வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இலங்கையில் உயர் கல்வித் துறையில் முதலீடுகளை மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கொழும்பில் சனிக்கிழமை (12) மாலை நடைபெற்ற துருக்கி கிர்னீ அமெரிக்கபல்கலைக்கழகத்தோடு ஒன்றிணைந்துள்ள மெட்றோபொலிட்டன் கல்லூரி நடத்திய சர்வதேச ஆய்வுக் கருத்தரங்கில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இதனைக் கூறினார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்அங்கு உரையாற்றும் போது மேலும் கூறியதாவது,
நாட்டின் உயர் கல்வித் துறையை மேம்படுத்துவதற்கான பாராளுமன்ற தெரிவிக்கு குழுவின் அங்கத்தவர் ஒருவராக என்னையும் கடந்த ஆண்டு நியமித்திருந்தார்கள். ஆரம்பக் கல்வி, இடைநிலை கல்வி, உயர்கல்வி ஆகியவற்றின் மீது எங்களது கவனம் திரும்பி இருந்தது. உயர்கல்வி துறையோடு சம்பந்தப்பட்ட பல தரப்பினரையும் அழைத்து நாங்கள் நிலைமையை நன்றாக ஆராய்ந்தோம் .அதன் அடிப்படையில் எங்களது முடிவுகளை நாங்கள் முழுமைப் படுத்தியுள்ளோம்.அவற்றை இனி பொது மக்கள் அறியக்கூடியதாக இருக்கும்.
பல்கலைக் கழக கற்கை நெறிகளின் தர நிர்ணயம் மற்றும் அவற்றுக்கான உத்தரவாதம்,அங்கீகாரம் என்பனவும் உறுதிப்படுத்தப்பட வேண்டியவையாகும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஒரு கண்டிப்பான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகின்றது.
பல்கலைக்கழக கல்வி சார் மற்றும் நிருவாகச் செயல்பாடுகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு பல்கலைக்கழகமும் சுயமாக தனித்து செயல்படுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது எங்களது கருத்தாகும். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்ற கட்டமைப்பு மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதும் எங்களது விருப்பமாகும் என்றும் முன்னாள் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மெற்றோபொலிடன் கல்லூரியின் தலைவர் கல்முனை முன்னாள் நகர பிதா சிராஸ் மீராசாஹிப் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார் .அத்துடன் அமெரிக்க துருக்கி அமெரிக்க பல்கலைக்கழகத்தின் உப தலைவர் பேராசிரியர் இஸ்மத் இஸினே,மற்றும் பிரபல தொழில் அதிபர் திலித் ஜயவவீர ஆகியோரும் இந்த நிகழ்வில் உரையாற்றினார்கள்.
0 comments :
Post a Comment