ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு மீளப்பெற முடியாததும் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு தீர்வினை வழங்க வேண்டும் எனும் மக்கள் பிரகடனம் நேற்று (31) திங்கட்கிழமை மல்வத்தையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் துரையப்பா காத்தவராயன் தலைமையில் நேற்று மக்கள் ஒன்றுகூடி மல்வத்தை சித்தி விநாயகர் ஆலயமருகில் வைத்து அச்சிடப்பட்ட மக்கள் பிரகடனத்தை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தனர்.
மக்கள் வரிசையில் நின்று 13 ஆவது திருத்தம் மற்றும் சமஸ்டி தொடர்பிலான பல பதாகைகளை தாங்கிய வண்ணம் குரல் எழுப்பினர்.
"கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மக்களுக்கான தீர்வினை நோக்கிய 100 நாள் செயற்பாட்டு திட்டத்தின் இறுதிநாளில் வெளியிடப்பட்ட மக்கள் பிரகடனம் வடக்குக் கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடன் நேற்று அதன் ஒருவருட நிறைவில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இதன்மூலம் தமிழ்பேசும் மக்கள் உட்பட வடக்குக்கிழக்கில் வாழும் மக்கள் கௌரவமாக வாழ வழி சமைக்கும் "எனவும் இணைப்பாளர் துரையப்பா காத்தவராயன் தெரிவித்தார்.
அத்தோடு இந் நிகழ்வில் அம்பாரைமாவட்ட சிவில் செயற்பாட்டாளர்கள் சமூக நலன்விரும்பிகள் பெண்கள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் யுவதிகள் 500 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளையும் முன்வைத்தனர் .
0 comments :
Post a Comment