கல்முனை பற்றிமா அதிபர் அருட் சகோ. சந்தியாகு செபமாலை இன்று விடைபெறுகிறார்!



கிழக்கில் புகழ் பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் அதிபர் அருட் சகோ. சந்தியாகு செபமாலை இன்று (18) செவ்வாய்க்கிழமை கல்முனையில் இருந்து விடைபெறுகிறார்.
அதனையொட்டி கல்முனை கல்விச் சமூகம் பழைய மாணவர் சங்கம் பழைய ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பற்றிமா அபிமானிகள் என்று பலதரப்பினரும் அவரை தினமும் அழைத்து சேவைகளைப் பாராட்டி வருகின்றனர்.
இன்று (18) செவ்வாய்க்கிழமை கல்லூரி ஆசிரியர்கள் அவருக்கு மாபெரும் பிரியாவிடை வைபவம் கல்லூரியில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

நாளை (19) புதன்கிழமை கல்முனையில் இருந்து ஆசிரியர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினர் அவரை மன்னாருக்கு கொண்டு சென்று விட உள்ளனர்.

ஐந்து வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் இந்த பாடசாலையில் அதிபராக பொறுப்பேற்று பல சேவைகளை புரிந்து விட்டு பாடசாலையை ஒரு உன்னதமான உயர்நிலைக்கு இட்டுச் சென்று இன்று இடமாற்றம் பெற்று மன்னார் புனித சேவியர் ஆண்கள் பாடசாலைக்கு அதிபராக செல்ல இருக்கின்றார்.
இவர் 30.08.2017இல் பற்றிமா அதிபராக பதவியேற்று இன்று (18.04.2023) இடமாற்றம் பெற்று சொந்த இடமான மன்னார் செல்கிறார்.

இவரது இடத்திற்கு மன்னார் புனித சேவியர் ஆண்கள் பாடசாலை அதிபர் அருட் சகோ. எஸ்.இ.றெஜினோல்ட் அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் எதிர்வரும் 21ஆம் திகதி பற்றிமா அதிபராக பதவி ஏற்கவிருக்கிறார்.

நூற்றாண்டுகளை கடந்துவிட்ட பாடசாலை புனித சூசையப்பர் சபை, அன்புச் சகோதரர் சபை, கார்மேல் கன்னியர் சபை என பல கத்தோலிக்க சபைகளின் அருட் சகோதரர்களாலும், அருட்சகோதரிகளாலும் வழி நடத்தப்பட்ட பாடசாலை அருட் சகோதரர் மத்தியூ போன்ற புகழ் பூத்த அதிபர்களின் வரிசையில் பொன்எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒருவர் அருட் சகோதரர் சந்தியாகு ஆவார்.

மிகவும் இக்கட்டான ஒரு சூழலில் பாடசாலைக்கு மிகச் சிறந்த ஒரு அதிபர் தேவைப்பட்ட வேளையில் பாடசாலை சமூகத்தின் வேண்டுதலின் பெயரில் புனித டிலாசால் சபை பாடசாலையை பொறுப்பெடுத்தது. அதன் முதலாவது அதிபர் அருட் சகோதரர் சந்தியாகு அவர்கள். அவருடைய வருகையினால் பாடசாலையின் முகாமைத்துவம் கல்வி பாடவிதானம், இணைப்பாட விதானம்,, பௌதிகள அபிவிருத்தி என அனைத்திலும் பெரு வளர்ச்சியை அடைந்தது.
கம்பீரமான தோற்றம், கூர்மையான கண்கள், கனிவான பார்வை. புன்முறுவல் பூத்த முகம், பல் மொழி ஆற்றல், அனைவரையும் அரவணைக்கும் பண்பு, வெளிப்படைத்தன்மை, அதிபர் என்ற நிலையில் இருந்து இறங்கி அனைவருடனும் பழகும் பண்புஆசிரியர்கள் மாணவர்கள் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் என் அனைவரையும் கட்டி போட்டது, அனைவரும் வேற்றுமை கடந்து அவர் பின் ஒன்றிணைந்தனர் இது அவரது முகாமைத்துவத்தின் வெற்றி. வேலை பகிர்ந்தளிப்பும், ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் பாடசாலை நாட்காட்டியும் (school calender) இதனை காட்டும்

பாடசாலை கல்வித்துறைகளும் பெரு வளர்ச்சி கண்டது அதிபருடைய ஐந்து வருடங்களில் இரண்டு வருடங்களை கொரோனா தின்றது எனினும் மாணவர்கள் வீட்டில் இருந்து கற்கும் வகையில் வகுப்பு ரீதியாக பாட ரீதியாக whatsapp குழுக்கள் அமைக்கப்பட்டமை, zoom வகுப்புகள் online பரிட்சைகள் என தொடர்ச்சியாக நடத்தி கிழக்கு மாகாணத்திலேயே முன்னுதாரணமான ஒரு பாடசாலையாக இப் பாடசாலை திகழ்ந்தது அதனால் தான் ஒவ்வொரு வருடமும் தலா எட்டு எட்டுக்கு மேற்பட்ட மாணவர்கள் வைத்தியர்களாக எந்திரிகளாக பல்கலைக்கழகம் சென்றனர், க பொ த சாதாரண தரப் பரீட்சையில் வரலாற்றில் முதல் தடவையாக 32 மாணவர்கள் 9A சித்தி பெற்று சாதனை படைத்தனர், புலமை பரிசில் பரீட்சையில் 225 மாணவர்கள் பரிட்சை எடுத்து அதில்217 மாணவர்கள்70 புள்ளிகளுக்கு மேல் பெற்றனர். ஒவ்வொரு வருடமும் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் புலமைப் பரீட்சை பரீட்சையில் சித்தி பெற்றனர். இது அதிபரின் காலத்து கல்விச் சாதனை.

இணை பாடவிதானத்தை பார்க்கும் பொழுது தமிழ் மொழி தினம் ஆங்கில மொழி தினம் சமூக விஞ்ஞான போட்டிகள் அனைத்திலும் பாடசாலை முன்னிற்க்கிறது. குறிப்பாக பாடசாலையில் நடைபெறுகின்ற விளையாட்டுப் போட்டிகள். கொழும்பு நகர பாடசாலைகளையும் வென்றுவிட்டது. புதிதாக உதைப்பந்தாட்ட குழுக்கள்,வலைப்பந்தாட்ட குழுக்கள், கூடை பந்தாட்ட குழுக்கள், கடின பந்து கிரிக்கெட், பல துறை சார்ந்த விளையாட்டு பயிற்சிகள், எறிபந்து போட்டியில் தேசியம்வரை சென்று சாதித்தமை குறிப்பிடத்தக்கது

மாணவர்களிடத்தில் சாரணர் குழு, கடேட் குழு, சென் ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் குழு, சுற்றாடல் கழகம் என்ன புதிய கலகங்கள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பாக சுற்றாடல் கழக மாணவர்கள் 5 பேர் ஜனாதிபதி விருது பெற்றமை, மாணவர்களது புத்தாக்க செயற்பாடுகள் இணை பாடவிதான சாதனைகளை காட்டும்
பாடசாலையின் பகுதிகவள அபிவிருத்தியை நோக்கு கையில் முன்னர் பாலைவனம்போல் காட்சியளித்த பாடசாலை இன்று சோலைவனமாக காட்சியளிக்கின்றது. எங்கு பார்த்தாலும் பூ மரங்கள் கண்ணைக் கவரும் மரங்கள் கற்பதற்கான ஒரு இனிய சூழலை இந்த அழகு படுத்தல் ஏற்படுத்தியுள்ளது. நேர்த்தியாக கட்டப்பட்டுள்ள நிர்வாகக் கட்டிடம், ஆண்கள் பெண்கள் பகுதி மாணவர்களுக்கான சைக்கிள் தரிப்பிடம், டெக்னாலஜி மாணவர்களுக்கான பயிற்சி கூடம், ஆடியோ விஷுவல் ரூம், கிளனி மண்டப புனரமைப்பு, சிசிலியா மேரி அரங்கு புனரமைப்பு, மைதானப்புனமைப்பு, பெண்கள் பகுதிபாடசாலை பேர் பலகை, ஆண்கள் பகுதியில் டிஜிட்டல் நேம் போர்டு, ஆண்கள் பகுதி பெண்கள் பகுதி மற்றும் மைதானத்திற்கான மின்விளக்கு ஒளியூட்டல், மாணவர்கள் கற்பதற்கான ஸ்மார்ட் வகுப்பறைகள், ஒரு கோடிக்கு மேற்பட்ட செலவில் செய்யப்பட்ட பாடசாலை ரிப்பேரிங் வேலைகள் குடைப்பந்தாட்ட திடல் காங்கிரீட் இட பட்டமை காப்பட் போடப்பட்டமை, சூட்டிங் போர்டு, ஸ்கோர் போர்டு என செய்யப்பட்ட புனரமைப்பு வேலைகள் கட்டட வேலைகள் ஏராளம்

அதிபருடைய காலத்தில் பாடசாலையில் நடந்த விழாக்கள் ஏராளம் விழாக்களுக்கு வருகை தந்த உயர் அதிகாரிகள் மூலம் பாடசாலைக்கு அவரால் பெற்றுத் தரப்பட்ட உதவிகளும் ஏராளம் எங்கும் முன் சென்று கதைத்து பாடசாலைக்கு பாடசாலைக்குரிய தேவைகளை பூர்த்தி செய்கின்ற வல்லமை சந்தியாகு அதிபரிடம் காணப்பட்டது இதற்கு அவரது மொழி ஆளுமையும் துணை நின்றது.

அதிபருடைய வெளிப்படை தன்மை அன்பான அரவணைப்பு பழைய மாணவர்களை ஒன்றிணைத்தது முதன்முதலாக பழைய மாணவர்கள் அனைவரையும் அவர்களது குடும்பங்களையும்ஒன்றிணைத்த ஒரு இரா போசன விருந்து பாடசாலையில் இடம் பெற்றது. பழைய மாணவர் சங்கம் இலங்கையில் மட்டுமின்றி இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா என எங்கும் வியாபித்து உலகப் பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றிணைப்புடன் பாடசாலை கல்வியிலும் பௌதீக வளத்திலும் அபிவிருத்தி காணத் தொடங்கியது. அவருடைய காலத்தில் பாடசாலை பெற்ற வளர்ச்சி ஏராளம். கார்மேல் பற்றிமா கல்லூரியின் ஒரு நவயுக சிற்பி என்று இவரை குறிப்பிடலாம்.

இவ்வாறு பலரும் புகழாரம் சூட்டினார்கள்.

வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :