தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தருக்கு எதிராக முன்னாள் மேல்மாகாண ஆளுநர் ஆசாத்சாலி அவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பத்திரிகையாளர் மாநாட்டினை நடாத்தியிருந்தார். அதில் தனது சகோதர இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக சிங்கள மொழியிலேயே குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தார்.
ஆசாத் சாலியின் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் அவர்கள் உடனடியாக மறுத்திருந்தார். கடந்த காலங்களில் பலவிதமான ஊழல் குற்றச்சாட்டுக்களும், பணம் பெற்றுக்கொண்டு தொழில் வழங்கினார்கள் என்றெல்லாம் பலமான குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோதிலும் இதுபோன்று எவரும் மறுப்பு தெரிவித்ததில்லை.
ஆசாத் சாலியின் சிங்கள மொழியிலான குற்றச்சாட்டுக்கள் மூலமாக அவரது அரசியல் உள்நோக்கத்தினை புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.
அதாவது கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக கெடுபிடிகள் இருந்தபோது ஹிஸ்புல்லாவின் “மட்டக்களப்பு கெம்பஸ்” மூடப்பட்டதுடன், தென்கிழக்கு பல்கலைக்கழகம் பற்றி பல சர்ச்சைகள் சிங்கள இனவாதிகளினால் தோற்றுவிக்கப்பட்டதோடு அது பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது.
தற்போது சிங்கள இனவாதிகள் சற்று ஓய்வடைந்திருக்கின்ற நிலையில் அவர்களது காதுகளுக்கு இந்த செய்தியை எத்திவைத்து இனவாதிகளை உசுபேத்துவதன் மூலம் மீண்டும் தனது சூடேற்றும் அரசியலை முன்னெடுக்கும் நோக்கிலேயே ஆசாத் சாலி அவர்கள் தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்களை சிங்கள மொழியில் முன்வைத்திருப்பதாக தெரிகிறது.
நாங்கள் ஒரு உண்மையை புரிந்துகொள்ள வேண்டும். அதாவது கிழக்கு முஸ்லிம்களை “மட்டக்களப்பான், கிழக்கான், கரையான்” என்று மேற்கில் உள்ள மேலாதிக்கவாத முஸ்லிம்களினால் கொச்சையான வார்த்தைகளைக்கொண்டு அழைக்கப்படுவது வழமை.
கிழக்கிலிருந்து முஸ்லிம்களுக்கு அரசியல் தலைமை உருவாகுவதனையோ, சுயாட்சி அதிகார அலகு, அரசியல் அதிகாரம் அல்லது ஆகக்குறைந்தது கரையோர மாவட்டம் அமைவதனையோ மேற்கில் உள்ள மேலாதிக்கவாத முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் முஸ்லிம்களுக்கு தலைமை வகித்தபோது மேற்கில் உள்ள எந்தவொரு முஸ்லிம் தலைவர்களும் அவரை ஏற்றுக்கொண்டதில்லை. ஆனால் ரவுப் ஹக்கீம் தலைமைக்கு வந்தபோது அவரை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இது முஸ்லிம்களிடம் காணப்படுகின்ற வர்க்க அல்லது பிரதேச வேறுபாடுகளை காட்டுகின்றது.
அதாவது கிழக்கில் உள்ள முஸ்லிம்கள் எப்போதும் மேற்கில் உள்ள அரசியல் தலைமைகளுக்கு கட்டுப்பட்டு அடிமைகளாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகும்.
இன்றைய தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் கிழக்கை சேர்ந்தவர் என்பதனாலும், கிழக்கில் முஸ்லிம்களின் ஆதிக்கத்தில் இவ்வாறான பல்கலைக்கழகம் ஒன்று இருப்பதில் உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் சந்தர்ப்ப சூழ்நிலையை ஆசாத் சாலி அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம்.
உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் அவர்கள் ஊழல் செய்திருந்தால் அவர் சட்டப்படி விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படல் வேண்டும். ஆனால் அவ்வாறில்லாமல் ஊடக மாநாடு மூலமாக மாத்திரம் ஊழல்வாதி என்று மானபங்கப்படுத்துல் தண்டனையாகாது. மாறாக இது அரசியல் நோக்கம் கொண்டதும், காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகின்றது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
0 comments :
Post a Comment