துரதிர்ஷ்டவசமாக இலங்கையில் தேர்தல் மைய அரசியலை செய்து வருவதனால் இன்று நாடு குட்டிசுவராக மாறி இருக்கின்றது. இதிலிருந்து மீள வேண்டுமாக இருந்தால் நாங்கள் தேசத்தை மையமாக வைத்து தேச மைய அரசியலை செய்து அனைவரும் ஒன்றுபட்டு நாட்டை கட்டி எழுப்ப வேண்டும்.
இவ்வாறு காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான எஸ் எம் எம்.முஸரப் தெரிவித்தார் .
காரைதீவுப்பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஐந்து வருடங்களுக்கு பிற்பாடு நேற்று(15) புதன்கிழமை காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் வழிகாட்டலில் முஷரப் எம்.பி. தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது .
அச்சமயம், த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் , உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்திபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் பி .இராஜதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள் .
அங்கே பாராளுமன்ற உறுப்பினர் முஷரப் மேலும் பேசுகையில்.
ஜனாதிபதியின் சிபார்சிலே அம்பாறை மாவட்டத்தில் 6 பிரதேச செயலகங்களுக்கு என்னை ஒருங்கிணைப்பு குழுத் தலைவராக நியமித்துள்ளார்கள். என்னை பொறுத்தவரையிலே அபிவிருத்திக்கு முன்னர் இனங்களிடையே பரஸ்பரம் ஒற்றுமை நிலவ வேண்டும். பிரச்சனைகளை விடுத்து தீர்வை வழங்கக்கூடிய எதையும் செய்ய வேண்டும்.
நாடு ஊன்று சொல்லொணா பின்னடைவை சந்தித்து இருக்கின்றது. பொருளாதார நெருக்கடியை சந்தித்து இருக்கின்றது. இது தனி நபர் வாழ்விலும் பாரிய பாதிப்பை அளித்து இருக்கின்றது. அரசியல் தேவைக்காக நாட்டை குட்டிச்சுவர் ஆக்கி இருக்கின்றார்கள். அதனால் வரிச்சுமை பொருள் விலையேற்றம் என்பன தலைவிரித்து ஆடுகின்றது.
சகல இனங்களும் தேச அபிமானத்துடன் வாழ்ந்தால் இந்த பிரச்சனையிலிருந்து மீளலாம். தேச மைய அரசியல் வேண்டும். தேர்தலுக்காக இனவாதத்தை பேசி அரசியல் செய்வதால் நீண்ட காலமாக பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடரும் பிரச்சினை பேசி பேசி காலங்கடத்தாமல் தீர்வை நோக்கி நாங்கள் காலத்தை நகர்த்த வேண்டும். பைத்தியக்காரன் கத்துகின்றான் என்பதற்காக அதற்கு சிகிச்சைசெய்கின்ற வைத்தியரும் கத்த முடியாது .ஆனால் சில இடங்களில் பைத்தியக்காரனும் கத்துகிறான். வைத்தியரும் கத்துகிறார்.
.எனவே நாங்கள் பிரச்சினையை பேசிப் பேசி காலத்தை கடத்தாமல் தீர்வை நோக்கி கூட்டங்களை நடத்த வேண்டும். கூட்டத்தில் அழைப்பு விடுக்கின்ற அனைத்து அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒழுங்காற்று விசாரணை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் . என்றார்.
கூட்டத்தில் திணைக்களத் தலைவர்கள் அமைப்பின் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.
பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டன. குழுக்கள் அமைத்து தீர்வு காண சில பிரச்சனைகள் இணக்கம் காணப்பட்டன.
0 comments :
Post a Comment