உலகில் முதலாம் தரம் முதல் பல்கலைக்கழகம் வரை முற்றிலும் இலவசக் கல்வி வழங்கும் முதன்மை நாடு இலங்கையாகும் என கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஸீ.எம்.முஸ்இல் தெரிவித்தார்.
திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியின் முதலாம் தர மாணவர் வரவேற்பு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கல்லூரி அதிபர் கே.ரவிதாஸ் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் கும்புறுப்பிட்டி மெதடிஸ்ட் மிஸன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் எஸ்.கீதபொன்கலன், உவர்மலை கண்ணகி அம்மன் ஆலய பிரதம குரு சிவசிறி எஸ்.ஐ.சாந்தமூர்த்தி குருக்கள், அன்புவளிபுரம் தேவாலய அருட்தந்தை சுகுனேந்திரன் குரூஸ் ஆகியோரும் ஏனைய அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
இலங்கையில் முதலாம் தரம் முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி வழங்கப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக சகல பாடசாலை மாணவர்களுக்கும் இலவச பாடநூல், இலவசச் சீருடை என்பன வழங்கப்படுகின்றன. இதனை விட தேவையான மாணவர்களுக்கு
இலவச மதியஉணவு, சப்பாத்து என்பன வழங்கப் படுகின்றன. மாணவர்களுக்கு இப்படியான ஒட்டுமொத்த சலுகைகளை வழங்கும் நிலை வேறு எந்த நாட்டிலும் இல்லை.
நாடு தற்போது பொருளாதார நெருக்கடியில் வீழ்ந்து பொருள் விலையேற்றம், கட்டணங்கள் அதிகரிப்பு என்பன இடம்பெற்றாலும் அரசாங்கம் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாடநூல், சீருடை போன்றவற்றில் எந்தக் குறையும் வைக்கவில்லை. கடதாசி பற்றாக்குறை நிலவிய காரணத்தினால் புத்தகங்கள் அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டாலும் ஏற்கனவே வழங்கப்பட்டதைப் போன்று சகல பாடப்புத்தகங்களையும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதேபோல சீருடை விநியோகத்துக்கும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில வேளை இவை மாணவர்களுக்கு வந்து சேர்வதில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும் அனைத்தும் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும். தற்போது வழங்கப்படும் மதிய உணவை பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு விஸ்தரிப்பதற்கும் தேவையான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் ஏனைய நாட்டு மாணவர்களோடு ஒப்பிடுகையில் இலங்கை மாணவர்கள் அதிஸ்டசாலிகள் என்றே சொல்ல வேண்டும்.
கல்வித் திட்டமும் தேவைக்கேற்ப காலத்துக்கு காலம் மாற்றப்பட்டு வருகின்றது. இம்மாதம் 30 ஆம் திகதி முதல் முதலாம்தர மாணவர்களுக்கு செயற்பாட்டு ரீதியான வாய்மொழி ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் சகல மாணவர்களும் முதலாந்தரத்திலிருந்து ஆங்கிலம் தொடர்பான அடிப்படை அறிவைப் பெற்றுக்கொள்வர்.
திருகோணமலை நகரைப்பொருத்தவரை வேகமாக முன்னேறி வரும் பாடசாலைகளுள் உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியும் ஒன்று. இங்கு நல்ல அதிபரும் ஆசிரியர் குழாமும் இருப்பதே இதற்கு காரணம். இப்பாடசாலை பொதுப் பரீட்சைகளில் நல்ல பெறுபேறுகளைப் பெற்று வருகின்றது. இதனால் இந்தப் பாடசாலையில் பிள்ளைகளைச்சேர்க்க பெற்றோர் முன்னுரிமை கொடுத்து விண்ணப்பிக்கின்றனர். என்றார்.
0 comments :
Post a Comment