றியாஸ் ஆதம்-
ஒரு பாடசாலையில் கற்றலுக்கு பொருத்தமானதும், பாதுகாப்பானதுமான சூழலை ஏற்படுத்தி மாணவர்களின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வது அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினுடைய பொறுப்பாகும். பாடசாலை, சமூகத் தொடர்புகள் சிறப்பாக அமைவதன் ஊடாகவே அந்தப் பாடசாலை கல்வி மற்றும் பௌதீக ரீதியாக அபிவிருத்தியடையும். குறிப்பாக பாடசாலையினை சுத்தமாகவும், எழில்கொண்டதாகவும் வைத்துகொண்டு கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு அதிபரையே சாரும்.
அம்பாரை மாவட்டம், பொத்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ள மினாறுல் உலூம் வித்தியாலயமானது, பொத்துவில் பிரதேசத்தின் மத்தியில் அமையப்பெற்றுள்ள ஆரம்பநெறி ஆண்கள் பாடசாலையாகும். இந்தப் பாடசாலையானது தற்போது கற்றலுக்கு பொருத்தமானதும், பாதுகாப்பானதுமான சூழலைக்கொண்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றது.
கடந்த ஜனவரி மாதம் குறித்த பாடசாலையினைப் பொறுப்பேற்ற அதிபர் ஏ.தாஜஹான் அப்பாடசாலையின் கல்வி மற்றும் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். பாடசாலையின் உள்ளக அமைப்புக்களை முறையாக வடிவமைத்து 5S முறைமையினை அமுல்படுத்துவதற்குமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து தனது முழு நேரத்தினையும் பாடசாலைக்காகவே அர்ப்பணித்து வருகின்றார்.
ஒவ்வொரு வகுப்பிற்கும் வெவ்வேறு நிறத்திலான கதிரை மேசைகள், சிறுவர் நூலகம் அழகுபடுத்தல், சிறுவர் மேடை வடிவமைப்பு, நுழைவாயில் வர்ணம் பூசுதல், வகுப்பறைக்கான நிறப்பூச்சு, சேதமைடைந்த தளபாடங்கள் திருத்துதல், உள்ளக வீதி அமைப்பு என முதல் கட்டமாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்த அதிபர் தலைமையிலான குழுவினர் அதனை வெற்றிகரமாகவும் நிறைவு செய்துள்ளனர்.
பொத்துவில் பிரதேசத்தின் சிறந்த ஓவியர்களைக்கொண்டு பாடசாலையின் சுவர்களில் இயற்கை எழில் மிக்க காட்சிகளையும், ஓவியங்களையும் வரைகின்ற பணியினையும் அதிபர் தாஜஹான் தற்போது முன்னெடுத்துள்ளார். பாடசாலையில் கவின் நிலைப்படுத்துவதற்காகவும் மாணவர்களின் சிந்தனா சக்தி தேசிய உணர்வினை வளர்ப்பதற்காகவும், ஆரம்பநெறி மாணவர்களின் கற்பனை படைப்பாக்கத்திறன் வளர்ச்சிக்காகவேண்டி அவர்களுக்குரிய பாட வழிகாட்டியில் இடம்பெற்றிருக்கும் படங்களும் அதில் வரையப்பட்டு வருகின்றன.
பாடசாலையின் சுற்றுமதில் நிறம்பூசி அழகுபடுத்தி பேசும் சுவர்களாக மாற்றம் பெற்று வருகின்றன. பூ மரங்கள் மற்றும் நிழல்தரும் மரங்கள் நட்டு பாடசாலை வளாகம் அழகுபடுத்தப்பட்டு வருகின்றது. இன்னும் பல வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பூ மரங்களையும், பயன்தரும் நிழல் மரங்களையும் பாடசாலை வளாகத்தில் நடுவதன் மூலம் பாடசாலை எழில்மிகு தோற்றம் பெறும். பாடசாலைக்குள் நுழையும் போது மாணவர்கள் மனதில் புத்தூக்கம் தோன்றி இயற்கை அழகுணர்வு விதைக்கப்படும். இதன்வாயிலாக, பாடசாலை பல்வேறுபட்ட நண்மைகளைப் பெற்றுக்கொள்வதுடன், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் விருத்தியடையவும் வழிவகுக்கும்.
மாணவர்களின் பிரத்தியேக வகுப்புக்களை முறையாக நடாத்துவதிலும், அவர்களது இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் அதிபர் உள்ளிட்ட பாடசாலை முகாமைத்துவக் குழுவினர் கவனம் செலுத்தி வருகின்றனர். அதுமாத்திரமல்லாமல் பாடசாலையில் திறமைகளை வெளிப்படுத்தும் மாணவர்களை அவ்வப்போது பாராட்டி மகிழ்விப்பதிலும், அதனூடாக ஏனைய மாணவர்களை ஊக்குவிப்பதிலும் அதிபரும், அப்பாடசாலை சமூகமும் மும்மூரமாக செயற்பட்டுக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். இந்தப் பாடசாலையானது கவின்கலை மற்றும் நிருவாகக்கலை என்பவற்றில் சிறந்து விளங்குவதற்கு அப்பாடசாலையின் அதிபரே பிரதான காரணமாகும்.
அதிபர் தாஜஹானின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் மேலும் குறித்த பாடசாலைக்குக் கிடைக்கும் பட்சத்தில் கிழக்கில் ஒரு முன்மாதிரியான பாடசாலையாக பொத்துவில் மினாறுல் உலூம் திகழும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அதற்கு அந்தப் பாடசாலையின் ஆசிரியர்களும், சமூகமும் வழங்கி வரும் ஒத்துழைப்புக்கள் மிகவும் பெறுமதியானதாகும்.
0 comments :
Post a Comment