வி.ரி. சகாதேவராஜா-
1990களில் இடம்பெயர்ந்த பொத்துவில் அறுபதாம் கட்டை கனகர் கிராம மக்கள் 33 வருடங்களின் பின் மீள்குடியேற அனுமதி கிடைத்திருக்கின்றது.
226 பேரில் முதல் கட்டமாக 76 பேருக்கு காணியை விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. ஒருவருக்கு 1 ஏக்கர் 20 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும். பயிர்ச்செய்கைக்காக 1 ஏக்கர் காணியும் வீடு அமைக்க 20 பேர்ச்சஸ் காணியும் வழங்கப்படவிருக்கிறது.
காடுமண்டி கிடந்த அப் பிரதேசம் கடந்த மூன்று தினங்களாக ஜேசிபி இயந்திரம் மூலம் துப்பரவாக்கப்பட்டு வருகிறது.
பொத்துவில் பிரதேச சபை முன்னாள் உப தவிசாளரும் சமுக செயற்பாட்டாளருமான பெருமாள் பார்த்தீபன் அரச அனுமதியுடன் இப் பணியில் ஈடுபட்டு வருகிறார். கனகர் கிராம மக்களும் படையினரும் சமுகமளித்திருந்தனர்.
பொத்துவில் பிரதேச செயலாளர் மொகமட் இஸ்மாயில் பிர்னாஸ்ஸின் நேரடி கண்காணிப்பில் இத் துப்பரவாக்கும் பணி நடைபெறுகிறது.
பிரதேச செயலாளர் பிர்னாஸ் முதற்கட்டமாக 76 பேருக்கு காணியை விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது எனவும் கிழக்கு மாகாண காணி ஆணையாளரின் ஏற்பாட்டிலே இரண்டாம் கட்டமாகவும் காணி விடுவிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
பார்த்தீபன் அங்கு கருத்துரைக்கையில்..
கடந்த 33 வருட காலமாக இடம் பெயர்ந்து இந்த மக்கள் நான்கு வருடங்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள் .இன்று அந்த மக்களுக்கு ஓரளவு விடிவு கிடைத்து இருக்கின்றது. இதுவரை நாங்கள் அந்த மக்களுக்காக மூன்று பிரதேச செயலாளர்கள் 3 அரசாங்க அதிபர்கள் மற்றும் அமைச்சர்களோடு சந்தித்திருக்கின்றோம். பல்வேறுபட்ட கூட்டங்களிலே தீவிரமாக பேசியிருக்கின்றோம். அதன் பயனாக இன்று 76 பேருக்கு முதல் கட்டமாக காணியை விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றமை சந்தோஷம் அளிக்கின்றது . பிரதேச செயலாளர் பிர்னாசுக்கு நன்றிகளை கூறுகின்றோம்.
இதுவரையும் நடந்த போராட்டத்தில் 13 பேர் மூப்பு காரணமாக மரணமடைந்திருக்கின்றார்கள். இதில் ஈடுபட்ட சகல மக்கள் நல செயல்பாட்டாளர்களுக்கும் இது தொடர்பாக நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் செய்திகளையும் எழுதிவந்த எமது ஊரின் மூத்த பத்திரிகையாளர் வி.ரி. சகாதேவராஜா சேருக்கும் நன்றிகள்.நன்றி கூறுகின்றோம் என்று கூறினார் .
அங்கு சமுமளித்திருந்த பொத்துவில் கனகர் கிராம மண் மீட்புக் குழுத் தலைவி றங்கத்தனா கூறுகையில்..
இவ்வளவு காலமும் நாங்கள் பொறுமையோடு காத்திருந்தோம் .எமக்கு இந்த பிரதிநிதிகள் எல்லாம் உதவியிருந்தார்கள். இன்று முதல் கட்டமாக 76 பேருக்கான காணி விடுவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனையவருக்கும் இந்த காணிகளை மீட்டு தர வேண்டும் என்று கோருகின்றோம் .இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நாங்கள் குழு சார்பிலே மனமாரநன்றி கூறுகின்றோம் .எமது மூத்த ஊடகவியலாளர் சகாதேவராஜா தொடர்ச்சியாக பல கட்டுரைகளையும் பல செய்திகளையும் எழுதி வந்தவர் .அவரையும் இந்த இடத்தில் நாங்கள் பாராட்டுகின்றோம் நன்றி கூறுகின்றோம்.என்றார்.
வரலாறு.
இற்றைக்கு 60வருடங்களுக்கு முன்பு அங்கு வாழ்ந்துவந்த அந்த மக்கள் தமது காணிகளைக்கோரி கடந்த 32 வருடங்களாக போராட்டத்திலீடுபட்டுவந்தனர்.
1960களில் சுமார் 278 குடும்பங்கள் வாழ்ந்துவந்தன. 1981களில் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் காலத்தில் முன்னாள் எம்.பி. அமரர் எம்.சி.கனகரெத்தினத்தின் முயற்சியால் வீடுகட்ட அரை ஏக்கர் நிலமும் பயிர்செய்ய 2ஏக்கர் நிலமும் தரப்பட்டு 30வீடுகளைக்கட்டி கொடுக்கப்பட்டு அவர்கள் மகிழ்ச்சியாக சேனைப்பயிர்ச்செய்கையுடன் வாழ்ந்துவந்தனர்.
1990களில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அவர்களை கடந்த 32வருடங்களாக அங்கு வனபரிபாலனஇலாகா குடியேற அனுமதிக்கவில்லையென்பது பிரதான குற்றசாட்டாகும்.
எது எப்படியிருந்தபோதிலும் அவர்கள் வாழ்ந்த பிரதேசம் இன்று மிகவும் பயங்கரமான சூரப்பற்றைகளினால் சூழ்ந்து காடுமண்டிக்காணப்படுகின்றது. அந்தக்காட்டினுள் பாழடைந்து இடிந்து தகர்ந்த நிலையில் அவர்களது 30வீடுகளும் காணப்படுகின்றன. கூடவே அவர்கள் பாவித்த மலசலகூடங்களும் தகர்ந்தநிலையில் காணப்படுகின்றன. அதாவது அந்த மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் நிறையவேயுள்ளன.
இதுவரை பாராளுமன்ற உறுப்பினர் தொடக்கம் பல அரசியல்வாதிகள் சமுகசேவையாளர்கள் எனப்பலரும் வந்து கலந்துரையாடி பல உறுதிமொழிகளைம் அளித்துள்ளார்கள். வனத்துறை உயரதிகாரியும் பிரதேசசெயலாளரும் இக்காணியை மீளளிக்க உறுதிகூறியுள்ளநிலையிலும் போராட்டம் தொடர்ந்தது.
அது இன்று கட்டம் கட்டமாக நிறைவேறத்தொடங்கியிருப்பதுகண்டு மகிழச்சியடையலாம்.
0 comments :
Post a Comment