எவருக்கும் அஞ்சாமல் இறைவனது பொருத்தத்தை மட்டும் நாடி, தக்வாவுடன் ஆன்மீக, சமூகப் பணியாற்றிய யூ.எல்.எம்.காஸிம் மெளலவி அவர்களின் மறைவு எமது சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசங்களுக்கு பேரிழப்பாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை மற்றும் சம்மாந்துறை தொகுதிகளுக்கான பொறுப்பாளரும் அக்கட்சியின் கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்பாளருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
எமது சாய்ந்தமருது பிரதேசத்தின் மிக முக்கிய முதுசங்களில் ஒன்றாகத் திகழ்ந்த காஸிம் மெளலவி இந்த மண்ணுக்கு விடைகொடுத்துச் சென்றாலும் அவரது சேவைகளை இந்த மண் என்றும் நினைவு கூறிக்கொண்டே இருக்கும்.
அரச பாடசாலையில் ஓர் ஆசிரியராகவும் தனது வீட்டை அல்குர்ஆனை போதிக்கின்ற ஒரு தளமாக செயற்படுத்திய முஅல்லிமாகவும் ஓர் அறபுக் கலாபீடத்தின் அதிபராகவும் நிர்வாகத் தலைவராகவும் இருந்து ஆயிரக்கணக்கான பிள்ளைகளுக்கு சன்மார்க்கக் கல்வியை கற்றுக் கொடுக்கின்ற பெரும் பாக்கியத்தை அவர் பெற்றிருந்தார்.
எமது சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் பிரதித் தலைவராக இருந்து ஊரின் முக்கிய தேவைகளை நிறைவேற்றுவதில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அவர் அர்ப்பணிப்புடன் முன்னின்று உழைத்துள்ளார்.
அத்துடன் நீண்ட காலம் பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் தலைவராக இருந்து வறிய மக்களின் துயர் துடைப்பதிலும் பெரும் பங்காற்றியுள்ளார்.
பள்ளிவாசல் நிர்வாகத்திலும் ஸகாத் நிதியத்திலும் அறபுக் கலாபீடத்திலும் ஜம்மியத்துல் உலமா சபையிலும் வேறு எந்த பொது விடயத்திலும் சரியை சரியென்றும் பிழையை பிழைதானென்றும் தைரியமாக சுட்டிக்காடி, உண்மைகளையும் நியாயங்களையும் யதார்த்தங்களையும் எவருக்கும் அஞ்சாமல் வெளிப்படையாகப் பேசுகின்ற துணிச்சலை அவரிடம் காண முடிந்தது.
இவ்வாறு சத்திய வழிநின்று பேசும்போதும் செயற்படும்போதும்
தனிப்பபட்ட முறையில் தன்மீது முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களைக் கூட கருத்தில் கொள்ளாமல் இறைதிருப்தியை மாத்திரம் எதிர்பார்க்கின்ற ஓர் ஆலிமாகவும் நிர்வாகியாகவும் தன்னை நிலைநிறுத்தியிருந்தார்.
ஊர் நலன் சார் விடயங்களுக்காக என்றும் முன்னிற்கின்ற காஸிம் மெளலவி அவர்கள், எனது அரசியல் பயணத்திலும் நல்ல பல ஆலோசனைகளை வழங்கி, பல்வேறு வகையிலும் ஒத்துழைப்புகளை வழங்கியிருந்தார்.
எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் இபாதத்துகளையும் சேவைகளையும் பொருந்திக் கொண்டு, மேலான சுவனத்தை வழங்குவானாக. ஆமீன்.
0 comments :
Post a Comment