நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் பொறிமுறை திருமலையில் ஆரம்பம்

யற்கையின் மடியில் இமயமாய் உயர்ந்து அயல் நாட்டவர்கள் ஆக்கிரமிக்க துடிக்கும் பல்வேறுபட்ட சிறப்பம்சங்களை கொண்டு மிளிரும் நம் நாட்டின் இன்னுமோர் பொக்கிஷமாய் துலங்குவது பல்லின சமூகக் கட்டமைப்பைக் கொண்ட சமுதாய அமைப்பு. 

இதன் அடிப்படையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ,கிறிஸ்தவர் என தத்தம் சமய கலாச்சார அடிப்படையில் வேறுபட்டாலும் தமிழ் ,சிங்களம் ஆகிய மொழிகளே இங்கு பிரதானமாக பேசப்பட்டு வருவது சமத்துவப் படுத்தப்பட்ட சமூகக் கட்டமைப்பின் வெளிப்பாடே எனின் மிகையாகாது. அந்த வகையில் மனிதனையும் விலங்குகளையும் வேறுபடுத்திக் காட்டும் மிகச்சிறந்த நாகரீகத்தின் அடிகோலாகஅமைவது மொழி. சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ,மனிதநேயம் ஒருமைப்பாடு ,இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை போன்றவற்றை வளர்த்தெடுக்கின்ற மிகச்சிறந்த தொடர்பாடல் ஊடகமாக மொழி திகழ்வதே அதன் சிறப்பம்சம்.

அந்த அடிப்படையில் எமது நாட்டில் தமிழ், சிங்களம் ,ஆங்கிலம் போன்ற மொழிகள் நடைமுறையில் இருந்து வந்தாலும் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளுமே அரசகருமமொழியாக ஏற்கப்பட்டுள்ளது. இது இந்நாட்டில் வாழும் இரண்டு மொழி பேசும் மக்களையும் கௌரவித்து அங்கீகாரம் வழங்கும் செயற்பாட்டின் அடையாளம் எனலாம் . 

இன்று அரச திணைக்களங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தொடக்கம் உயர் அதிகாரிகள் வரை யாவருமே தம் தாய் மொழிக்கு அடித்தபடியாய் இரண்டாம் மொழியினை கற்றல் என்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளமை பாராட்டிற்குரிய விடயமாகும். அரசின் இக் கொள்கையின் ஊடாக இந்நாட்டில் வாழும் சகல பிரஜைகளினதும் தேவைகள் மற்றும் அபிலாசைகள் போன்றன சரியான முறையில் நிறைவேற்றப்படும் என்பதில் ஐயமில்லை ."இலங்கையில் எப் பிரதேசத்திலும் சென்று சேவை செய்ய தயார் "என்ற வாக்குறுதியின் அடிப்படையில் பணிகளைப் பொறுப்பேற்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் தம் கடமையை சரிவர நிறைவேற்றுவதற்கான சிறந்த ஆயுதமாகவே இந்த இரண்டாம் மொழி கற்கை என்பது அமைகின்றது .

எமது நாட்டில் திட்டங்கள் வகுக்கப்படுவதும் காலப்போக்கில் அவை காணாமல் போய் கை நழுவ விடப்படுவதும் சாதாரனமான போதும், தற்போது இரண்டாம் மொழிக்கென வரையப்பட்ட மொழி உள்ளடக்கமும் பாடத்திட்ட நடைமுறைகளும் நாடு பூராகவும் சிறப்பாய் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுவதுடன் அவை வெற்றி நடை பயில்வதனையும் காண முடிகின்றது . அதற்கு காரணம் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் இப்பாட நெறிக்கென தனித்துவமான பாடத்திட்டம் ஒன்றை வகுத்துள்ளதோடு அது எமது அன்றாட வாழ்வியலுடன் இணைத்து செயல்படுத்தும் விதமாகவும், அனைத்து விடய தானங்களும் அமையப்பெற்றுள்ளதாகும். 

 "ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது" என்பது போல நாம் பல்வேறு விடயங்களைப் பயின்று, எழுதி புத்தகப் பூச்சிகளாய் பெறுபேறுகளைப்பெற்று சித்தி பெறுவதில் என்ன பயன்? எமது வாழ்வியல் நடவடிக்கைகளோடு அவை கைகோர்த்து பயணிக்கையில் அதன் தரம் மேலும் அட்டை தீட்டப்பட்டு ஜொலிக்க ஆரம்பிக்கும். அவ்வாறே கற்கை நெறியின் ஊடாக பேச்சு மொழிப் பயிற்சி வழங்கப்படுவதும் கற்கை முடிவு வரை அம்மொழியிலேயே பேச வேண்டும் என்ற நியதிகள் எமது மொழித் திறனை மேலும் அதிகரிக்கும் என்பது வெள்ளிடை மலை. அத்தோடு இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற சிறந்த வளவாளர்களும் தேசிய ரீதியாக தெரிவு செய்யப்பட்டு இப்பாட நெறியில் பங்கேற்பது மேலும் இத் திட்டத்தை வலுப்பெற செய்கின்றது. அந்த வகையில் இரண்டாம் மொழியாக சிங்கள மொழியினைக் கற்றுக் கொண்டிருக்கும் எனக்கு இக்கற்கை நெறியைத்தொடர்வதற்கு வாய்ப்பளித்து இன்று எனது இக் கட்டுரையாக்க முயற்சிக்க்கு முதுகெலும்பாய் நிற்பது எழுத்தாணி கலைப் பேரவையே. 

நாடளாவிய ரீதியில் இரண்டாம் மொழிக் கற்கை நெறியானது பல்வேறு விதமாகவும் நடாத்தப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில்தான் தேடும் தேடுபொருளின் திறவுகோலாய்க் கிடைத்த ஊடகவியலாளர்களை மையமாகக் கொண்டு ஊடகவியலாளர்களுக்கான இரண்டாம் மொழி கற்பித்தல் எனும் துடுப்பின் மூலம் தம் நிறுவனத்தின் எடுகோலாய் அமைந்த சமாதானத்தையும் இன நல்லிணக்கத்தையும் கட்டி எழுப்புதல் எனும் இலக்கை அடைவதற்கென சிறந்த திட்டமிடல் ஒன்றின் மூலம் அதன் வெற்றியின் உச்சத்தில் எழுத்தாணி கலைப் பேரவை நிற்கின்றது எனின் மறுப்பதற்கில்லை. வெளியே நின்று எட்டிப் பார்ப்போருக்கு எழுத்தாணியின் செயல்பாடு சாதாரண ஒரு விடயமாக தோன்றினும் அதில் உள் நுழைந்தவர்க்கே அவர்களது திட்டமிடலும் அதனை செம்மையாக நடைமுறைப்படுத்தும் நுட்பமும் இதனிடையே பெறப்படுகின்ற அடைவுகளின் உயர்ந்த மட்டமும் புரியும். 

சமாதானம் நல்லிணக்கம் போன்றவற்றை கட்டி எழுப்பும் நோக்கத்தோடு நாடளாவிய ரீதியில் எத்தனையோ நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்ற போதிலும் அவர்களால் நீண்ட கால செயற்பாடுகளின் மூலம் எட்ட முடியாத வெற்றியினை குறுகிய ஆறு மாதங்கள் என்ற கால இடைவெளியில் எமது எழுத்தாணிப் பேரவை அடைந்துள்ளது. அதற்குக் காரணம் சிறந்த திட்டமிடல் நடைமுறை ஒன்றின் மூலம் அதன் தலைமையோடு இணைந்த பணிக்குழாத்தினர் மிகச் சிறப்பாக செயல்பட்டமையே. மிகச் சுலபமாக என்பதை விட நூறு சதவீதம் வெற்றிகரமாக அமைய காரணமாக அமைந்தது என்பதுடன் அவர்களின் திட்டமிடல்களையும் இவ்விடத்தில் படம் போட்டுக் காட்டப்பட வேண்டிய தேவை உள்ளது.

ஏனைய கற்கை நெறிகளில் சிங்களம் கற்கும் தமிழ் மொழி மூல மாணவர்கள் அல்லது தமிழ் மொழி கற்கும் சிங்கள மொழி மூல மாணவர்கள் மாத்திரமே கற்கையாளர்களாக இணைக்கப்படுவர் .ஆனால் எமது நெறியில் சிங்கள மொழி பேசும் மாணவர்களும் தமிழ் மொழி பேசும் மாணவர்களும் இணைக்கப்பட்டிருந்தமை இதன் வெற்றி படியின் முதல் இரகசியம். ஆரம்பத்தில் ஒரு சில வகுப்புகள் தனித்தனியாக நடாத்தப்பட்ட போதிலும் எமக்கு அடிப்படை மொழியறிவு ஏற்படுத்தப்பட்ட காலப்பகுதியின் பின்னர் இரு மொழி மாணவர்களையும் இணைத்து இடையிடையே வகுப்புகள் நடத்தப்பட்டமை நாம் வகுப்பில் கற்ற விடயங்களை அனுபவ ரீதியாக பயன்படுத்த சிறந்து வாய்ப்பாக அமைந்தது. 

ஏனெனில் எம்மில் அதிகமானோர் அனேகமாக தமிழ் மொழி வசப்பட்ட சேவை செய்யும் அலுவலகங்களில் சேவையினை முன்னெடுத்துச் செல்பவர்களாகவும் இருக்கின்றோம். ஆரம்ப வகுப்பில் சிறு புன்னகையுடன் நட்பினை மேற்கொண்ட நாம் பின்னர் எம் சகோதரமொழி பேசும் நண்பர்களோடு சிறுகச் சிறுக பேசி கதைக்க ஆரம்பித்தோம். அப்போது எமக்குள் எம்மால் சிங்களம் பேசுவது கஷ்டமான காரியம் அல்ல என்ற தன்னம்பிக்கை பிறக்க ஆரம்பித்தது. அவர்கள் எம்முடன் தமிழ் மொழியில் பேசினர். பிழைகள் ஏற்படும் போது அவற்றை சரிப்படுத்திக் கொண்டோம். சிங்களம் பேசுவதில் இதுவரை இருந்த பயமும் வெட்கமும் எங்கு சென்றதோ இதுவரை யாமறியோம்.

அங்கு செல்லும்போது மனதில் ஏதோ பயமும் சஞ்சலமும் பின் பின்தொடர்ந்தது. ஒரு நாள் முழுவதும் குறைந்தது ஆறு மணித்தியாலங்கள் அவர்களுடன் இருப்பதை நினைக்கையில் நெஞ்சின் நடுவில் பெரும் பாரங்கல்லை வைத்து விட்டது போல பெரும் மன அழுத்தம். அவரது வீட்டிற்குச் செல்லும் முன் தொலைபேசியில் உரையாடினோம். எனக்குத் தெரிந்த சிங்களமும் அவருக்குத் தெரிந்த தமிழும் முகவரியை அறிய உதவியது. வீட்டு வாசலை அடைந்ததும் ஒரு குடும்பமே என் வருகைக்காக காத்திருந்தது. என்னை அவர்களது கலாச்சார முறைப்படி கைகூப்பி வணக்கம் தெரிவித்து வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர் அவ்விடத்திலேயே என்னுள் குடி கொண்டிருந்த தேவையற்ற கற்பனா சக்தியுட னான பயமும் உள்ளத்தின் பாரமும் உதிர்ந்து விழுந்தன.

இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் மொழிக்கு மிகப்பெரிய பலம் உண்டு என்பதை உணர முடிந்தது. இந் நிகழ்வின் மூலம் நாங்கள் எமது கருத்துக்களை பரிமாறவும் உணர்வுகளை மற்றவர்கள் புரியும் படி வெளிப்படுத்தவும் இரண்டாம் மொழியில் எமக்கு பாலமானது. இலங்கையில் செயல்படும் பல்வேறு நிறுவனங்களும் தமது நோக்கத்திற்கு அப்பால் இவ்வாறான சமுதாய நலன் மிக்க நிகழ்வுகளை மேற்கொள்ளும் இடத்து இனங்களிடையே புரிந்துணர்வு அதிகரித்து ஐயம் தெளிந்து இன்பமிக்க நன்நாடு ஒன்றை உருவாக்கலாம் என்பதில் ஐயமில்லை.அவர்களது கலாச்சார நடைமுறைகள் யாவும் மிகுந்த மனிதாபிமானத்துடன் இணைந்திருந்தது.

 ஓரிரு மணித்தியாலங்களில் நானும் அவர்களது குடும்பத்தில் ஒருத்தியாய் இருப்பது போல் உணர வைத்தது. அவர்களது நடைமுறை பண்பாடு என்பது ஒரு தனி மனிதன் தம் குடும்பத்தாருடனும் உலகத்தோடும் நற்பண்புகளுடன் பொருந்தி வாழ்வது என பல்கலைக்கழகத்தில் கற்றதை எனக்குள் ஞாபகப்படுத்துவதாய் உணர்ந்தேன். அவர்கள் சில மரபு வழி நடைமுறைகளை பின்பற்றுகின்றனர். விருந்தினராய் வந்த எமக்கு நீர் குவளைகளை தொடும்படி கூறினர். 

எனக்கு இது புதிது. காரணம் வினவினேன். உபசாரங்கள் எதனையும் ஆரம்பிக்கும் முன் தமது மரபு வழி நடைமுறை எனக் கூறி எனக்கு பல்வேறு உணவுகளையும் அவர்களது கலாசாரத்தை காண்பிக்கும் விதத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். அவர்கள் தம் குடும்பத்தாருடன் மிகவும் அன்னியோன்யமாக பெறுகின்றனர். வீட்டு வேலைகள் முதல் சிறு தோட்ட வேலைகள் வரை குடும்பத்தில் சகல உறுப்பினர்களதும் பங்கு பற்றுதல் இருப்பதை காண முடிந்ததுடன் அவர்கள் தமது உணவுக்கானவற்றுள் பெரும்பாலானவற்றை தம் வீட்டுத் தோட்டங்களிலேயே உற்பத்தி செய்கின்றனர். 

அதுவும் எனக்கு மிகவும் பிடித்தமான விடயமானது. அத்தோடு அவர்களி டம் இன்னும் விறகடுப்புகளில் சமைக்கும் பண்பாடும் மண்சட்டி பானைகளை பயன்படுத்தும் நடைமுறையும் காணப்படுகின்றது. இவை அவர்களது ஆரோக்கியத்திற்கும் மகிழ்ச்சிகரமான வாழ்விற்குமான ரகசிய நடைமுறையாக இருக்கலாம் என மனதால் எண்ணினேன்.


ஆரம்பத்தில் எழுத்தாணி கலை பேரவையின் மூலம் நடத்தப்படும் இக்கற்கை நெறியின் இறுதியில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிர்வகத்தின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ் ஒன்றை மட்டுமே பெற்றுக் கொள்ளும் நோக்கத்தோடு வருகை தந்த என் போன்ற பலரும் அடுத்த வகுப்பிற்கான நாளை எதிர்பார்த்து வகுப்பிற்கு வர ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் சிங்களம் என்பதில் சிக்கல்பட்டு எமது தொழில் புரியும் இடங்களில் மாத்திரமன்றி கடைகள், வீதிகள் ,போக்குவரத்து போன்ற எல்லா இடங்களிலும் சிக்கித் தவித்த நாம் இப்போது அவர்களோடு சிங்களத்தில் பேச வேண்டும் என்ற ஆவலுடனே புறப்படுகின்றோம். 

எமது தேவைகளை நிறைவேற்றும் இடங்களில் சிங்கள சகோதரர்கள் வாழும் இடத்து அவர்களுடன் சிங்களத்தில் பேசவே முயற்சிக்கின்றோம். என்னை அறிந்த பலரும் எம்மை பாராட்டும் போது எழுத்தாணிக்கு மனதுக்குள் நன்றி சொல்ல தவறுவதில்லை. பேருந்தில் பயணிக்கும் போது தமிழ் பாடல்களை விட சிங்கள பாடல்களை ரசிக்கவும் அதில் வரும் சொற்பதங்களை மொழிபெயர்க்கவும் தாமாகவே மனது உந்துகின்றது. ஏதோ சிறிதாய் பொருள் விளங்குகின்றது. இதன் போதே மொழியானது இரசனை உணர்வைத் தூண்டும் சிறந்த ஓமோன் போன்றதாய் உணர்கின்றேன்.

ஆரோக்கியம் என்னும் போது தான் இன்னும் ஒரு விடயம் ஞாபகத்திற்கு வருகின்றது. அவர்கள் தமது வீட்டு தோட்டத்தில் ஒரு பகுதியில் சிறு மூலிகை தோட்டம் ஒன்றையும் வைத்திருக்கின்றனர். 

சிறிய உபாதைகள் நோய்கள் ஏற்படும் இடத்து அவர்களது மூதாதையர்களை பின்பற்றி வைத்தியம் செய்யக்கூடிய சிறந்த அறிவும் அவர்களிடையே காணப்படுவது எனக்கு ஆச்சரியத்தை தந்தது. இது பற்றி அங்கிருந்த வயது சென்ற ஒருவர் என்னோடு பேசிய போது சில மூலிகை செடிகளை காட்டி சிங்களத்தில் ஏதோ கூறினார். அவை அரைகுறையாக எனக்குப் புரிந்தாலும் எமது வாழ்வியல் நடைமுறையுடன் ஒப்பிடும்போது மிகவும் வித்தியாசமான ஒரு போக்கை உணர முடிந்தது. அது மாத்திரமன்றி நம் புத்தகங்களில் படங்களை பார்த்து எம் சந்ததியினருக்கு கற்பிக்கும் உரல், உலக்கை, அம்மி, சுளகு போன்றவற்றையும் அங்கு என்னால் காண முடிந்தது. மொத்தத்தில் அவர்கள் நாகரீக வளர்ச்சியுடன் கைகோர்த்து தம் வாழ்வியலை நடத்திச் சென்றாலும் தம் மூதாதையரின் கலாசாரம் மரபுகள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றை புறந்தள்ளி விட வில்லை என்பதுபோற்றக்கூடியதே.

மொழி ,கலாசார நடைமுறைகள் ,மரபு வழி செயல்பாடுகள் போன்றவற்றால் மாத்திரம் அவர்கள் எம்மில் இருந்து வேறுபடுகின்றனரே தவிர மானிடம் தொலைத்த முரடர்களாய் அவர்கள் இல்லை. அன்றைய நாளில் நான் அவர்களுடன் இணைந்து அவர்களது வழிபாட்டுத் தளங்களுக்குள் பிரவேசித்தேன். அங்குள்ள நடைமுறைகள், கட்டட நிர்மாணங்கள் பற்றிய ஒரு தெளிவு பிறக்கும் இடத்தே "ஒரே கடவுள் "தான் இந்த உலகில் மக்கள் மனங்களில் வெவ்வேறு வடிவங்களில் வாழ்கின்றார் என்பதை உணர நீண்ட நேரம் செல்லவில்லை. இவ்வாறு நான் இங்கு சொல்லிய அனுபவங்களை போலவே பல மறக்க முடியாத இனிமையான அனுபவங்களை பெற்று தந்த அந்த நாள் என்னுடைய வாழ்வியல் புத்தகத்தில் மறக்க முடியாத அட்டைப்படமாகியது. விடைபெற மனமின்றி விடை பெற்ற அந்த நாள் என்றும் எனது வாழ்வில் மறக்க முடியாத தடமானது.

அதன் பின்னர் அடுத்த வகுப்புகளில் என்னை போலவே என் நண்பர் பலரும் ஒருவரை ஒருவர் முந்தி தத்தம் சோசியல் கேதரிங் அனுபவங்களை அடுக்கி கொட்டிக் கொண்ட போது எழுத்தாணி எட்டிப் பிடிக்க முயற்சித்த எல்லையை எளிதாய் அடைந்து கொண்டதை எண்ணி மனதால் மகிழ்ச்சி அடைந்தேன். அதன் பின்வந்த இணைக்கப்பட்ட ஒவ்வொரு வகுப்புகளிலும் இதன் பெறு பேறு சிறப்பாய் வெளிவரத் தொடங்கியது .
உண்ணும் உணவுகள் முதல் உள்ளத்து உணர்வுகள் வரை ஒருவரோடு ஒருவர் பரிமாற ஆரம்பித்தோம்.

ஆரம்பத்தில் அன்பு,அறம், பண்பாடு போதித்த மனித அறிவாற்றல் இன்று அவனியிடையேயும் தாண்டி ஆகாயத்தை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்ற இக்காலகட்டத்தில் மனிதம் என்பதை மறந்து மானிடப் பிறப்பின் அர்த்தத்தைத் தொலைத்து விட்டு நட்டாற்றில் நிற்கும் சமூகத்தினருக்கு எழுத்தாணியின் மூலம் எமக்காய் முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயல் திட்டங்கள் காலத்தின் தேவையே.
இக்கற்கை நெறியின் இன்னுமொரு இலக்கை நோக்கிய பயணத்தைப் பற்றியும் இவ்விடத்தில் குறிப்பிட்டேயாக வேண்டும். அதுவே நமக்கான "எக்ஸ்போசல் விசிட்" இதுக்காக இலங்கையின் கரையோரத்தில் இருந்த நாம் மத்திய மலை நாட்டை நோக்கி பயணமானோம். 

இது வெறும் எக்ஸ்போசல் விசிட்டாக இருக்கவில்லை. அங்கு செல்லும் முன்னமே எமக்கு அறிவிக்கப்பட்டது போல ஊடகத்துறையில் நீண்ட கால அனுபவங்களைப் பெற்று சேவையாற்றிக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர்கள் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு எமக்குக் கிடைக்கப்பெறும் என்பதே. அதற்காக எழுத்தாணி நிறுவனம் பயண ஒழுங்குகள் முதல் அனைத்தையும் சீராக மேற்கொண்டிருந்தது .அவர்களை சந்திக்க வேண்டும் என்று ஆவல் உள்ளத்தில் குடிகொள்ள நாமும் எம் சகோதர இனச் சகோதரர்களும் எழுத்தாணி குடும்பமும் அதிகாலையில் புறப்பட்டோம். தமிழ், சிங்களப் பாடல்கள் காதுகளைத் துளைத்துக்கொண்டு செல்ல பரதமும் மேலைநாட்டு நடனமும் பேருந்தை ரணகளமாக்க கண்டியைஅடைந்தோம். பேருந்து பயண ஓட்டத்தில் உணவுகளையும் சில உணர்வுகளையும் பரிமாறிக் கொள்ள மீண்டும் எமக்கு வாய்ப்புக்கு கிடைத்தது. 

இவை அனைத்திற்கும் நாம் கற்றுக் கொண்ட இரண்டாம் மொழியே காரணமாகியது என்றால் மறுப்பதற்கில்லை. நண்பகல் வேலைக்கு சற்று முன்பதாகவே நாம் செல்ல வேண்டிய இடத்தை அடைந்த போது அங்கும் எமக்கான அடைந்தபோது அங்கும் எனக்கான வரவேற்பும் உபசாரங்களும் எவ்வித குறைபாடுகளும் இன்றி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஊடகத்துறையில் சேவையாற்றுதல் என்பது கடவுளால் வழங்கப்பட்ட வரம். ஏனைய துறைகளினை போற்றும் எமது சமூகமும் அரசும் சமுதாயத்தின் ஆரோக்கியத்திற்கு அடிக்கல்லாய் அமைகின்ற ஊடகத்துறையைப் பற்றி எப்போதும் சிந்திப்பது குறைவு . "ஊடகம் சமூகத்தின் கண்ணாடி"எனின் அதனை மறுப்பதற்கு இல்லை. ஏனெனில் எந்த ஒரு இடத்திலும் நடந்த, நடக்கின்ற, நடக்க இருக்கின்ற சம்பவங்களினதும் நிகழ்வினதும் உண்மை நிலையினை உரிய இடத்திற்குச் சென்று அலசி ஆராய்ந்து தெளிவான தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் உன்னத சேவை இது.

ஒரு நாட்டு மக்கள் ஒற்றுமை காத்து இன ஐக்கியத்துடன் சகவாழ்வு வாழவும் ,மாறாக கடந்த காலங்களில் இடம் பெற்றதைப் போல பிளவுபட்டு, இரத்தம் சிந்தி, உயிர் பலி தீர்த்து நாட்டை சுடுகாடாக மாற்றி கரைபடிந்த அனுபவங்களை பெற்றுத் தந்த நிகழ்வுகளின் நிழல்களில் ஊடகத்துறையின் பங்களிப்பும் இன்றியமையாததே. மக்களுக்கும் அரசுக்கும் இடையே சிறந்த பாலமாக இருந்து இவ் ஊடகங்கள் செயல்படுகின்றன. இவ் ஊடகத்துறையின் கீழ் மக்களது உரிமைகள்,சமத்துவம்,சகவாழ்வு, பாதுகாப்பு போன்றன உறுதிப்படுத்தப்படுகின்றது.

ஊடகத்துறையில் 25 தொடக்கம் 30 வருட கால அனுபவங்களை பெற்று இன்றும் இளமை மாறாது துடிப்புடன் இயங்கும் அவர்களைப் பார்த்த உடனேயே எனது மனதுக்குள் ஏதோ எத்தனையோ மாறுதல்களையும் உற்சாகத்தையும் உணர முடிந்தது. கிட்டத்தட்ட என்னுடைய வயது அவர்களில் பலரது சேவைக்காலம். கேட்கும்போதே உடல் முழுவதும் புல்லரித்தது போன்றிருந்தது. எம்முடைய எழுத்தாணி பேரவையின் தலைவர் அவர்கள் தன்னையும் எழுத்தாணி எட்டி வைத்த கால் தடங்களையும் அதன் இலக்கையும் தற்போது அதன் செயற்பாடுகளையும் அனைவருக்கும் எடுத்தியம்பியதுடன் நிகழ்வில் எமக்கும் அங்கு வருகை தந்திருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கும் இடையே சிறந்ததொரு கருத்துப்பரிமாற்றத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்தார்.

அவர்கள் அனைவரும் மலையகத்தை சேர்ந்தவர்கள். சிலர் சிங்கள மொழியினையும் சிலர் தமிழ் மொழியையும் தமது தாய் மொழியாக கொண்டவர்கள். அவர்கள் தாம் ஊடகத் துறையில் சேவையாற்றும்போது இரண்டாம் மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள். அனுபவ ரீதியாக அதன் அவசியத்தின் ஆழத்தை அறிந்தவர்கள். தாம் இரண்டாம் மொழியில் தேர்ச்சி பெறாத காலகட்டத்தில் அடைய முடியாமல் போன இலக்குகளையும் அனுபவங்களையும் எம்முடன் பகிர்ந்து கொண்டனர். தம் ஆர்வமும் தேவையும் தேடலும் இரண்டாம் மொழியில் இலகுவாக கற்றுக் கொள்ள துணையாக இருந்ததாக பலர் கூறினர். 

அத்துடன் இரண்டாம் மொழி அறியாமையினால் தாம் வெட்கி தலை தாழ்த்திய சந்தர்ப்பங்களும்,அவமானங்களும் இன்று வரை அவர்களுக்கு இரண்டாம் மொழி மீதான ஆர்வத்தையும் அவசியத்தையும் மேலும் வலுப்படுத்துவதாக கூறினர். அவர்கள் இவ்வாறான உயர் பதவிகளில் உன்னத நிலையில் இருந்து உண்மைகளை சமூகத்திற்கு உரத்த குரலில் உயிர் துடிப்புடன் வழங்க இரண்டாம் மொழியே பிரதான காரணம் என்பது அவர்களது ஒட்டுமொத்த கூற்று. ஏனெனில் எமது நாட்டைப் பொறுத்தவரையில் குறைந்தது இரு மொழிகள் பற்றிய அறிவின்றி இவூடகத் துறைக்குள் நிலைத்திருப்பது என்பது பகற்கனவு. இவர்கள் கூறிய இரண்டாம் மொழியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் எம்முடன் பகிர்ந்து கொண்ட ஒவ்வொரு அனுபவ முத்துக்களும் எமது இலக்கினை இலகுவாய் எட்டிக் கொள்ள ஒளிமயமான ஒரு பாதையை எமக்கு வகுத்து தந்தது.

உன்னத சேவை வழங்கும் ஊடகத்துறையின் உறுப்பாக அமைந்த ஒவ்வொரு ஊடகவியலாளனும் தம் சேவையின் தரம் உணர்ந்து உண்மை தன்மையைப்பிரதிபலிக்கும் வகையில் செயல்பட முயற்சிக்கும்போது முட்டு கட்டையாய் அமைவது இரண்டாம் மொழி. ஒரு ஊடகவியலாளர் நாட்டின் எப்பிரதேசத்திலும் சேவையாற்ற தயார் நிலையில் இருக்க வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரையில் இங்கு சிங்களம் பேசும் மக்களும் தமிழ் மொழி பேசும் மக்களும் சகல இடங்களிலும் ஒன்றித்து வாழும் சூழலில் அங்கு சென்று செய்தி சேகரித்து உண்மை நிலையினை அறிய இரண்டாம் மொழியானது இன்றியமையாதது. அப்போதுதான் ஊடகத்துறையின் தனித்துவம் காத்து சரியான தகவல்களை மக்களிடையே கொண்டு சேர்க்க முடியும். இன்னொருவரை நாம் உதவிக்கு நாடுகின்ற போது அவர்கள் மொழிபெயர்க்கின்ற போது அவை திரிவுபட இடமுண்டு. 

கடந்த காலங்களில் ஊடகம் துறையில் இவ்வாறான பல சம்பவங்கள் இடம் பெற்றதை இங்கு வருகை தந்த ஊடகவியலாளர்களின் அனுபவப் பகிர்வின்போதும் அறிய முடிந்தது. எமது நாட்டில் யுத்தம் நடை பெற்ற காலப் பகுதியில் இடம்பெற்ற ஒரே சம்பவம் செய்தியாக்கப்பட்டு சிங்கள மொழி பத்திரிகையில் ஒருவிதமாகவும் தமிழ் மொழி பத்திரிகைகளில் வேறொரு பரிமாணத்திலும் வெளியானது. அப்போது ஊடகங்கள் தமக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தமது எண்ணப் போக்கிற்கு ஏற்ப செய்திகளை வெளியிட்டன. அவை மக்கள் மத்தியில் பேசுபொருளாய் மாறி யுத்தமானது இத்தனை தீவிரமடைய மறைமுகமாக ஊடகங்களின் செயற்பாடுகளும் காரணமாகின.

அவ்விடத்தில் பெண்ணாய் பிறப்படுத்து எத்தனை சவால்களை முறியடித்து பிரதான ஊடகங்களில் உயர் பதவிகளை தம் வசம் கொண்ட இருவரும் வருகை தந்திருந்தனர்.

ஊடகத்துறையைப் பொறுத்தவரையில் ஏனைய தொழிற்துறைகளை போல் அன்றே சமூகத்தில் பல்வேறுபட்ட தரப்பினருடனும் ஒன்றித்தும் முரண்பட்டும் எதிர்ப்புக்கள் பலவற்றையும் சந்தித்து சாதிக்க வந்தவைகளை சாகடித்து விடும் அனுபவங்களை பெற்றுத்தரும் ஒரு துறை .அதுவும் பெண்களை பொறுத்தவரையில் தம் குடும்பமும் குடும்பம் முதல் சமூகம் வரை எவருமே பெண் ஊடகவியலாளர்களை ஊக்கப்படுத்துவதுமில்லை உதவி செய்வதும் இல்லை. அதையும் தாண்டிச் சென்று சிறப்பானது. ஒரு படித்தரத்தில் காலடி எடுத்து வைத்த பிற்பாடு வரும் சோதனைகளை சாதனைகளாய் மாற்றும் முயற்சிக்கு எத்தனை குடும்பங்கள் பெண்ணென்று கைகோர்க்கும் என்றால் அது கேள்விக்குறியே. 

இவை அனைத்திற்கும் மேலாக அரசியல் முதல் அடிமட்ட மானிடர் வரை அனைவரும் பதிலளிக்க வேண்டும். அவ்வாறான சூழலில் நாம் சந்தித்த இரண்டு பெண் ஊடகவியலாளர்களும் என் மனதில் இடம் பிடித்துக் கொண்டனர். அவர்கள் இருவரும் ஆரம்பத்தில் தாய் மொழியை மட்டும் தம்மகத்தை கொண்டு செயல்பட்ட காலங்களில் தமக்கு ஏற்பட்ட சிரமங்களையும் இந்த அனுபவங்களையும் கூறும் போது எனக்கு அவ்வாறான சிக்கல்கள் ஏற்படாது இன்று இரண்டாம் மொழியில் ஓரளவேனும் உள்ள அறிவை எண்ணி மனதால் பெருமைப்பட முடிந்தது. இன்னும் நானும் இவ்வூடகத்துறைக்குள் குதித்து பல்வேறு சாதனைகளையும் படைத்து இவர்களைப் போல் ஒருநாள் முன்னின்று சமூகத்திற்கு உள்ள சேவைகளை செய்ய வேண்டும் என்ற அவாவும் மேல எழுந்தது.

இவ்வாறே எமது களப்பயணத்தில் நாம் சந்தித்த சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் அனைவரும் தான் ஊடகத்துறையில் பெற்றுக்கொண்ட அனுபவங்களை எம்முள் ஆழமாய்ப் பதிய வைத்தனர். மொழியும் ஊடகமும் ஒரு சந்ததியினரை உருவாக்கவும் உருக்குலைக்கவும், சீரழிக்கவும் சீர்மைப்படுத்தவும் எமக்கு கிடைக்கப்பெற்ற சிறந்த ஆயுதங்கள். 

அதனை சரியான முறையில் பயன்படுத்தி நாளைய சந்ததியினருக்கு சிறந்த உலகை காண்பிப்பது எமது கடமை. எமது எழுத்தாணி கலை பேரவை மேற்கொண்டது போன்ற காத்திரமான செயல்பாடுகள் ஊடகவியலாளர்கள் மத்தியிலும் ஏனைய மக்கள் மத்தியிலும் நிச்சயமாக முன்னெடுக்கப்பட வேண்டும், இவ்வாறான அரச சார்பற்ற தனியார் தொண்டு நிறுவனங்களின் செயற்பாட்டிற்கு அரசாங்கமும் ஏனைய தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அப்போதுதான் நாளைய விடியலிலாவது சிறந்த நல்லிணக்கமும் சமத்துவமும் சகவாழ்வினையும் உடைய சிறந்த சந்ததிகளை எம்மால் கண்டுகொள்ள முடியும்.

எனவே இரண்டாம் மொழியை கற்றல் என்பது நல்லிணக்கத்தின் அத்திவாரமாக காணப்படுகின்றது.மொழி புரியாமல் இருப்பதனால் ஒருவர் இரண்டாம் மொழியை பேசும்போது சந்தேக உணர்வுடன் பார்க்கவேண்டிய நிலை காணப்படுகின்றது. இதனால் பல விபரீதங்கள் நாட்டில் நடந்தன. அவற்றையெல்லாம் அடியோடு ஒழிக்க மூவின சமூகத்தினரும் இம்மொழியை கற்க வருவதானது நாடென்ற அடிப்படையில் வெற்றிக்கான படிக்கல்லாக இதனை கருத முடியும்.

ஆக்கம்:-தாஹா மொஹமட் பெளசுல் நஸ்மீறா,றொட்டவெவ, திருகோணமலை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :