பாகிஸ்தானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாறூக் புர்கி நேற்று முன்தினம் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மற்றும் அட்டாளைச்சேனை உள்ளிட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்து, பல்வேறு பொது நலத் திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.
வை.எம்.எம்.ஏ. பேரவையின் அழைப்பின் பேரில், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும் ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபருமான ரஹ்மத் மன்சூர் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.
சுத்தமான குடிநீரை வழங்கும் வேலைத் திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் நிதி ஒதுக்கீட்டில் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட குழாய்க் கிணறுகள் மற்றும் பொதுக் கிணறுகள் இதன்போது பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரால் திறந்து வைக்கப்பட்டன.
அத்துடன் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களையும் அவர்களின் வாழ்விடங்களையும் பார்வையிட்ட உயர்ஸ்தானிகர், அவர்களது தேவைப்பாடுகளை கேட்டறிந்து கொண்டதுடன் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் மற்றும் புத்தகப் பைகள், மென்பந்து கிரிக்கெட் துடுப்பு மட்டைகள், கால்பந்துகள் என்பவற்றையும் வழங்கி வைத்தார்.
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பிலும் கலந்து கொண்டு உரையாடினார். சுமார் 80 வருட வரலாற்றைக் கொண்ட இப்பாடசாலைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளவிருப்பதாகவும் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேஷன் சார்பில் நினைவுச் சின்னம் ஒன்றும் உயர்ஸ்தானிகருக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், உயர்ஸ்தானிகரும் ரஹ்மத் பவுண்டேஷனுக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி கெளரவித்தார்.
0 comments :
Post a Comment