மலையகத்தின் 200 ஆண்டு கால வரலாற்றில் 150 ஆண்டு காலம் மக்கள் பிரித்தானியர் ஆட்சியின் கீழாகவே வைக்கப்பட்டு இருந்தனர். எனவே மலையகம் 200 தொடர்பில் பிரித்தானிய அரசும் கவனம் கொள்ளுதல் வேண்டும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தாணிகர் ஷேரா ஹவுல்டனிடம் வலியுறுத்தியதாக முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தாணிகர் ஷேரா ஹவுல்டனுக்கும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனம் திலகராஜாவுக்குமான சந்திப்பு நேற்று மாலை நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தச் சந்திப்பு குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,
1823 களில் தென்னிந்தியாவில் இருந்து அழைத்து வந்த காலத்தில் இருந்து 1972 ஆண்டு இலங்கைக் குடியரசாகும்வரை மலையகப் பெருந்தோட்டச் சமூகத்தினரின் தொழில் மற்றும் சமூக நிர்வாகத்தினை பிரித்தானியரே மேற்கொண்டிருந்தனர். எனவே இன்று 200 வருட மலையக வரலாற்றில் பெரும்பங்கு பிரித்தானியாவுக்கு உரியது. இந்த நிலையில் பல்வேறு உரிமை மறுக்கப்பட்டவர்களாக இலங்கையில் வாழும் இந்த மக்கள் குறித்த கரிசனையை பிரித்தானியா வெளிப்படுத்த வேண்டும் எனவும், இந்த மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிய இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தாணிகரகம் ஓர் குறைகேள் அதிகாரியை அல்லது குழுவை நியமிக்க வேண்டும் . அதன் ஊடாகத் தொகுக்கப்படும் தகவல்கள் ஆவணப்படுத்தப்படுமிடத்து பல்வேறு உரிமை மறுக்கப்பட்ட இந்த மக்களின் பிரச்சினைகளை சர்வதேசத்தின் முன்னிலைக்கு கொண்டு செல்லவும் தீர்வு பெறவும் வழிவகுக்கக் கூடும்.
பிரித்தானியரால் வழங்கப்பட்ட இலங்கைக் குடியுரிமையைப் பறித்த இலங்கை சுதேச அரசு, அதனை மீளவும் வழங்கும் போது வாக்களர் அந்தஸ்த்தினை மாத்திரம் வழங்கி உள்ளதே தவிர அவர்களை முழுமையான இலங்கைக் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே இந்த மக்களை அர்த்தமுள்ள குடிமக்களாக ஏற்றுக் கொள்ளச் செய்யும் பொறுப்பினையும் ஏற்று பிரித்தானிய இலங்கை அரசினை வலியுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மலையக மக்களின் நிலவரம் குறித்த அண்மைக்கால ஆய்வு அறிக்கைகளின் பிரதிகளையும் பிரித்தானிய தூதுவரிடம் கையளித்தார்.
0 comments :
Post a Comment