ஒற்றையாட்சி நாட்டில் அதிகாரப் பகிர்வுக்கு உடன்படுகிறோம்.-அமைச்சர் பிரசன்ன ரணதுங்க



வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 400 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படும்.

முனீரா அபூபக்கர்-
ற்றையாட்சி நாட்டில் அதிகாரப் பகிர்வுக்கு உடன்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நிர்வாக அதிகாரம் பிரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாக அமைச்சர் வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிதாக 400 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிர்மாணிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குளம்முறிப்பு, கச்சிலைமடு, கதலியாறு மற்றும் ஒலுமடு ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்ட நானோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களை இன்று (03) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்ட கிராமங்களில் இந்த நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. "அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்" என்ற அரசின் கருத்தின் கீழ் இது செயல்படுத்தப்படுகிறது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக மேற்படி அமைச்சின் கீழ் உள்ள மீள்குடியேற்றப் பிரிவு, சமூக நீர் திணைக்களத்துடன் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது.

இதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா 23 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளதுடன், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் செலவிடப்பட்ட தொகை 205 மில்லியன் ரூபாவாகும்.
அதன் முதற்கட்டமாக 25 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்களின் பாவனைக்கு ஒப்படைக்கப்படும்.

இந்த நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நாளொன்றுக்கு சுமார் 2000 லீற்றர் நீரை முழுவதுமாக சுத்திகரிக்கும் திறன் கொண்டவை எனவும் மீள்குடியேற்ற பிரிவு கூறுகிறது.
நனோ தொழில்நுட்பம் மூலம் நீரைச் சுத்திகரிக்கும் போது நீரிலிருந்து அதிக உப்புகள் அல்லது இருவேறு கூறுகளை நீக்குகிறது. மேலும், நனோ சுத்திகரிப்பு மூலம் நச்சுகள், கன உலோகங்கள் மற்றும் ஏனைய சேதன இரசாயன உலோகங்கள் அகற்றப்பட்டு நீரின் சுவையும் துர்நாற்றமும் நீக்கப்படும்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,

“நம் நாட்டின் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் நன்றி உணர்வு உள்ளவர்கள் என்பதை நான் அறிவேன். 30 வருடங்களாக யுத்தம் இடம்பெற்ற இந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கம் என்ற வகையில் எமக்கு உள்ளது. வடக்கு மக்கள், தெற்கு மக்கள் அனைவரும் ஒன்றுதான். எமது பிள்ளைகள் பெறும் கல்வியை வடக்குப் பிள்ளைகளும் பெற வேண்டும். ஆனால் யுத்த காலத்தில் இந்த பிள்ளைகளுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நாட்டிலுள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்பிக்க வேண்டும். மக்களுக்கு மனித உரிமைகளை வழங்குவது ஒவ்வொரு அரசாங்கத்தின் பொறுப்பாகும். அமைச்சர் சனத் நிஷாந்த தலையிட்டு வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் நனோ தொழில்நுட்பத்தின் கீழ் 50 குடிநீர் சுத்திகரிப்பு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். எதிர்காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் மேலும் 400 நீர் சுத்திகரிப்பு அலகுகளின் வேலைகளை நிறைவுசெய்யு முடியும் என எதிர்பார்க்கிறேன்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீட்டு உதவி வழங்கி வீடு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். இப்பகுதி மக்களுக்கு வீடுகள், குடிநீர் வழங்குவதற்கு இப்பகுதியின் தலைவராக உள்ள அமைச்சர் காதர் மஸ்தான் பெரும் பணி செய்கிறார். ஜனாதிபதியுடன் கலந்துரையாடி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு அவர் செயற்பட்டு வருகின்றார்.

இன்று அதிகாரப் பகிர்வு தொடர்பில் மீண்டும் விவாதங்கள் ஆரம்பமாகியுள்ளன. ஒற்றையாட்சி நாட்டின் கீழ் அதிகாரப் பரவலாக்கம் என்பது நம் அனைவரின் நம்பிக்கை. நிர்வாக அதிகாரம் பிரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அனைவரும் இருக்கிறோம். வடகிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ். சத்யானந்த, மேலதிக செயலாளர் (வீடமைப்பு) டபிள்யூ.எம். ஆனந்த, பணிப்பாளர் வீ. பிரேமசந்திரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :