மாளிகைக்காடு பிரதேசத்தில் தீவிரமடைந்து வருகின்ற கடலரிப்பை கட்டுப்படுத்துவதற்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவசர நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்.
இதன் பிரகாரம் கடலரிப்பை கட்டுப்படுத்துவதற்கான முதற்கட்ட தற்காலிக ஏற்பாடாக உடனடியாக லியோ பேக்கில் மண் நிரப்பி கரையோரத்தை அரிப்பிலிருந்து பாதுகாப்பதற்கான வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு கரையோரம் பேணல் திணைக்களம் முன்வந்திருக்கிறது.
இப்பிரதேசத்தில் தீவிரமடைந்துள்ள கடலரிப்பு காரணமாக கலாசார மண்டபம் உள்ளிட்ட கட்டிடங்களும் வாடிகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீனவர் அமைப்புகள் மற்றும் மாளிகைக்காடு கிழக்கு வட்டார முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் எம்.எச்.நாஸர் உள்ளிட்டோர் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் கவனத்திற்கு இப்பிரச்சினையை கொண்டு சென்றதையடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை (04) மாலை, அதிகாரிகள் சகிதம் அவர் இப்பகுதிக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார்.
அம்பாறை மாவட்ட கரையோரம் பேணல் தினைக்களப் பொறியியலாளர் எம்.துளசிதாஸன், காரைதீவு பிரதேச செயலாளர் ஜே.ஜெகராஜன், கல்முனை மாவட்ட கடற்றொழில் உதவி ஆணையாளர் எஸ்.ஸ்ரீரஞ்சன் மற்றும் உத்தியோகத்தர்கள் சிலரும் இதில் பங்கேற்றிருந்தனர்.
இவ்வுயர்மட்டக் குழுவினர் சேதமடைந்த இடங்களைப் பார்வையிட்டதுடன் மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகம், ஜனாஸா நலன்புரி அமைப்பு, மொத்த மீன் வியாபார வர்த்தக சங்கம், ஆழ்கடல் மீன்பிடிச் சங்கம், சிறு படகு உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட பிரதிநிகளுடன் கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் வேண்டுகோளுக்கு அமைவாக முதற்கட்ட ஏற்பாடாக லியோ பேக்கில் மண் நிரப்பி கரையோரத்தை அரிப்பிலிருந்து பாதுகாப்பதற்கும் இவ்வேலைத் திட்டத்தை நாளை வியாழக்கிழமை (06) ஆரம்பிப்பதற்கும் அதனைத் தொடர்ந்து நிரந்தத் தீர்வொன்றை துரிதகதியில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கரையோரம் பேணல் தினைக்களப் பொறியியலாளர் எம்.துளசிதாஸன் உறுதியளித்தார் என்று மாளிகைக்காடு கிழக்கு வட்டார முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் எம்.எச்.நாஸர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment