கிழக்கில் புகழ் பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை அதிபராக சிறப்பாக கடமையாற்றிய அருட் சகோதரர் செபமாலை சந்தியாகுவிற்கு வரலாறு காணாத வகையில் மகத்தான பிரியாவிடை வைபவம் இடம் பெற்றது.
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபராக இடமாற்றம் பெற்றுச் செல்லும் அதிபருக்கான பிரியாவிடை வைபவம் நேற்று முன்தினம் (18) செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது.
பாடசாலை பழைய மாணவர் சங்கம் , பாடசாலை அபிவிருத்தி சங்கம், பெற்றோர் சங்கம் , மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாட்டில் காலை பெண்கள் பகுதி தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுத்தலுடன் அதிபர் அருட் சகோதரர் செபமாலை சந்தியாகுவின் பிரியாவிடை நிகழ்வு ஆரம்பமானது .
தொடர்ந்து பெண்கள் ஆரம்ப பிரிவில் இருந்து அதிபரின் சேவையை நினைவுபடுத்தும் வாசகங்கள் அடங்கிய சுலோகங்களுடன் கனிஸ்ட மாணவ தலைவர்களும் மாலை அணிவித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்தினர். பின்னர் ஊர்வலமாக கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி வீதி ஆரம்பத்தில் இருந்து பாண்ட் வாத்தியம் மற்றும் அணிவகுப்பு சகிதம் அதிபரை அதிதிகள் அழைத்து சென்றனர்.
இதன் போது வீதியின் இரு மருங்கிலும் சாரணிய மாணவர்கள் ,சென் ஜொன்ஸ் அம்புலன்ஸ் சங்க மாணவர்கள் ,சிரேஸ்ட மாணவ தலைவர்கள் ஆகியோரால் அருட் சகோதரர் செபமாலை சந்தியாகு வரவேற்கப்பட்டு அழைத்து செல்லப்பட்டார். வழிநெடுக மாணவர்கள் ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கான பூமாலைகளை சூட்டி பாராட்டி கௌரவித்தமை வரலாற்று பதிவாகும்.
அதன் பின்னர் கல்லூரியில் தேசிய கொடி மற்றும் பாடசாலை கொடி ஏற்றப்பட்டு கீதங்கள் இசைக்கப்பட்டன.தொடர்ந்து மேடை நிகழ்வுகள் ஆரம்பமாகின.இதில் வரவேற்புரை, அதிதிகளின் உரைகள் ,பாடல் ,நடனம், என வாழ்த்துரைகள் நன்றிஉரைகள் இடம்பெற்றன.
கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை அதிபராக நியமிக்கப்பட்ட அதிபர் அருட்சகோதரர் செபமாலை சந்தியாகு இதற்கு முன்னர் பல பாடசாலைகளில் அதிபராக பணியாற்றியிருந்தார்.இவருடைய காலப்பகுதியில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை கல்வி விளையாட்டு இணைப்பாட வித செயற்பாடுகள் என மாவட்ட ரீதியாக பிரகாசித்ததுடன் கடந்த புலமைபரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் அதிகமான மாணவர்கள் சித்தியடைந்திருந்தனர்
அத்துடன் புலம் பெயர் நாடுகளில் உள்ள பழைய மாணவர்களை அந்த அந்த நாடுகளில் பழைய மாணவர் சங்கங்களை நிறுவுவதற்கான வழிகாட்டல்களை வழங்கியதுடன் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை அபிவிருத்திக்கு பல்வேறு நிகழ்சிகளை நடத்தி அதன் ஊடாக பாடசலையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருந்தார்
இந்த நிலையில் நாளை (21) வெள்ளிக்கிழமை அதிபர் அருட் சகோதரர் செபமாலை சந்தியாகு மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
மன்னார்புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய அருட்சகோதரர் ரெஜினோல்ட் கல்முனை பற்றிமா பாடசாலை அதிபராக கடமையை நேற்று (19) பொறுப்பேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment