அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட் அவர்களின் மறைவு மிகவும் கவலையளிப்பதாகவும் அவரின் மரணச்செய்தி உலகின் நிலையாமையை ஒரு கணப்பொழுதில் உணர்த்தியுள்ளதாகவும் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அன்னாரின் மறைவு குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
“சட்டத்துறையில் மாத்திரமன்றி அரசியலிலும் ஆழ்ந்த அறிவு, அனுபவமுடையவர் வை.எல்.எஸ்.ஹமீட். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூலகர்த்தாக்களில் ஒருவரான இவரிடம் இருந்தவை எல்லாம் திறமைகள்தான். தனது நிலைப்பாட்டில் உள்ள நியாயத்தை நிரூபிக்கும் பாங்கே ஒரு சாமர்த்தியமானது.
சிறிதுகாலம் முரண்பட்டிருந்த அவர், காலச்சுழற்சியில் நம்பிக்கை வைத்திருந்தார். சட்டத்தின் பல பரிமாணங்களையும் கற்றுத்தேர்ந்த விவேகி வை.எல்.எஸ்.ஹமீட். ஆனாலும், அடக்கம் அமைதியே அவரது ஆளுமையானது. முஸ்லிம் அரசியலின் வளைவு, நெளிவுகளை நிமிர்த்திச் செல்லுமளவுக்கு அவரிடம் தீட்சண்யமிருந்தது.
மரணத்தின் வாயிலை எந்தச் சக்தியாலும் அடைக்க முடியாதென்பதே எமது நம்பிக்கை. இந்த நம்பிக்கைதான் எங்களை நிதானப்படுத்துகிறது. எல்லாம் வல்ல அல்லாஹ் அவனது கழாகத்ரைப் பொருந்திக்கொள்ளும் ஈமானை அன்னாரின் இழப்பால் துயரும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் தந்தருள்வானாக..!
அல்லாஹ் அன்னாரைப் பொருத்திக்கொண்டு, அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா எனும் உயர்மிகு சுவன பாக்கியத்தை வழங்குவானாக..!” என்று குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment