புனைப்பெயராலேயே புகழ்பெற்ற கலைவாதி கலீல் இறையடி சேர்ந்தது பெரும் கவலையளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கலைவாதி கலீல் அவர்களின் மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது,
"மன்னார், மூர்வீதியை பிறப்பிடமாகக்கொண்ட கலீலின் பூர்வீகமே கல்வியோடுதான் கட்டுண்டிருக்கிறது. அவரது சகோதரர்களான வித்துவான் ரஹ்மான், ஒளிப்படைத்துறை கபூர், மக்கள் கபூர் ஆகியோரும் பிரதேசத்துப் பிரபல்யங்கள்தான்.
மன்னார் நல்லாயர் பாடசாலையில் ஆரம்பக்கல்வியை ஆரம்பித்த கலைவாதி கலீல், மன்னார் அஸ்ஹர் கல்லூரியில் உயர்கல்வியைத் தொடர்ந்தார். ஆசிரியராக ஆரம்பித்த இவரது தொழிற்துறை பல்வேறு பரிணாமங்களாக புகழ்பெறத் தொடங்கியது. அழுத்கமை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர், ஓவியர் மற்றும் குறுங்கலை நடிகராகவும் திகழ்ந்தவர்.
ஊடகத்துறையும் இவருக்கு கை தேர்ந்த கலையாகவே இருந்தது. ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஊற்றுக்கண்களில் கலைவாதியின் கடமைகள் கனதியாக இருந்தன.
வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்களில் ஒன்றான "வில்பத்து" குறித்து ஒரு நூலையே ஆக்குமளவுக்கு கலைவாதி கலீலின் ஆளுமைகள் இருந்தன. "கலைவாதி" என்ற புனைப்பெயரில்லாமல் இவரை அடையாளம்காண முடியாது.
அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுச் சென்றுள்ள கலைவாதி கலீலை அழைத்தவனே பொறுப்பேற்பானாக..!
எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இழப்பை தாங்கிக்கொள்ளக் கூடிய மன தைரியத்தையும் பொறுமையையும் வழங்குவானாக..!
0 comments :
Post a Comment