கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கோழி இறைச்சியின் விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, கோழி இறைச்சி வியாபாரிகளுடன் விஷேட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
கல்முனை மாநகர பிரதேசங்களில் 01 கிலோ கிராம் கோழி இறைச்சியானது 1600 வரை அதிகரித்த விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்தே கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கோழி இறைச்சிக் கடைகளின் உரிமையாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (18) பிற்பகல் மாநகர சபைக்கு அழைக்கப்பட்டு, விலைக் கட்டுப்பாட்டுக்கான சாதக நிலைமை குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டிருக்கிறது.
இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், கணக்காளர் கே.எம்.றியாஸ், பொறியியலாளர் ஏ.ஜே.ஹலீம் ஜௌஸி, வருமான பரிசோதகர்களான ஏ.ஜே.சமீம், எம்.சலீம், எம்.எஸ்.எம்.உபைத், எம்.ரி.சப்னம் சாஜிதா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது நோன்புப் பெருநாளை முன்னிட்டு நுகர்வோரின் நலனைக் கருத்தில் கொண்டு, சாதாரண மக்களும் கொள்வனவு செய்யும் வகையில் கோழி இறையிச்சியின் விலையை முடியுமானவரை குறைத்து விற்பதற்கு வியாபாரிகள் முன்வர வேண்டுமென ஆணையாளர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
தற்போது கோழி உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்திருப்பதால், உற்பத்தி நிறுவனங்களினால் கூடிய விலைக்கே தமக்கு கோழிகள் விநியோகிக்கப்படுவதாகவும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கேள்வி நிரம்பல் காரணமாக சடுதியாக அதிகரித்த கோழி இறைச்சியின் விலை அடுத்த சில தினங்களில் சிறிதளவு குறையும் வாய்ப்பு இருப்பதாகவும் கோழி இறையிச்சி வியாபாரிகள் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தனர்.
எவ்வாறாயினும், கோழி உற்பத்தி நிறுவனங்களின் தற்போதைய சந்தை விலைக்கேற்ப கொள்ளை இலாபமின்றி நியாய விலையில் கோழியிறைச்சியை விற்பதற்கும் அவ்வப்போது சந்தை விலை குறைகின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் நுகர்வோருக்கு அவற்றின் பயன்களை பெற்றுக் கொடுக்கும் வகையில் விலைக்குறைப்பு செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
அதேவேளை, அனைத்து கோழி இறைச்சிக் கடைகளிலும் கண்டிப்பாக சுத்தம், சுகாதாரம் பேணப்பட வேண்டும் எனவும் கழிவுகள் யாவும் முறையாக சேகரிக்கப்பட்டு, மாநகர சபையின் பிரத்தியேக கழிவகற்றல் வாகனத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது அறிவுறுத்தப்பட்டது.
0 comments :
Post a Comment