அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கடலோர பிரதேசங்கள் கடந்த பல மாதங்களாக கடுமையான கடலரிப்புக்குள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நிந்தவூர் பிரதேசத்தின் கிழக்கு எல்லையானது முழுமையாக கடற்கரை பிரதேசமாக காணப்படுவதனால் தொடர்ச்சியாக இப்பிரதேசம் கடலரிப்புக்குள்ளாகி வருகின்றமையினால் குறித்த பிரதேசம் முழுமையாக கடலினால் காவு கொள்ளப்படும் அபாயம் தோன்றியுள்ளதாக இப்பிரதேசத்து பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நிந்தவூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சில பகுதிகளுக்கு பாரிய கருங்கற்களை இடுவதன் மூலம் வேகமான அலைகளினை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அலை முறிப்பு தடைகள் (வேவ் பிரேக்கர்ஸ்) மூலம் அலையின் வேகம் குறைக்கப்பட்டு கடலரிப்பு சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் கருங்கற்கள் இடப்படாத ஏனைய பிரதேசங்கள் குறிப்பாக அட்டப்பள்ளப் பிரதேசத்தில் காணப்படுகின்ற தென்னந் தோட்டங்கள் முழுமையாக கடலுக்குள் சங்கமிக்கின்ற நிலைமை ஏற்பட்டு வருவதாக அப்பிரதேசத்து மக்கள் அங்கலாய்கின்றனர்.
இவ்வாறு பல்வேறு இடங்களிலும் கடலரிப்பு தொடர்வதனால் இப்பிரதேசத்து மக்கள் பாரிய பொருளாதார நஷ்டத்திற்குள்ளாகியுள்ளனர் என்பது அதிகாரிகளினதும் அரசாங்கத்தினதும் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என இப்பிரதேசத்து பொதுமக்கள் வேண்டி நிற்கின்றனர்.
சுமார் 06 கிலோமீட்டர் கடல் எல்லையினை கொண்ட இப் பிரதேசமானது மிக அழகான கடற்கரையினை கொண்டிருந்ததன் மூலம் சுற்றுலாப் பயணிகள் மூலம் அதிக வருமானத்தை சிறு தொழில் முயற்சியாளர்கள் ஈட்டி வந்திருந்தமையும் குறிப்பிடக் கூடிய ஒரு விடயமாகும். இன்று குறித்த கடலரிப்பின் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை இப்பிரதேசத்தில் வெகுவாக குறைவடைந்துள்ளமை அவதானிக்கத்தக்கது.
கரையோர பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் இதர அரச அதிகார சபைகள் குறித்த கடலரிப்பினை தடுக்கும் வகையில் பாரிய கருங்கற்களை கரையோரங்களில் இடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பகுதியளவில் நிறைவேற்றப்பட்டுமுள்ளது.
இருந்தபோதிலும் தொடர்ச்சியாக இப்பிரதேசம் கடலரிப்புக்கு உள்ளாகி வருகின்றமையால் தங்களது ஜீவனோபாயத் தொழிலான மீன்பிடித் தொழிலினை தொடர முடியாமல் இருப்பது இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தில் பாரிய பிரச்சினையினை ஏற்படுத்தி உள்ளது.
கடலரிப்பின் காரணமாக தமது வாழ்வாதாரத் தொழிலாக மீன்பிடித் தொழிலை பல நெடுங்காலமாக செய்து வருகின்ற மீனவர்கள் தங்களது மீன்பிடி உபகரணங்கள் குறிப்பாக வள்ளங்களினை கரையோரங்களில் நிறுத்தி வைப்பதற்கு முடியாமல் திண்டாடுகின்றனர்.
மேலும் கரையோரங்களில் நிர்மானிக்கப்பட்டிருந்த மீனவர் தங்குமிட குடிசைகள் மற்றும் தென்னை மரங்கள், கிணறுகள் என அனைத்தும் கடலால் அடித்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். எனவே குறித்த கடலரிப்பினை உடனடியாக தடுக்கும் வகையில் உரிய அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பிரதேசத்து பொதுமக்கள் வேண்டி நிற்கின்றனர்.
0 comments :
Post a Comment