுதியின் உதவி மாவட்ட பணிப்பாளராக 1992ல் முதல் நியமனம் பெற்றுக்கொண்டார். 1996ல் மகா இலுப்பள்ளம விவசாய ஆராய்ச்சி, நிலையத்தின் வயற்பயிர்கள் அபிவிருத்தி ஆராய்ச்சி நிறுவனத பிரிவின் உதவிப் பணிப்பாளராகவும் பணி செய்தார். பின்னர் 1997ல் மீண்டும் அம்பாறை மாவட்டத்திற்கு விவசாய உதவிப் பணிப்பாளராக மாற்றம் பெற்றார். 2009 ம் ஆண்டு பிரதி விவசாய பணிப்பாளராக பதவி உயர்வுபெற்று கண்டி, ஹசலக பிரிவில் 2 வருடங்கள் கடமையாற்றினார். பின்னர் அம்பாறை மாவட்டத்திற்கு அதே பதவிக்கு மாற்றம்பெற்றார். பின்னர் 2017ம் ஆண்டு அம்பாறை மாவட்டத்திற்கான விவசாய பணிப்பாளராக பதவி உயர்வு பெற்ற அபுல் கலீஸ் , 2020 -21 காலப் பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பதில் விவசாய பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். அத்துடன் குண்டசாலை விவசாய கல்லுாரியின் வருகைதரு விரிவுரையாளராகவும் குறிப்பிட்ட காலம் கடமையாற்றியுள்ளார்.
உள்நாட்டிலும், இந்தோனேசியா, சீனா (இரு தடவைகள்), மலேசியா, தென்கொரியா போன்ற நாடுகளிலும் விவசாய தொழில்நுட்ப, விவசாய விரிவாக்கல் துறைகளில் அவரது சேவைக் காலத்தில் பல்வேறுபயிற்சிகளைப் பெற்றுக் கொண்ட அபுல் கலீஸ் சுமார் இருபதிற்கும் மேற்பட்ட விவசாய நுால்கள், பிரசுரங்கள், வெளியீடுகள் போன்றவற்றை வெளியிட்டுள்ளார். அத்துடன் சிங்கள மொழியிலிருந்து பல வெளியீடுகளை சரளமான, இலகுவான மொழிநடையில் தமிழில் மொழி பெயர்த்து இலங்கை விவசாய தமிழ் உலகிற்கு சேவையும் செய்துள்ளார். அத்துடன் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி விவசாய விரிவாக்கல், தொழில்நுட்ப அறிவுகள் விவசாயிகளிடம் போய்ச் சேர்வதற்கும் காரணமாக இருந்துள்ளார்.
0 comments :
Post a Comment