தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதல் ஆங்கில பேராசிரியரானார் ஏ.எம்.எம். நவாஸ்!



(பேராசிரியர் ஏ.எம்.எம். நவாஸ் அவர்கள், தனது பேராசிரியர் பதவியை அடையும் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதற்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை மிகுந்த மரியாதையுடன் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றோம்.)

பேராசிரியர் ஏ.எம்.எம். நவாஸ் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதல் ஆங்கிலப் பேராசிரியராவதோடு, பேராசிரியர் ரைஹானா ரஹீமைத் தொடர்ந்து இலங்கை முஸ்லிம்களில் இரண்டாவது ஆங்கிலப் பேராசிரியரும் ஆவார்.

1969 ஜூலை மாதம் பிறந்த அப்துல் மஜீட் முகம்மது நவாஸ், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேரவையால் 29.09.2021 முதல் ஆங்கிலப் பேராசிரியராக (ELT) நியமிக்கப்பட்டுள்ளார். மருதமுனையைப்பிறப்பிடமாகக் கொண்ட இவரது தந்தை, மஸ்ஜிதுல் கபீர் ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் ஆகவும், மருதமுனை பொது நூலகத்தின் நிறுவனரும், மருதமுனை கல்முனை பொது நூலகத்தில் நூலகராகவும் பணியாற்றியவர் ஆவார்.

பேராசிரியர் நவாஸ் தனது ஆரம்பக் கல்வியை அல்-மனார் மத்திய கல்லூரியிலும், இடைநிலைக் கல்வியை மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியிலும் பெற்றார். அங்கு அவர் 1983 இல் கல்விப் பொது தராதர சாதாரண பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளையும், 1987 இல் விஞ்ஞானப் பிரிவில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளையும் பெற்றார். 1990 ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட போட்டித் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்று ஆங்கில ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

இவர் 1995 டிசம்பரில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விவசாய விஞ்ஞான இளமாணிப் பட்டத்தைப் (Second class Hons) பெற்றார். அதனைத் தொடர்ந்து, அவர் 1996 இல் விவசாய பீடத்தில் தற்காலிக உதவி விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். மேலும் 1997 ஏப்ரல் மாதம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிரந்தர ஆங்கில பயிற்றுவிப்பாளராக (Instructor) நியமிக்கப்பட்ட இவர், 1997 மே மாதம், அதே பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் பிரிவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

மேலும் 2005 இல் உறுதிப்படுத்தப்பட்ட விரிவுரையாளராக பதவி உயர்வு பெற்ற இவர் சிரேஷ்ட விரிவுரையாளர் - II மற்றும் I ஆகிய பதவிகளுக்கு முறையே 2012 மற்றும் 2016 இல் பதவி உயர்த்தப்பட்டார். தற்போது அவர் 26 ஆண்டுகளுக்கும் மேலான பல்கலைக்கழக கற்பித்தல் அனுபவத்தையும், 7 வருட பாடசாலைக் கற்பித்தல் அனுபவத்தையும் பெற்றுள்ளார்.

இலங்கை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் சிறந்த சித்தியுடன் (Distinction pass, Batch Top) ஆங்கில மொழி மற்றும் இலக்கியம் கற்பித்தலில் பட்டப்பின் டிப்ளோமாவைப் பெற்ற இவர் களனிப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியியலில் முதுமாணி பட்டத்தையும் பெற்றார். மேலும் அவர் 1996 ஆம் ஆண்டு இலங்கையின் திறந்த பல்கலைக்கழகத்தில் மற்றுமொரு முதுமாணி கற்கை நெறியையும் தொடங்கினார். 2007 ஆம் ஆண்டில், உலக வங்கியின் புலமைப் பரிசில் உதவித்தொகையைப் பெற்ற இவர், தலைமைப் பேராசிரியரும் மொழிக் கல்வியில் உலகறிந்த அறிஞருமான Do Coyle என்பவரின் ஆரம்பக் கண்காணிப்பின் கீழ் ஐக்கிய ராஜ்யத்தின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பிரயோக மொழியியல் மற்றும் TESOL ஆகியவற்றில் கலாநிதி பட்டத்தினை தொடரும் வாய்ப்பை பெற்றார். 2012 இல் தனது கலாநிதிப் பட்டத்தை வெற்றிகரமாக முடித்த இவர், இலங்கையின் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் கலாநிதி பட்டம் பெற்ற ஒரேயொரு விரிவுரையாளர் ஆவார். அதே ஆண்டில், அவர் அமெரிக்காவின் ஓரிகன் பல்கலைக்கழகத்தில் TESOL இல் Online சான்றிதழ் கற்கையையும் பூர்த்தி செய்தார். மேலும் அவரது கற்றல் நடவடிக்கைகளுக்கான நிதி உதவி கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் வழங்கப்பட்டது.

