கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி பிரதேச தொழில் முனைவோர்கள் சம்மேளன பிரதிநிதிகளுக்கும் சுற்றாடல் அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல்





ஏறாவூர் சாதிக் அகமட்-
டந்த 11.04.2023 திகதியன்று கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகபிரிவுகளிலுள்ள தொழில் நிலையங்களையும், இப்பிரதேசங்களின் நிலமைகளயும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தவிசாளர், அதன் பணிப்பாளர் நாயகம், கிழக்கு மாகாண பணிப்பாளர், மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் மற்றும் தொடர்புட்ட உத்தியோகத்தர்களை கொண்ட குழுவினர் பார்வையிட்டுச் சென்றனர்.

சுற்றுச்சூழலுக்கும், இயற்கை வளங்களுக்கும் ஏற்படும் சேதங்கள், பாதுகாப்பற்ற தொழில் நிலையங்களினால் ஏற்படும் சுற்றுச் சூழல் பிரச்சினைகள் மற்றும் தொழில் நிலையங்களை சுற்றுச்சூழலுக்கு நட்புறவாக நடாத்துவது தொடர்பாக இதன்போது அவதானம் செலுத்தப்பட்டிருந்தது. அதன் தொடர் நடவடிக்கையாக மேற்படி இரு பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள தொழில் முனைவோர்களுடன் 28.04.2023 ஆந்திகதி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் ZOOM தொழிநுட்பத்தின் ஊடாக கலந்துகொண்டு கருத்துக்கள் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலின் முடிவில் இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள தொழில் முனைவோர் தமக்கான சம்மேளனம் ஒன்றையும் அதற்கான நிர்வாக கட்டமைப்பினையும் ஏற்படுத்திக்கொண்டனர்.

இரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 150யிற்கு மேற்பட்ட தொழில் நிலையங்களினால் 2300க்கும் மேற்பட்டோர் நேரடியான தொழில் வாய்ப்புக்களை பெற்றிருக்கின்றனர். ஆனால் துரதிஸ்டவசமாக தொழில் முனைவோருக்கும், ஒழுங்கமைக்கப்பட்ட நிர்வாக கட்டமைப்பு ஏதும் இல்லாதும், தொடர்புபட்ட அமைச்சுக்களின் வழிகாட்டல்கள், ஆலோசனைகள், ஊக்குவிப்புக்கள், வரப்பிரசாதங்கள் எதுவும் இவர்களுக்கு கிடைக்கப்பெறாத நிலமையே இன்று வரை காணப்படுகின்றது. விவசாயம், மீன் பிடி தொழிலுக்கு அடுத்தபடியாக மிகப் பெரும் எண்ணிக்கையிலான குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாகவுள்ள இத்தொழில் துறைகளுக்கு எதிராக சுற்றுச் சூழல், பொதுமக்களின் சுகாதார நலன் என்பவைகள் தொடர்பாக அடிக்கடி முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதால் இத் தொழில் துறையினார் நிச்சயமற்ற சூழ்நிலையில் உள்ளனர்.

இதனால் தொழில் நிலையங்களை மேம்பாடு செய்வதற்கும், நவீன முறையில் புனருத்தானம் செய்வதற்கும், புதிய மெதாழிநுட்பங்களை பயன்படுத்தி விருத்தி செய்வதற்கும் பெருந்தொகையான நிதியினை இந்நடவடிக்கைகளுக்காக முதலீடு செய்வதில் தொழில் துறை உரிமையாளர்களும், தொழில் முனைவோரும் தயக்கம் காட்டுகின்றனர்.

கடந்த காலத்தில் சனக் குடியிருப்புக்கள் இல்லாத செம்மனோடை, மாவடிச்சேனை, காகிதநகர், தியாவட்டவான் போன்ற பிரதேசங்களில் அரசி ஆலைகள், மர அரி ஆலைகள் மற்றும் ஏனைய தொழில் துறைகளை பாரிய முதலீட்டுடன் இடமாற்றம் செய்த போதிலும் காலப்போக்கில் இப்பிரதேசங்களில் குடியிருப்புகள் ஏற்பட்டு தொழில் நிலையங்களுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருகின்றன. வேறு பொருத்தமான இடங்களுக்கு தொழில் நிலையங்களை மாற்றம் செய்வதற்கு தேவையான பாதுகாப்பான காணிகள் இல்லாதிருப்பதும்; இங்கு குறிப்பிடத்தக்க விடயம். அதே நேரம் புனானை தொடக்கம் காகித ஆலை வரையான அரச காணிகள் பல்வேறு தொழில் துறைகளுக்கு வழங்கப்பட்டு இப்பிரதேசத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமாகவும், நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாகவுள்ள இத்தொழில் துறையினர் புறக்கணிக்கப்பட்டுள்ளதும் கவலைக்குரிய விடயமாகும்.

176.3 சதுர கிலோமீற்றர்களாக இருந்த கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவின் 150 சதுர கிலோமீற்றர் காணிகள் கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலக பிரிவுடன் இணைக்கப்பட்டும்; 240 சதுர கிலோமீற்றர் கொண்டதாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட போதிலும் வெறும் 22 சதுர கிலோமீற்றர் பரப்பளவை மாத்திரம் கொண்டதாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவு இன்று வரை இயங்கி வருவதும் யாவரும் அறிந்த விடயம். கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுகளும் ஏலவே மிக அடர்த்தியான சனத்தொகை குடியிருப்பும், சுற்றுச் சூழல், சுகாதார பாதிப்புக்களும், சமூக சீர்கேடுகளும் அதிகரித்துள்ள நிலையில் தொடர்ந்து அதிகரித்து வரும் சனத்தொகைக்கான குடியிருப்புக்களால் இப்பிரதேசங்களில் தொழில் துறையினை தொடர்ந்து நடாத்தி செல்ல முடியாத நிலையும், இதனால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடிய அபாய நிலமையும்; ஏற்பட்டுள்ளது.

விவசாய காணிகள் மற்றும் இயற்கை ஒதுக்கங்கள் தவிர்த்து தொழில் துறை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடிய சொற்ப அளவிளான அரச காணிகளும், வெளிப்பிரதேச முதலீட்டாளர்களுக்கு பல நூறு ஏக்கர்களாக நீண்ட கால குத்தகைகளுக்கு பிரித்து வழங்கட்டு வருவதோடு; இப்பிரதேச தொழில் துறைகளும், அவற்றை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களும் யாராலும் கவனத்தில் எடுக்கப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளமையும், இன்னும் சில வருடங்களுக்குள் இத்தொழில் துறைகள் மூடப்பட்டும், கைவிடப்பட்டும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தொழில்களை இழந்து நடுத் தெருவிற்கு வரும் அபாயகரமான நிலையும் இப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளது.

நிதி அமைச்சு, பொருளாதார அபிவிருத்தியுடன் தொடர்பான அமைச்சுக்கள், கைத்தொழில் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு என்பன தொழில் துறைகளை விருத்தி செய்து மேம்பாடு செய்து முறைமைப்படுத்துவதற்கான பல இலாகாக்களை கொண்டிருந்த போதிலும் இவற்றால் இப்பிரதேச தொழில் முனைவோர்களும், தொழில் துறை சார்ந்தோரும் எதுவித நன்மைகளையும், தொழில் பாதுகாப்புக்களையும் இதுவரை பெற்றிருக்கவில்லை.

இவ்விடயங்கள் தொடர்பாக கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி தொழில் முனைவோர் சம்மேளனத்தின் நிர்வாகத்தினர் கௌரவ சுற்றாடல் அமைச்சர் அல்-ஹாஜ் நசீர் அஹமட் அவர்களை நேற்று 07.06.2023 அமைச்சில் சந்தித்து கலந்துரையாடலொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இச்சந்திப்பின் போது இப்பிரதேச தொழிற்துறைகளும், தொழில் முனைவோரும் எதிர் நோக்கும் மேற்படி நெருக்கடியான நிலமைகள் தொடர்பாக ஆராயப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பான தொடர் முன்னெடுப்புகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதனால் இப்பிரதேச தொழில் முனைவோருக்கும் இவற்றை வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கும் பொருத்தமான தீர்வுகள் அரசாங்கத்திடமிருந்து விரைவில் கிடைக்கப்பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது. கௌரவ சுற்றாடல் அமைச்சர் அவர்கள் இவ்விடயத்தில் காட்டும் கரிசனை மிக்க அக்கறைகளும், துரித நடவடிக்கைகளும் அனைவராலும் வெகுவாக வரவேற்கப்படுகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :