இன மத மொழி வேறுபாடுகளின்றி மக்கள் சேவையை முன்னெடுத்த மாமனிதர் மர்ஹும் கலாநிதி ஏ.ஆர். மன்சூர் மறைந்து கடந்த செவ்வாய்க்கிழமை(25) ஆறு ஆண்டுகள் பூர்த்தியாகின்றது.
கிழக்கு மாகாணத்தில் அனைத்து இன மக்களாலும் போற்றப்படும் அரசியல்வாதியாக விளங்கிய முன்னாள் அமைச்சரும் கல்முனைத் தொகுதியின் முன்னாள் எம்.பியுமான ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் ஆறாவது நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர். மன்சூர் மரணமடைந்து ஆறு வருடங்கள் நிறைவினை தொடர்ந்து அவருக்காக வேண்டி கத்முல் குர்ஆன் நிகழ்வு மற்றும் விஷேட துஆப் பிரார்த்தனைகள் செவ்வாய்க்கிழமை (25) இரவு ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகரும்இ கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
கல்முனைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக, முல்லைத்தீவு_ யாழ்ப்பாண மாவட்ட அமைச்சராக, மறைந்த முன்னாள் ஜனாதிபதிஆர். பிரேமதாச காலத்தில் வர்த்தக வாணிப கப்பல்துறை அமைச்சராக, கிழக்கு மாகாண பாதுகாப்பு கவுன்ஸிலின் உயர்பீட அங்கத்தவராக, 2003ஆம் ஆண்டில் குவைத் நாட்டின் தூதுவராக பல பதவிகளை வகித்தவர் அவர்.
1933.05.30 இல் கல்முனைக்குடியில் எக்கீன் தம்பி ஆலிம் அப்துல் றஸாக் அவர்களுக்கும், முகம்மது அப்துல் காதர் சரீபா உம்மா அவர்களுக்கும் ஆறாவது பிள்ளையாக பிறந்த இவர் 1939-_1943 காலப்பகுதியில் கல்முனைக்குடி அல்-அஸ்ஹர் பாடசாலையில் ஆரம்பக்கல்வியைப் பெற்று 1943 ஆண்டு ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தார். அதன் பின்னர் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையில் ஆங்கிலத்தை ஆர்வமாக கற்றதன் காரணமாக மட்டக்களப்பு சிவானந்தா உயர்தரப் பாடசாலையில் இரண்டாம் நிலைக் கல்வியை கற்று உயர்கல்விக்காக கொழும்பு சென் ஜோசப் கல்லூரியில் சேர்ந்தார்.
பின்னர் 1955 ஆம் ஆண்டு இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து 1958 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற சட்டத்தரணியானார். கல்முனைத் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹும் கேற் முதலியார் எம்.எஸ். காரியப்பரின் மூன்றாவது புதல்வியான ஸொஹறா காரியப்பரை திருமணம் செய்து கொண்டார்.
1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் கல்முனை தொகுதியில் ஐ.தே. கட்சி அபேட்சகராக போட்டியிட்டு 5547 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராகி,1979 இல் யாழ்ப்பாண மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அமைச்சரானார். 1989 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராகவும், அதே வருடத்தில் வர்த்தக கப்பல்ததுறை அமைச்சராகவும், அதன் பின்னர் வர்த்தக கப்பற்துறை, வாணிபத்துறை அமைச்சராகவும் நியமனம் பெற்றார்.
17 வருடங்கள் தனது அரசியலை புனிதமாகவும், நேர்மையாகவும், களங்கமில்லாமலும் ஆற்றியவர் இவர். கல்முனை நவீனசந்தை. பொதுநூலகம், நீதிமன்றக் கட்டடத் தொகுதி,பிரதேச செயலகங்கள், கல்முனை செயலகக் கட்டடம், பாடசாலைகள், இஸ்லாமாபாத் குடியேற்றத் திட்டம், கல்முனை இலங்கை வங்கிக் கட்டடம், கல்முனை பொலிஸ் நிலையக் கட்டடம், மருதமுனை மக்கள் மண்டபம், மருதமுனை இரு பெரும் வீட்டுத் திட்டங்கள் உட்பட அன்னார் ஆற்றிய பணிகள் ஏராளம். அநேக இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுத்தார்.1992 ஆம் ஆண்டு அநேக தொண்டர் ஆசிரியர்களின் நியமனங்கள் இவரின் சிபாரிசிலேயே வழங்கப்பட்டன.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் 20.03.2016 இல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் இவரின் சேவையைப் பாராட்டி கலாநிதி பட்டம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அன்னார் இப்பிரதேச மக்கள் உள்ளத்தில் என்றும் வாழ்கின்றார்.
0 comments :
Post a Comment