சாதனைகள் மற்றும் அதிக வருவாயினை பெற்றுக் கொடுக்கின்ற மாகாணமாக கிழக்கு மாகாணம் இருக்கின்றது; சுற்றுலாத்துறை தவிசாளர் பி.மதனவாசன் தெரிவிப்பு!



அபு அலா -
Yana Swimming Academy இல் பயிற்சிபெற்று வருகின்ற 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான நீச்சல் பயிற்சிப் போட்டியொன்றை Trinco Aid நிறுவனம் "Marine Mile Challenge" எனும் தொனிப்பொருளில் பாக்கு நீரிணை கடப்பதற்கான இரண்டாவது நீச்சல் பயிற்சிப் போட்டியை நேற்று முன்தினம் (01) ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தது.

14 கிலோமீற்றர் தூரத்தினை நீந்திக் கடக்கும் இப்போட்டி, காலை 8.30 மணிக்கு திருகோணமலை வைத்தியசாலையை அண்மித்த கடற்கரையில் ஆரம்பமாகி மதியம் 1.00 மணியளவில் திருகோணமலை
சல்லிமுனை கடற்கரையில் நிறைவடைந்தது.

13 சிறுவர்கள் பங்குபற்றிய இப்போட்டியில், 6 சிறுவர்கள் முழுமையாக கடந்து சாதனை படைத்தனர். சிலர் தங்களால் நீந்த முடிந்த தூரத்தினை அடைந்து தங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்தனர்.

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையின் தவிசாளர் பி.மதனவாசன் பிரதம அதிதியாகவும், Trinco Aid நிறுவனத்தின் நிறுவனர் இராஜக்கோன் ஹரிகரன், பணிப்பாளர் (திருமதி). தயாளினி ஹரிகரன், நிகழ்ச்சி முகாமையாளர் சங்கரலிங்கம் நவநீதன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்துகொண்டு, இப்போட்டியில் பங்குபற்றிய வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையின் தவிசாளர் பி.மதனவாசன் தெரிவிக்கையில்,

எமது நாடு கடலால் சூழப்பட்டதொரு தீவாகும். ஆனால் தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்குபெறும் வீரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே காணப்படுகிறது. எமது பிள்ளைகள் இத்துறையிலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்ற போட்டிகள் மற்றும் பயிற்சிகளை தொடர்ந்தும் வழங்கி அவர்களை ஊக்கிவித்தும் வருகிறோம்.

அதுமாத்திரமல்லாமல், எமது நாட்டிலுள்ள எல்லா மாகாணங்களை விடவும், எமது மாகாணம் சகல வழிகளிலும் இயற்கை வளமுள்ள பசுமையான மாகாணமாக இருக்கின்றது. அதை சரியாகப் பயன்படுத்தினால் எமது பிள்ளைகள் எதிர்வரும் காலங்களில் பல அடைவுகளை அடைந்து, பல சாதனைகளை நிலை நாட்டுவதுடன், மிக அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையினை அதிகரிக்கச் செய்து எமது நாட்டுக்கு
அதிக வருவாயினை ஈட்டிக் கொடுக்கின்ற மாகாணமாகவும் இருக்கின்றது.

அதற்கான பல திட்டங்களை திட்டமிட்டு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஆலோசனை மற்றும் உதவியின் கீழ் முன்னெடுத்தும் வருகின்றோம் என்றார்.
















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :