வி.ரி.சகாதேவராஜா-
கடந்த ஐந்து வருட காலமாக கல்முனை மாநகர மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் ஏப்பமிட்டு வந்தமை தொடர்பாக சகல ஆதாரங்களுடனும் அவ்வப்போது நாம் முறையிட்டு வந்தோம். யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்பொழுது புதையலும் பூதமும் ஒன்றாக புறப்பட்டிருக்கின்றன. இனியாவது உரிய தரப்பினர் நடவடிக்கை எடுப்பார்களா?
இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான சந்திரசேகரன் ராஜன் கேள்வி எழுப்பினார்.
கல்முனையில் நேற்று திங்கட்கிழமை (13) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
அவருடன் சக உறுப்பினர்களான கதிரமலை செல்வராசா, வடிவுக்கரசு சந்திரன் ஆகியோருமிருந்தனர்.
அவர் மேலும் கூறுகையில்..
இந்த கோடிக்கணக்கிலான கையாடலுக்கு மாநகரசபை மாத்திரம் பொறுப்பு அல்ல .இது சம்பந்தப்பட்ட அனைவருமே காரணமாகும். முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன கோட்டபாய முதல் இன்றைய ஆளுநர் வரைக்கும் அவ்வப்போது தெரியப்படுத்தி வந்தோம். இதோ ஆதாரம்.
ஆனால் யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை. அப்பாவி சாதாரண ஊழியர்கள் மீது சீறிப்பாயும் கணக்காய்வாளர்களும் இந்த ஊழல் முதலைகளை விட்டுவிட்டனர். இன்று பிரச்சனை பூதாகரமாக கிளம்பி இருக்கின்றது. இதனை நாங்கள் முதலில் சொன்ன போது இனவாதம் என்றார்கள். இன்று அனைவருக்கும் உண்மை புரிந்து விட்டது. இனியாவது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்டார்.
ஐந்து மின்கம்பங்களுக்கு ஒரேநேரத்தில் ஐம்பது மின்விளக்குகள் போட்டவர்கள் இவர்கள். எழுபது மீற்றர் வீதிக்கு 5 லட்ச ருபாய்க்கு 45 பல்ப் போட்டவர்கள். மணல் சேனை வீதிக்கு கொங்கிறீட் போட்டதாக 14 லட்சருபா பணம் பெறப்பட்டிருக்கிறது. அந்த வீதியை இன்னும் தேடுகின்றோம். காணவில்லை. வடிவேலு கிணற்றைக் காணோம் என்றமாதிரி அந்த கொங்கிறீட் வீதியை யாராவது கண்டால் சொல்லுங்கள்.
முன்னாள் ஆணையாளர் முன்னாள் கணக்காளர் இன்று எங்கு இருக்கிறார்கள் என்றால் விளங்கும்.
இன்றைய ஆணையாளர் நேர்மையாக செயற்படுபவர். நியாயவாதி. அவர் வந்த பிற்பாடு இத்தகைய ஊழல் மோசடி வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக செய்து வந்த ஊழல் மோசடி எல்லாம் வெளியே வந்து விடும் என்பதற்காக முன்னர் இங்கு முறைப்படி ஆளுநரால் நியமிக்கப்பட்டு கடமையேற்க வந்த எந்திரி சிவலிங்கம் அவர்களை கடமையேற்க விடாமல் தடுத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கல்முனை மாநகர சபையினுடைய ஊழலும் அதனுடன் தொடர்புடைய உயர் அதிகாரிகளும் கல்முனைப் பிரதேசத்திற்கு செய்த துரோகத்தனத்தை சகல ஆதாரங்களுடனும் வெளிக்கொண்டு வந்தோம்.
'நீங்கள் இதே மாநகர சபையின் உறுப்பினர்.இவ்வளவு காலமும் இதுபற்றி சபையிலோ பொதுவெளியிலோ ஏன் தெரியப்படுத்த வில்லை? "என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது..
அநேகமாக அமர்வுகளில் இதுபற்றி கூறி வந்துள்ளேன். ஆனால் மேயருக்கு எதிராக வரும் இத்தகைய செய்திகளை அங்கு வரும் மேயரின் செய்தியாளர்கள் போடுவதில்லை. மேயர் தனக்கு ஜால்ரா போடும் ஒருசில செய்தியாளர்களை மாத்திரமே அழைப்பார். அதனால்தான் சபையில் நடப்பவை வெளிவருவதில்லை.
குறிப்பாக 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கல்முனை மாநகர சபையினுடைய முதல்வர் தெரிவு இடம் பெற்றது .இந்த முதல்வர் தெரிவில் தற்போதைய முதல்வருக்கு எதிராக நான் வாக்களித்திருந்தேன். அதன் எதிரொலியாக நடைபெற்ற மாதாந்த பொது கூட்ட அமர்விலே எங்களுடைய மாநகர சபையில் வரி செலுத்துகின்ற மக்களுக்கு எங்களுடைய மாநகர சபையினால் செயல்படுத்தப்பட வேண்டிய சில விடயங்கள் சம்பந்தமாக முதல்வர்களிடம் கேட்ட பொழுது 'உங்களுக்கு எந்தவித உதவியும் செய்ய முடியாது நீங்கள் எங்கு சென்றாவது இயலுமானால் பெற்றுக் கொள்ளுங்கள்" என்று அடாவடித்தனமாக பேசியதே அவருடைய அவருடைய தன்னிச்சையான இனவாத செயற்பாடு ஆரம்பித்தது .அதன் பயனாக மின் குமிழ்கள் கொள்வனவு செய்கின்றேன் என்கின்ற பெயரிலேயே மின் குமிழ் ஊழல் ஆரம்பித்தது. இந்த ஊழலை தடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை நேரடியாக அவருடைய இல்லத்திற்குச் சென்று ஊழல் சம்பந்தமாகவும், கல்முனை பிரதேசத்து தமிழ் மக்களுக்கான புறக்கணிப்பு, அபிவிருத்தி சம்பந்தமாகவும் கூறியிருந்தேன். அதன் பிற்பாடு கிழக்கு ஆளுநர், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர், அமைச்சின் செயலாளர், போன்றோருக்கும் கல்முனை மாநகர சபை ஊழல் சம்பந்தமாக எழுத்து மூலம் தெரியப்படுத்தியிருந்தேன்.
அவர்கள் ஊழலை விசாரிப்பதற்காக கணக்காய்வாளர்களை அனுப்பியிருந்தார்களே தவிர அந்தகணக்காய்வாளர்களும் கல்முனை மாநகர சபை ஊழல் கும்பலுடன் இணைந்தார்கள் என்று தான் நாங்கள் நினைக்கின்றோம் ஏனென்றால் அவர்கள் அந்த ஊழல்களை கையும் மையமாக பிடிக்கவில்லை விட்டுவிட்டார்கள். அதன் பிற்பாடு கல்முனை மாநகர சபையிலே நடைபெற்று வந்து கொண்டிருந்த ஊழல்களை ஒவ்வொரு தடவையும் நாங்கள் மேலே குறிப்பிடப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும் அதேபோன்று லஞ்ச ஊழல் ஆணைக் குழு, சிஐடி, எப் சி ஐ டி, நான்காம் மாடி, ஜென்ரல் கணக்காய்வாளர்கள். என்போருக்கு நேரடியாகச் சென்று எங்களுடைய இந்த ஊழல் சம்பந்தமான மனுக்களை நேரடியாக சென்று வழங்கினேன். இதோ ஆதாரம். அந்த ஊழல்களின் சிலவற்றை கீழே குறிப்பிடுகின்றேன்.
01. கல்முனை மாநகர சபையின் உடைய அனுமதி இல்லாமல் நன்றாக இயங்கிக் கொண்டிருந்த சபையை இடம் மாற்றம் செய்வதற்கு இரண்டு வாரத்திற்கு முன்னதாக சிசிடிவி கேமரா, a/c( குளிரூட்டி ) என்பன பொருத்தப்பட்டது. இதற்கான செலவு சபையின் உடைய அனுமதியோ நிதிக்குழுவின் உடைய அனுமதியோ பெறாமல் மேற்கொள்ளப்பட்டு அந்த இடம் மாநகர சபையின் தேவைக்கு பயன்படுத்தப்படாமல் நாசமாக்கப்பட்டன.
02. கல்முனைக்குடியிலே இருக்கின்ற நகர சபை மண்டபத்தை இரண்டு சபை கூட்டங்கள் மாத்திரை நடத்துவதற்காக இரண்டு மில்லியன் ரூபாய் பணம் செலவீடு செய்தமை சபை அனுமதி பெறாமல்.
03. சபையினுடைய அனுமதி பெறாமல் சமயா சமய ஊழியர்களை நியமித்து பல ஊழியர்கள் இடமிருந்து பணம் லஞ்சம் பெற்று வேலைக்கு அமர்த்தியமை.
ஏனையவர்களை வேலைக்குஅமர்த்தியதாக கூறி அவர்களுடைய பெயர்களை பதிவு செய்து போலி கையொப்பமிட்டு சம்பளத்தை சூறையாடியமை. இது சம்பந்தமாக தற்போதைய ஆணையாளர் இங்கு பெயரிடப்பட்டவர்களை தேடிக் கொண்டிருக்கின்றார்கள் .தெரிந்தவர்கள் அவரை நாடவும் .
04. பழைய மாநகர சபையில் முதல்வருக்காக ஒதுக்கப்பட்ட அலுவலகத்தை திருத்துவதற்காக சபை அனுமதி பெறாமல் ரூபாய் 65 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு 65 நிமிடம் கூட அந்த அலுவலகம் தேவைக்காக பயன்படுத்தப்படவில்லை என்பதனை சுட்டிக்காட்டுகின்றேன்.
05. 2019 ஆம் ஆண்டு சிட்டி பிளான் அமைச்சு ஊடாக ஒதுக்கப்பட்ட பணத்தினை கொண்டு பதினொன்றுக்கு மேற்பட்ட வீதியும் அந்த வீதிக்கான மின் குமிழ்களையும் பொருத்துவதற்காக என பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் மோசடி செய்யப்பட்டமை. நான் கூறுகின்ற அனைத்துக்கும் எங்களிடம் ஆதாரங்கள் இருக்கின்றது .அந்த ஆதாரங்களை நாங்கள் அனைவருக்கும் அனுப்பியும் இருந்தோம்.
06. 26/10/2020 நடைபெற்ற நிதி குழுவின் ஆயிரம் மின் குமிழ்கள் கொள்வனவு செய்வதற்கு நிதிக்குழுவின் உடைய சிபாரிசு செய்து சபையினுடைய அனுமதி கோரி முதல்வர் கொண்டு வந்தார். அது என்னவென்று சொன்னால் 254.58 சதத்துக்கு கொள்வனவு செய்யப்பட வேண்டிய மின் குமிழ்களை 440 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய வேண்டும் என்கின்ற தீர்மானம்.அதனை நாங்கள் எதிர்த்திருந்தோம். அதனை முதல்வருக்கு வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்குகின்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், நீதி நியாயம் மக்களுக்கு உண்மையான சேவை செய்ய வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு சபைக்குச் சென்ற உறுப்பினர்கள் எதிர்த்திருந்தோம்.
இவை போன்ற பல ஊழல்கள் சம்பந்தமாக கடந்த 2018 ஆம் ஆண்டு தொடக்கம் 2022 ஆண்டு வரை நடைபெற்ற 50 கூட்ட அமர்வுகளில் என்னுடன் சேர்ந்து ஜனாதிபதி தொடக்கம் லஞ்ச ஊழல் கமிஷன் வரையும் எங்களோடு சேர்ந்து நீதிக்காக, ஊழலுக்கு எதிராக கல்முனைகுடியில் இருந்து மாநகர சபைக்கு வருகை தந்த உறுப்பினர் அண்ணன் மனாப் மாத்திரம் செயல்பட்டாரே தவிர அனைத்து கல்முனைக்குடி மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் எதிராக எந்த எதிர் கருத்துமே கூறவில்லை.
அதனை தடுப்பதற்கு செயல்படவும் இல்லை. எம்மில் சிலரும் அவருக்கு ஜால்ரா போட்டு பட்ஜெட்டை காப்பாற்றி இருந்தனர்.இன்று அவர்கள் வாய்மூடி மௌனமாயுள்ளனர். அதாவது ஊழல் மோசடிக்கு ஆதரவாக உள்ளனர்.
எனவே ஆளுனர் தொடக்கம் கணக்காய்வாளர்கள் உயரதிகாரிகள் இப்போதாவது மௌனம் கலைத்து நீதி நியாயம் ஜனநாயகம் நிலைபெற உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். என்றார்.
எனவே ஆளுனர் தொடக்கம் கணக்காய்வாளர்கள் உயரதிகாரிகள் இப்போதாவது மௌனம் கலைத்து நீதி நியாயம் ஜனநாயகம் நிலைபெற உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். என்றார்.
0 comments :
Post a Comment