பேராசிரியர் நவாஸ், 2000, 2001 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து Lancaster பல்கலைக்கழகம், மற்றும் Reading பல்கலைக்கழகம் ஆகியவற்றில் TESL/ELT இல் பல குறுகியகால பயிற்சி நெறிகளை தொடர்ந்தார். 2007 இல் தாய்லாந்தில் உள்ள ஒரு தேசிய பல்கலைக்கழகத்தில் திட்ட மேலாண்மை தொடர்பான பயிற்சி நெறியையும் அவர் பின்பற்றினார். மேலும் ஒரு மாத கால பயிற்சி திட்டத்தில் அமெரிக்காவிற்குச் சென்ற அவர், அமெரிக்காவின் Seatle நகரில் நடந்த TESOL மாநாட்டிலும் கலந்து கொண்டார். இதற்கு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அனுசரணை வழங்கியது.

பேராசிரியர் நவாஸ் ELT பிரிவின் ஸ்தாபகத் தலைவராகவும், இலங்கைப் பல்கலைக்கழகங்களில் ELT துறைகளை நிறுவுவதில் முக்கிய பங்காற்றியவரும் ஆவார். மேலும் இவர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் துறையின் ஸ்தாபகத் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர் சுமார் 22 ஆண்டுகளாகத் துறைத் தலைவராகப் கடமையரற்றியுள்ளமை வியக்கத்தக்கதே ஆகும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் TESL இன் நிலைக்குழுவின் உறுப்பினராக பணியாற்றிய அவர் ELT துறையின் வளர்ச்சிக்குப் பல பங்களிப்புகளைச் செய்துள்ளார். மேலும் 2015 இல் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் BA (Hons) in TESL என்ற புதிய பட்டப்படிப்பைத் தொடங்குவதில் பேராசிரியர் நவாஸ் முக்கிய பங்கு வகித்தார். இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் Quality Assurance Council இன் மதிப்பாய்வாளராகவும் கடமையாற்றுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அவர் 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து Certificate in English and Diploma in English பாட நெறிகளைத் தொடங்கினார். மேலும் அவையே தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னோடி விரிவாக்கப் கற்கை நெறிகளாக இருந்தன. பாடசாலை கல்வியை முடித்துவிட்டு வெளியேறும் ஏராளமானோர் மற்றும் ஏனைய பல துறை பணியாளர்கள் பலரும் இன்று வரை இந்தப் கற்கைகளால் பயனடைந்து வருகின்றனர் என்பது முக்கியமான ஒரு விடயமாகும். அத்துடன் பேராசிரியர் நவாஸ் 2000 ஆம் ஆண்டின் முற்பகுதியில் கொழும்பில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சிலின் அனுசரணையின் கீழ் ஐக்கிய ராஜ்யத்தின் Lancaster பல்கலைக்கழகத்துடன் ஒன்றிணைந்து பல்கலைக்கழகத்தின் முதல் வெளிநாட்டு இணைப்பு திட்டத்தை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பேராசிரியர் நவாஸ், பிரயோக மொழியியல் மற்றும் TESL ஆகிய துறைகளில் பல ஆய்வுக் கட்டுரைகள், புத்தக அத்தியாயங்கள் மற்றும் பல பாடப்புத்தகங்கள் மற்றும் கையேடுகளை வெளியிட்டுள்ளார். பிரிட்டிஷ் கவுன்சிலின் ஆங்கில மொழி கற்பித்தல் ஆராய்ச்சி விருதுகள் -2015 (English Language Teaching Research Partnership Awards-2015) ஐப் பெற்ற இவரது ஆய்வுக் கட்டுரை பிரிட்டிஷ் கவுன்சிலின் கையேட்டில் வெளியிடப்பட்டது பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயமே ஆகும்."English Language Teaching: A Historical Present"என்ற தலைப்பில் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள்ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட ஒரு நூற்றாண்டுத் தொகுதியை எழுதிய மூன்று ஆசிரியர்களில் இவரும் ஒருவராவதோடு, இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் UTEL கையேட்டில் பங்களித்த ஆசிரியர்களில் ஒருவருமாவார்.

2021 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த சிரேஷ்ட ஆய்வாளருக்கான துணைவேந்தர் விருது - முதலிடம் (FAC) அவருக்கு வழங்கப்பட்டது. மேலும், 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் Senate Honours for High Impact Publications என்ற இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும் இவர் உள்நாடு மற்றும் மலேசியா, இங்கிலாந்து போன்ற பல வெளிநாடுகளிலும் நடைபெற்ற மாநாடுகளிலும் பங்கு பற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும், இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தாய்லாந்தில் நடைபெற்ற மாநாடுகளில் முக்கிய உரைகளையும் ஆற்றியுள்ளார்.

அத்துடன் அவரது கற்பித்தல் மற்றும் ஆய்வுகளுக்கு அப்பால், அவர் இன்னும் பல வழிகளில் பல்கலைக்கழகத்திற்கு பங்களித்துள்ளார். பாடத்திட்ட மேம்பாட்டுக் குழுவின் (Curriculum Development Committee) தலைவராகப் பணிபுரிந்த இவர், முழு பீடத்தின் பாடத்திட்டத் திருத்தத்தையும் (Curricula Reversion) வெற்றிகரமாக முடித்துள்ளார். மேலும் இவர், புதிய BA வெளிவாரி பட்டப்படிப்புக்கான பாடத்திட்டங்களை வடிவமைப்பதிற்கான குழுவையும் வழி நடாத்தினார் என்பதும் பாராட்டத்தக்கதாகும். அத்துடன் அவர் உலக வங்கியின் நிதியுதவி திட்டமான IBG மற்றும் QEF II திட்டங்களுக்கு முதன்மை முன்மொழிவு எழுத்தாளராக (chief proposal writer) இருந்தார். இத்திட்டத்தின் மூலம் பெறப்பட்ட நிதியானது கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடங்களைச் சேர்ந்த பல விரிவுரையாளர்களின் பட்டப்பின்படிப்புக்களை வெளிநாடுகளில் தொடர்வதற்காகப் பயன்படுத்தப்பட்டது.

பேராசிரியர் நவாஸ், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் ஆங்கில பாடங்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் மற்றும் பாடநெறி கையேடுகளை வடிவமைப்பதற்கான ஆலோசகர் மற்றும் பாட நிபுணராகவும், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் HETC திட்டம், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் ELTA-ELSE திட்டம் போன்றவற்றிலும் பணியாற்றியுள்ளார். மேலும் அவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் PGIE இல் TESL கற்கை கற்கும் முதுமாணி மாணவர்களை மேற்பார்வையிட்டு (supervision) வருகிறார். பேராசிரியர் நவாஸ், இந்தியாவின் பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் மதிப்பீட்டு மையத்தின் (Center for Research and Evaluation) PhD இன் நிரந்தர வெளிவாரித் தேர்வாளரும் (permanent external examiner of PhD) ஆவார். கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அவரது பங்களிப்பு மேலும் மேலும் விரிவடைந்து கொண்டே செல்கின்றது. பேராசிரியர் ஏ.எம்.எம். நவாஸ் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைவதோடு அவரது முழு வாழ்க்கையிலும் அவர் மென்மேலும் வெற்றிபெற பிரார்த்தனை செய்கிறோம்.

பேராசிரியர் நவாஸ் அவர்கள் பிரதேச மட்டத்தில் மக்கள் நலன்சார்ந்த பல்வேறு திட்டங்களிலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :