அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் விவசாய நடவடிக்கைகள் முடிவுற்று அறுவடை இடம்பெற்று வருவதனால் யானைகளின் தொல்லையும் அதிகரித்துள்ளது. வயல்களினூடாக ஊர்களை நோக்கி யானைகளின் வருகை உள்ளதனால் உயிர்பலிகளும் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
யானைகளின் வருகை தொடர்பிலும், யானைகளின் மூலம் ஏற்படும் பாதிப்புக்களை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹீருக்கும், இலங்கை அடிப்படைமனித உரிமைகள் அமைப்பினருக்குமிடையில் சம்மாந்துறை பிரதேச சபை கட்டிடத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் இலங்கை அடிப்படை மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஈ.எம்.பி. டேனியல், கிழக்கு மாகாண பணிப்பாளர் எம். நளீர் அபூபக்கர், அம்பாறை மாவட்ட பணிப்பாளர் எஸ். அரூண் உட்பட பலரும் கலந்துகொண்டு சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹீருடன் யானைகளின் பாதிப்புகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடினர்.
இதன்போது சம்மாந்துறை, நெய்னாகாடு, மல்வத்தை, மஜீத்புரம், நாவிதன்வெளி, மாவடிப்பள்ளி போன்ற பிரதேசங்களில் யானைகளினால் ஏற்படுத்தப்படும் தொல்லைகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டதுடன் பாதிப்புக்களை கட்டுப்படுத்த தன்னால் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விளக்கிய தவிசாளர் மாஹீர் தொடரந்து எதிர்காலத்தில் தான் இது தொடர்பில் எடுக்கவுள்ள நடவடிக்கைகளை இலங்கை அடிப்படைமனித உரிமைகள் அமைப்பினருக்கு விளக்கினார்.
0 comments :
Post a Comment