அஸ்ஹர் இப்றாஹிம்-
முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேசச் செயலகத்திற்குட்பட்ட நித்தகைக் குளம் பகுதிக்கு மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் , கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சருமான கௌரவ காதர் மஸ்தான் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு ஒன்று களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.
உள்நாட்டில் நடைபெற்ற யுத்தம் காரணமாக குறித்த பகுதியில் பல ஆண்டுகளாக பயிர் செய்யப்படாத வயல் நிலங்கள் காடுகளாகவும், புற்கள் வளர்ந்து புதர்களாகவும் காணப்படுகின்றன.
இவற்றில் சில பகுதிகளை வனவளத் திணைக்களத்தினர் வனப்பகுதிக்கு சொந்தமான இடமாக எல்லைப்படுத்தியுள்ளனர்.
இதனால் விவசாயத்தினை வாழ்வாதாரமாகக் கொண்ட விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பிலும் நித்தகைக் குளம் உடைப்பெடுத்து இன்றுவரை சீர்செய்யப்படாமை தொடர்பிலும், நித்தகைக்குளத்தின் பிரதான வாய்க்காலினை எதிர்காலத்தில் புனரமைப்பு செய்தல் தொடர்பிலும் இந்த கள விஜயம் அமைந்திருந்தது.
இந்த கள விஜயத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்(நிர்வாகம்), கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. உமாமகள்,மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர், மாவட்ட நில அளவையாளர், மாவட்ட வன அதிகாரி, காணிப்பகுதி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment