கிழக்கை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் ! காரைதீவில் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் அறைகூவல்.



வி.ரி. சகாதேவராஜா-
கிழக்கு மாகாணத்தில் உறுதியான தலைமைத்துவத்தை ஏற்படுத்தி மாகாணத்தை மீட்டு கட்டிஎழுப்புவதற்கு எமது கட்சி முயற்சி எடுத்து வருகிறது
. நிச்சயமாக கிழக்கை கட்டியெழுப்ப முடியும். எனவே அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

இவ்வாறு காரைதீவு விளையாட்டு கழகமும் விபுலானந்தா சனசமூக நிலையமும் கல்முனை சொர்ணம் நகைமாளிகையினரும் இணைந்து நடாத்திய வெள்ளிவிழா சித்திரை புத்தாண்டு கலாச்சார விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

காரைதீவு விளையாட்டு கழகத்தின் தலைவர் த.தவக்குமார் தலைமையில் சனிக்கிழமை மாலை விபுலானந்தா மைதானத்தில் இடம் பெற்ற கலாச்சார விளையாட்டு விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விளையாட்டு இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேஷன் சீர்பெறு அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

அங்கு சந்திரகாந்தன் மேலும் உரையாற்றுகையில்..

கிழக்கில் அம்பாறை மாவட்டம் தனித்துவமானது. அங்கு தமிழ் மக்கள் இன்னொரன்ன சவால்களையும் பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வருகின்றார்கள். உகந்தை மலையில் சிலை அமைக்க வேண்டும் . இன்னும் பல பிரச்சினைகள் இருக்கின்றன .

இவற்றை வென்றெடுக்க வேண்டுமாக இருந்தால் அம்பாறை மாவட்டத்திற்கு என்று தனித்துவமான அரசியலை முன்கொண்டு செல்ல வேண்டும் .
பிரதேச சபை என்றாலும் சரி மாகாண சபை என்றாலும் வெவ்வேறு தீர்மானம் வேண்டும். பாராளுமன்றம் என்றால் மற்றுமொரு விதமான தீர்மானம் எடுக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தல் என்றால் இன்னும் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

அப்படி என்றால் மட்டுமே அம்பாறை மாவட்ட அபிவிருத்தி சாத்தியமாகும். இல்லாவிட்டால் நாங்கள் எதையும் பெற முடியாது. நடுத்தெருவில் நிற்க வேண்டிவரும் .

காரைதீவு கலாச்சாரம் பண்பாட்டுக்கு பேர் போன ஊர் .உலகறிந்த மாமனிதர் சுவாமி விபுலானந்தர் பிறந்த புண்ணிய பூமி. வடக்கு கிழக்கிலே சமூக மாற்றத்தை அன்று ஏற்படுத்திய அந்த மகான் பிறந்த காரைதீவு மண் மகத்துவம் மிக்கது. இங்கு உள்ளக விளையாட்டரங்கு நிறைவுற முப்பது மில்லியன் ரூபாய் தேவை என்று தலைவர் சொன்னார். இன்றைய நெருக்கடியான நிலையில் இது சற்று சிரமமாக இருந்தாலும் இரண்டு மூன்று மாதங்களிலே இதற்கான கூரை அமைக்கும் வேலையை ஆரம்பித்து செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றேன்.
நீங்களும் அதற்கான முயற்சி எடுக்க வேண்டும் .
1960 ஆம் ஆண்டுக்கு பின்னர் மட்டக்களப்பிலிருந்து பிரிந்து அம்பாறை மாவட்டம் தோற்றம் பெற்ற பொழுது காரைதீவு தம்பிலுவில் திருக்கோயில் ஆலையடிவேம்பு என்று பல தனித்துவமான தமிழ் கிராமங்கள் போராட்டத்தில் அதிக அக்கறையை பங்களிப்பை செய்தன. அதன் காரணமாக பல பின்னடைவுகளை சந்தித்தது. எப்படி இருந்தாலும் கிழக்கின் ஓர் அங்கமே அம்பாறை மாவட்டம். எனவே அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் கலாசார பாரம்பரியங்கள் பொருளாதார அபிவிருத்தி கல்வி விருத்தி போன்றவற்றில் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற அனைவரும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
இங்கு மீட்பர்கள் என்று பலரும் வருவார்கள்.
இங்கு சுமந்திரனோ சம்பந்தன் ஐயாவோ வந்து கிழக்கை மீட்க முடியாது. முன்னாள் தளபதி இங்கு வந்து வீர வசனங்களை பேசி உசிப்பேற்றிவிட்டு போய்விட்டார்.
இன்றும் தமிழ் மக்கள் நிர்க்கதியாக இருக்கின்றார்கள். எனவே உறுதியான தரமானதாக தலைமைத்துவங்களை கிழக்கிலே ஏற்படுத்த வேண்டும் என்று எமது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி மும்முரமாக பயணித்து வருகின்றது.
மட்டக்களப்பு எவ்வாறு உள்ளதோ அவ்வாறு அம்பாறை மாவட்டத்திலும் உங்களது ஒத்துழைப்பு இருக்குமாக இருந்தால் கிழக்கை மீட்டெடுத்து அபிவிருத்தி செய்வது ஒரு பாரிய பிரச்சனையாக இருக்காது.
நாங்கள் தரமான உறுதியான தலைவர்களை தேடி அவர்களை உருவாக்கி வருகின்றோம். அதனூடாக நிச்சயமாக கிழக்கை மீட்டு அதனை கட்டி எழுப்புவோம் . என்றார்.
9ஏ3ஏ பெற்ற சாதாரண உயர்தர சாதனை மாணவர்கள் 24பேர் பகிரங்கமாக பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் உள்ளிட்ட பல அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்.

பெருந்தொகையான பொதுமக்கள் கலந்து கொண்டு கலாச்சார விளையாட்டு போட்டியை கண்டு ரசித்தார்கள்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :