பேராசிரியர் றமீஸ் அப்துல்லா சிரேஷ்ட பேராசிரியராக பதவியுயர்வு!



(இப் பதிவு (அப்துல் றஸாக்) அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து நன்றியுடன் மீளப் பிரசுரிக்கப்படுகிறது.)
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தவிசுப் பேராசிரியராக கடமையாற்றும் றமீஸ் அப்துல்லா அவர்கள் சிரேஷ்ட பேராசிரியராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறையில் 1969 இல் பிறந்த இவர், தனது ஆரம்பக் கல்வியை சம்மாந்துறை அல்மர்ஜான் வித்தியாலயத்திலும் உயர்தரக் கல்வியை சம்மாந்துறை மகாவித்தியாலயத்திலும் கற்றார். இளமைக்காலத்தில் இலக்கிய ஈடுபாடும், வாசிக்கும் ஆர்வமும் இவரிடம் இயற்கைப் பண்புகளாக இருந்தன.
இதற்கேற்றாற்போன்ற நண்பர்களும் இலக்கிய ஆசிரியர்களும் இவருக்குக் கிடைத்தார்கள். உயர்தரத்தில் ஒரு வருடம் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்றதனால் இவர் அறிவியல் ஊட்டம் பெற்றதோடு, மன்சூர் ஏ. காதிர், பஸீல் காரியப்பர் முதலிய ஆசிரியர்களின் நிழலில் இலக்கியத்தையும் கற்றுத் தேர்ந்தார். தனது பல்கலைக்கழகக் கல்வியை பேராதனையில் தொடர்ந்த றமீஸ் அப்துல்லா, 1995 இல் தமிழ் சிறப்பு இளங்கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுகொண்டார். கற்கை முடிவில் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் உதவி விரிவுரையாகக் கடமையாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.
1995 இல் தென்கிழக்குப் பல்கலைக்கழத்தில் விரிவுரையாளராக கடமையேற்ற றமீஸ் அப்துல்லா, தனது முதுதத்துவமாணிப் பட்டத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களான சி. தில்லைநாதன், எம்.ஏ. நுஃமான் ஆகியோரின் வழிகாட்டலில் 2003 இல் பெற்றுக்கொண்டார். மேலும் பேராசிரியர் திஸ்ஸ காரியவசம், பேராசிரியர் சி. தில்லைநாதன் ஆகியோரின் கீழ் பொதுசனத் தொடர்பாடல் துறையில் கலாநிதிப் பட்டத்தை சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் 2010 இல் பெற்றதோடு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழித்துறை தலைவர், இணைப்பாளர் போன்ற உயர் பதவிகளை வகித்து, பின் 2014 இல் பேராசிரியராகவும் பதவி உயர்வு பெற்றார்.
பாடசாலைக் காலத்தில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதில் நாட்டம் கொண்டிருந்தாலும் பல்கலைக்கழகத்தில் கற்கும் காலத்திலேயே இவரது இலக்கிய அறிவு செழுமையுற்றது எனலாம். முதுபெரும் எழுத்தாளர் கே. கணேஷ் தமிழாக்கம் செய்த, சீன எழுத்தாளர் "லாவ் ஷ" வின் 'கூனற்பிறை' எனும் நாவலை திறனாய்வு செய்து இவர் ஆற்றிய உரை மிகுந்த பராட்டையும், இலக்கிய அடையாளத்தையும் இவருக்குப் பெற்றுத்தந்தது. பேராசிரியர் சி. தில்லைநாதனின் உறவால் கம்பர் மீது ஈடுபாடுகொண்ட இவர், சிறந்த தமிழ்த்துறை மாணவருக்கான ஆறுமுக நாவலர் விருதினையும் 1995 இல் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
றமீஸ் அப்துல்லாவின் ஆரம்பகாலக் கட்டுரைகள் 1990 களில் நேசன், தினகரன் முதலிய பத்திரிகைகளில் வெளிவந்தன. ஜே. பௌஸ்தீனை ஆசிரியராகக் கொண்டு கொழும்பிலிருந்து வெளிவந்த நேசன் பத்திரிகையில் 'கீழ்வானில்' என்ற மகுடத்தின் கீழ் ஈழத்து இலக்கிய உலகிற்கு வளம்சேர்த்த ஈழமேகம் பக்கீர்த்தம்பி, ஆ.மு. ஷரிபுத்தீன், அ.ஸ. அப்துஸ் ஸமது, மருதூர்க் கொத்தன், பஸீல் காரியப்பர் ஆகியோரின் பங்களிப்புக்கள் குறித்து இவர் எழுதிய தொடர் பலரது கவனத்தையும் ஈர்த்ததொன்றாகும். தினகரனில் வெளிவந்த பேராசிரியர்களான க. கைலாசபதி, எம்.எம். உவைஸ் குறித்து எழுதிய கட்டுரைகளும், இஸ்லாமியத் தமிழ் இலக்கியம், நாட்டாரியல் குறித்த கட்டுரைகளும் இவரது ஆளுமையின் வெளிப்பாடுகளாக அமைந்தன.
பேராசிரியர் கா. சிவத்தம்பி, வீ. ஆனந்தன் போன்றோரின் வழிகாட்டலில் நாட்டாரியல், இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் மீதான இவரது ஆர்வம் பலதளங்களிலும் வெளிப்பட்டது. தனது இளங்கலைமாணிப் பட்டத்திற்காக "கிழக்கிலங்கை கிராமிய இலக்கியத்தில் முஸ்லிம் பண்பாட்டுச் செல்வாக்கு" என்னும் தலைப்பில் சமர்ப்பித்த ஆய்வேடு, நூல்வடிவம் பெற்று மல்லிகைப் பந்தல் வெளியீடாக "கிழக்கிலங்கைக் கிராமியம்" (2001) என்ற தலைப்பில் வெளியானது. இவரது நாட்டாரியல் ஆய்வார்வம் குறித்து சி. தில்லைநாதன் (2009: iX) கூறும் கருத்தொன்று பின்வருமாறு அமைகின்றது :
"றமீஸ் அப்துல்லா பல கிராமங்களுக்குச் சென்று தம் ஆய்வுக்கு வேண்டிய தரவுகளைத் திரட்டிக் கொண்டார். ஏலவே வெளியிடப் பட்டவையும் வெளியிடப்படாதவையுமான நாட்டார் பாடல்களையும், பழமொழிகளையும், விடுகதைகளைகளையும் ஆதாரங்களாகக் கொண்டார். கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாடு, உலகநோக்கு, மதிநுட்பம், அழகியலுணர்வு, மொழிவழக்கு, தொடர்பாடல், நயம் முதலானவற்றை ஓரளவுக்காயினும் எடுத்துக் காட்டுவதாக அவரது ஆய்வு அமைந்தது. இஸ்லாமியர் பண்பாட்டிலும், தமிழ் மொழியிலும் அவருக்குள்ள ஆர்வமும், அறிவும் ஒருபுறமாக, அவரது நிதானமும் சமநோக்கும் உற்சாகமளிக்கும் வகையில் வெளிப்பட்டன"
பேராசிரியர் எம்.எம். உவைஸ் அவர்களின் மறைவினைத் தொடர்ந்து அவரது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்களும், ஆராய்ச்சி நூலகமும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டதன் காரணமாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை ஒரு பாடமாக மாணவர்களுக்கு கற்பிக்கும் நிலை உருவானது. இக்கற்கை நெறியில் றமீஸ் அப்துல்லா அவர்களின் பணி காத்திரமானதாகும். முதன்நிலை விரிவுரையாளராக இருந்து "இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்" இப்பல்கலைக்கழகத்தில் போதிக்கப்படுவதோடு, இவ்விலக்கியம் தொடர்பான ஆய்வுப் பணிகளும் இவரால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. இத்துறை சார்பான ஆய்வுக் கட்டுரைகள் பலவும் தேசிய, சர்வதேச மாநாடுகளில் இவரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவ்வகையில் க. இரகுபரனுடன் இணைப் பதிப்பாளராக இருந்து தொகுக்கப்பட்ட "தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம் அடையாளம்" (2017) என்ற நூல் மிகுந்த கவனயீர்ப்பைப் பெற்றதொன்றாகும்.
நவீன இலக்கியப் பரிச்சயம் கொண்டவராக அறியப்படும் றமீஸ் அப்துல்லாவினால் அவ்வப்போது எழுதிய நவீன கவிதைகளின் தொகுப்பாக ~வாஸ்தவம்| 2011 இல் வெளியாகியது. சிறுகதைகள் மீது இவருக்கிருந்த நாட்டம் பின்னர் சிறுகதை ஆய்வாளராகவும் இவரை பரிணமிக்கச் செய்தது. இவ்வகையில் திறனாய்வுப் பார்வைகளுடன் கூடியதாக இவரால் எழுதப்பட்ட "அம்பாறை மாவட்ட சிறுகதை ஆளுமைகள்" என்னும் நூல் 2012 இல் வெளிவந்தது. இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய பேராசிரியர் அ. சண்முகதாஸ், "ஒரு பிரதேசத்தின் சிறுகதை ஆய்வின் வகை மாதிரிக்கு இந்நூல் முன்னுதாரணமாககத் திகழ்கிறது" எனக் குறிப்பிடுவது கவனம் கொள்ளத்தக்கதொன்றாகும்.
பத்திரிகை மற்றும் இதழியல் துறைகளில் ஆர்வத்துடன் இயங்கும் றமீஸ் அப்துல்லா, அவை தொடர்பான ஆய்வுகளையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருபவர் ஆவார். இவ்வகையில் வெளிவந்த "இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகள் (1841-1950)" (2012) என்னும் நூல், இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகள் தொடர்பாக இதுவரை வெளிவந்த நூல்களிலிருந்து வேறுபட்டு பல்வேறு புதிய தகவல்களையும், அறியப்படாத பத்திரிகைகள் பற்றிய விபரங்களையும் தருவதாகும். தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊடகவியல்துறை டிப்ளோமா கற்கைநெறியின் வளவாளராகவும், இணைப்பாளராகவும் இவர் தொடர்ந்தும் கடமையாற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
தினகரன் நாளிதழில் றமீஸ் அப்துல்லாவால் எழுதப்பட்ட பத்தி எழுத்துக்களின் தொகுப்பு "எண்ணப் பெருவெளி" (2018) என்னும் நூலாக வெளிவந்தது. சமூகம், அரசியல், கலை, இலக்கியம் என்றவாறாக எழுதப்பட்ட 102 பத்திகள் இந்நூலில் காணப்படுகின்றன. இவ்விதமான எழுத்துக்களுக்குப் பின்னால் இருக்கும் றமீஸ் அப்துல்லாவின் சமூக அக்கறை பலராலும் விதந்து கூறப்பட்டதொன்றாகும். உமா வரதராஜன் (2018) இதுபற்றி :
"நண்பர் றமீஸின் இத்தொகுப்பு தகவல்கள், ரசனை, வரலாறு, நடப்பு அரசியல் ஆகிய தளங்களில் பயணித்தாலும் இதன் உள்ளொளியாக நான் கண்டுணர்வது இந்நாட்டின் இனங்களுக்கிடையே நிலவவேண்டிய ஐக்கியத்தின் மீதான அவரது தீராத காதலையே. இத்தொகுப்பின் பல பத்திகளிலும் இது சார்ந்த கனவுகளும், அபிலாஷைகளும், வெப்புசாரங்களும், ஏக்கமும் வெவ்வேறு விதங்களில் வெளிப்படுகின்றன. இந்தத் 'தீராக் காதலே" அவரையும் என்னையும் நெருங்க வைத்தது. பல மேடைகளிலும் அவரைப் பேச வைக்கத் தூண்டியது. இனங்களுக்கிடையே நிலவவேண்டிய நல்லுறவு பற்றியும், பிரிக்க முடியாத பாரம்பரியம் பற்றியும் அண்மையில் ஒரு மேடையில் நண்பர் றமீஸ் உரையாற்றிய போது மண்டபத்தில் குழுமியிருந்த மக்கள் கரகோஷம் செய்து வரவேற்றார்கள். அது உணர்த்திய செய்தி 'மனிதர்கள் இன்னமும் மனிதர்களாகவே இருக்கிறார்கள்' என்பதாகும்"
எனக் குறிப்பிடுகின்றார். இவ்வகையில் முஸ்லிம் அரசியல், நல்லிணக்கம், சமூக இணக்கப்பாடு முதலிய எழுத்துச் செயற்பாடுகளிலும் தொடர்ச்சியாக ஈடுபாடு காட்டி வருபவராக றமீஸ் அப்துல்லா அறியப்படுகின்றார். இவை குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் தனிக்கவனம் பெறுவதாகும்.
பதிப்புப் பணியிலும் இவரது பங்களிப்பு குறிப்பிட்டுச்சொல்லக்கூடியதாகும். பல்கலைக்கழக வெளியீடுகளான இளங்கதிர், பிரவாகம், கலம் முதலிய இதழ்களின் பதிப்பாசிரியராக கடமையாற்றிய இவர், "கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப் நினைவுப் பகிர்வு" (2016), "அப்துல் மஜீத் ஆளுமையின் அடையாளம்"| (2012), "சம்மாந்துறை வரலாறு (2019)", "கிழக்கு வாசல்" (2017) போன்ற நூல்களின் பதிப்பாசிரியராகவும், இணைப் பதிப்பாசிரியராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை ஆய்வரங்குகள், தமிழ்ச்சங்க செயற்பாடுகள் பலவற்றிலும் றமீஸ் அப்துல்லாவின் பங்காற்றுதல்கள் குறிப்பிடத்தக்கனவாகும். கிழக்கிலங்கையின் அடையாளம், இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் பற்றிய பார்வை, நாட்டாரியல் கூறுகள் முதலிய ஆய்வரங்குகளை நெறிப்படுத்துவதில் இருந்து, கட்டுரை சமர்ப்பித்தல், தொகுதியாக்கம் செய்தல் என்பன வரையான இவரது பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கதாகும்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதல் பேராசிரியரான இவர், முதலாவது சிரேஷ்ட பேராசிரியராகவும் பதவியுயர்வு பெறுவது மகிழ்ச்சிக்குரியது. அவருக்கு எம் வாழ்த்துக்கள்.
எம். அப்துல் றஸாக்,
விரிவுரையாளர்,
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :