திருகோணமலை மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு “உரிய இடத்தில் தீர்வு” வழங்கும் நோக்கில், நடமாடும் சேவையொன்றை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.பாயிஸ் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் அறிவுறுத்தல்களுக்கமைவாக, ஆளுநர் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடமாடும் சேவை எதிர்வரும் 07 ஆம் திகதி புதன்கிழமை காலை 11.00 மணியிலிருந்து மாலை 4.00 மணிவரை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளை குறித்ததினத்தில் தெரிவிக்க முடியும் எனவும், அவ்வாறு தெரிவிக்கப்படுகின்ற பிரச்சினைகள் பற்றிய விடயங்களை சம்மந்தப்பட்ட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோர்களுடன் மீளாய்வு செய்யப்பட்டதன் பின்னர், அவர்களுக்கான தீர்வினை அன்றையதினம் 2.00 மணியிலிருந்து கிழக்கு மாகாண ஆளுநரினால் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறிப்பாக, அன்றையதினம் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு மாத்திரமே தீர்வு வழங்கப்படவுள்ளதால், அரச ஊழியர்களின் இடமாற்றம் தொடர்பான எந்தப் பிரச்சினைகளும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.பாயிஸ் சுட்டிக்காட்டினார்.
0 comments :
Post a Comment