மன்னர் சாள்ஸின் முடிசூட்டு விழாவில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைக்கப்பட்டமை அவரது சர்வதேச செல்வாக்கை நிரூபித்திருக்கிறது. இதற்கு முன்னரும் எலிசபத் மகாராணியின் முடிசூட்டு விழாவுக்கு 1953 இல், அப்போதைய அரச தலைவரான டட்லியுடன் ரணிலின் தந்தையான எட்மன் விக்ரமசிங்க சென்றிருந்தார்.
நாட்டுக்கு அவசரமாகத் தேவையாகவிருந்த நிதி நிவாரணங்களைப் பெற்றுவந்த பெருமையிலிருந்த ரணிலுக்கு கிடைத்த அடுத்த மவுசு இது. மேலைத்தேய நாடுகளின் அரசியலில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் செல்வாக்குச் செலுத்துவதாக பெருமை பேசப்படும் சூழலில், இவ்வாறான நிதியுதவிகள் கிடைக்குமா? இதில் பலருக்கும் சந்தேகம் இருந்தன. பொறுப்புக் கூறல், போர்க்குற்றம் மற்றும் மேலாண்மைப் போக்கிலுள்ள அரசுக்கு நிதியுதவி கிடைக்க புலம்பெயர் அமைப்புக்கள் விடப்போவதில்லை. இவ்வாறுதான் எதிர்பார்க்கப்பட்டது. இவையனைத்தையும் தகர்த்து நிவாரணத்தைக் கொண்டுவந்து நிம்மதிப்பெருமூச்சு விடவைத்தார் ஜனாதிபதி.
அரசாங்கத்தை பொறுப்பேற்றது ஆட்சியாளர்களைப் பாதுகாப்பதற்கல்ல. இந்தப்போக்கில் செயற்படும் ரணில் விக்ரமசிங்க அடிக்கடி இதை நிரூபித்து வருகிறார். ஜனாதிபதியின் மே தின உரையிலும் இது சுட்டிக்காட்டப்பட்டது. குறுகிய அரசியலுக்கு முன்னிலையில்லை, 2048 இல் முழுமையான இலங்கை என்ற இலக்கில் பயணிக்கவே அழைப்பு விடுத்தார்.
வழங்கிய கடனுக்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகளால், வாங்கிய கடனை மீளச்செலுத்தும் நிர்ப்பந்தனையிலுள்ளது நாடு. எனவே, இதற்காக பேதங்களின்றி ஒன்றுபட்டுழைப்பது அவசியப்பட்டுள்ளது. இதற்காகவே, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்துக்கு பாராளுமன்ற அங்கீகாரமும் கோரப்பட்டது. இதையும் 120 வாக்குகளால் வென்றெடுத்த ரணில் விக்ரமசிங்க, உலகத் தலைவர்களே ஒன்றுகூடும் "வெஸ்ட்மினிஸ்டர் அபே" ஆலயத்துக்குச் சென்றுள்ளார்.
பிரிட்டனில் 39 ஆவது தடவையாக நடைபெறும் முடிசூட்டல் விழா இது. 1953 இல் நடந்த இதுபோன்ற விழாவுக்கு 8200 பேர் அழைக்கப்பட்டனர். இம்முறை 2200 பேருக்கே இந்த அழைப்பு. அனுமதிக்கப்பட்டவர்களில் ஒரு அரச தலைவராகச் செல்கிறார் அவர். ஐக்கிய இராச்சியத்தில் சூரியன் ஔிந்துகொள்ளும் பிரதேசம் இல்லையெனுமளவுக்கு மிகப்பெரிய விசால இராச்சியமாக இருந்த தேசமது. இப்படிப்பட்ட ஒரு தேசத்தின் நிகழ்ச்சிக்கு ஜனாதிபதி ரணில் செல்வது நாட்டுக்கு கிடைத்த கீர்த்தியே! இது அவரது அரசியல் ஆணிவேரையும் பலப்படுத்தலாம். பாராளுமன்றம் தனது திட்டங்களுக்கு வழங்கிய அனுமதியின் ஆதாரத்துடன் அடுத்த கட்ட நகர்வுகள் ஆரம்பமாகலாம்.
இவைகள்தான் எதிரணிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்துகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெற்று முன்னேற முடியாமல் தடுமாறும் தேசங்களுக்குள், நமது நாடு இல்லாதிருக்க உழைப்பதுதான் தேசப்பற்று. தன்சானியா, கிறீஸ்லாந்து மற்றும் ஆர்ஜன்டீனா என்பவை 'இவ்வுதவிகளை ஏன் பெற்றோம்?' எனத் திணறுமளவுக்கு பொருளாதாரம் வீழ்ந்துள்ளது. இதுபோன்று, வீழவா இந்த எதிரணிகள் விரும்புகின்றன? அவ்வாறு விரும்பினால் அதில் அரசியல் உள்ளது. எனவே, இவ்விருப்பம் தேசப்பற்றிலிருக்கட்டும். ஆனால், எதிரணிகள் சொல்லும் சில விடயங்களுக்கு தலைசாய்க்கும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் நழுவ முடியாத நிலையும் உள்ளது.
வௌிநாட்டு நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்படக்கூடாது என்கின்றன எதிரணிகள். ஷங்கிரிலா, அதானி குறூப் மற்றும் ஜோன்கீல்ஸ் போன்ற வௌிநாட்டு நிறுவனங்கள் இந்த வரிச்சலுகைகளில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன. இதனால், வருடாந்தம் இந்த நிறுவனங்கள் நாற்பது மில்லியன் டொலரை வருமானமாக ஈட்டுவதாக கூறப்படுகின்றது. அந்நியச் செலாவணியை உள்ளீர்ப்பதற்கான தேவையில் நாடு இருக்கையில், இந்தளவு தொகை வௌிநாட்டு நாணயங்கள் நாட்டிலிருந்து வௌிப்பாயலாமா? இதுதான் எதிரணிகளின் வாதம். இந்த வாதத்துக்கு அரசாங்கம் அளிக்கும் பதிலைப் பாருங்கள். உள்நாட்டு நிறுவனங்களால் பாரிய நிதியை முதலீடு செய்து இவ்வருமானங்களை ஈட்ட முடியாது. இதற்காகவே, வௌிநாட்டு நிறுவனங்களுக்கு இதன் செயற்பாடுகளை குத்தகைக்கு வழங்கியதாகக் கூறுகிறது அரசு.
பொதுவாக நோக்கினால், கடந்த காலங்களிலிருந்து விடுபட்டு புதிய பொருளாதாரக் கொள்கைக்கான குறிக்கோளில் இணைய எல்லோரும் இணைவதென்பது அரசியலுக்கு அப்பால் சாத்தியமானதே!
0 comments :
Post a Comment