திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.கலீலுர் ரஹ்மான் ஆகியோர் இடையீட்டு மனுதாரர்களாக நுழைந்த கல்முனை உப பிரதேச செயலக வழக்கின் இடையீட்டு மனுதாரர்களாக நீதிமன்றம் அவர்களை ஏற்றுக்கொண்டுள்ளது.
கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்வு தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வரும் சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மேன்முறையீட்டு நீதிமன்றில் கல்முனை விவகாரம் தொடர்பில் சில மாதங்களுக்கு முன்னர் தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று (07) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு நீதிபதிகள் குழாமினால் விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தாக்கல் செய்திருந்த வழக்கின் இடையீட்டு மனுதாரர்களாக கல்முனையை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.கலீலுர் ரஹ்மான் ஆகியோர் நீதிமன்றுக்கு தாக்கல் செய்திருந்த இடையீட்டு மனுவை ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்ற குழாமுக்கு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கடந்த தவணையில் கோரிக்கை விடுத்திருந்த போது வழக்காளியான பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அந்த கோரிக்கைக்கு எதிராக தனது கடுமையான ஆட்சபனையை அன்று வெளியிட்டார். அத்துடன் இடையீட்டு மனுவை நீதிமன்றம் ஏற்க கூடாது என்றும் இடைக்கால தீர்வை நீதிமன்றம் வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தனது வாதத்தில் நீதிமன்றுக்கு கடந்த தவணையில் போது முன்வைத்தார்.
எதிர்தரப்பினரிடமும், சட்டமா அதிபர் திணைக்களத்திடமும் இந்த இடையீட்டு மனு தொடர்பில் வினவிய நீதிபதிகள் குழாம் இந்த இடையீட்டு மனுவை ஏற்பது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தரப்பினது ஆட்சபனையை வழங்க ஒரு வார கால அவகாசமும் இடையீட்டு மனுதாரர்களின் ஆட்சபனைக்கான பதிலை நீதிமன்றுக்கு வழங்க ஒருவாரம் அவகாசம் வழங்கியிருந்த நிலையில் இன்று இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்து இந்த இடையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான சஞ்சீவ ஜெயவர்த்தன, பைஸர் முஸ்தபா உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகி வாதிட்டனர். இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கோரியியிருந்த இடைக்கால தீர்வுக்கும் தமது ஆட்சபனைகளை அவர்கள் தெரிவித்திருந்தனர். இதுவிடயமாக எழுத்துமூல ஆட்சபனை அறிக்கையை வழங்க இடையீட்டு மனுதாரர்களுக்கு ஒருவாரமும் அந்த அறிக்கைக்கு பதிலறிக்கை வழங்க கலையரசன் எம்.பி சார்பிலான சட்டத்தரணிகளுக்கு ஒருவார கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த தவணை ஜூலை 12 இல் நடைபெறவுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பில் தமிழ் மக்களிடமும், முஸ்லிம் மக்களிடமும் பலத்த வாதபிரதி வாதங்கள் சில தினங்களாக இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பை மக்கள் எதிர்பார்த்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment