கடந்த சில வாரங்களாக அகோரமாக கடலரிப்பை சந்தித்துள்ள சாய்ந்தமருது பிரதேசத்தின் மீனவ வாடிகள், பள்ளிவாசல், பூங்காக்கள் என்பன கடலரிப்பில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீன்பிடி நடவடிக்கையும் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் உயர் மட்ட பிரமுகர்கள், அதிகாரிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று மாலை சாய்ந்தமருது அல்- ஹசனாத் பள்ளிவாசலில் இடம்பெற்றது.
அதிக மீன் உற்பத்தியை கொண்ட இந்த பிரதேச மீனவர்களின் பிரச்சினைகளை இன்று காலை கள விஜயம் மேற்கொண்டு கேட்டறிந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், முன்னாள் இராஜங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மேலதிக நடவடிக்கை எடுக்கும் வகையில் சாய்ந்தமருது பிரதேச செயலாளருக்கு முன்வைத்த பணிப்புரைக்கு அமைவாக நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கரையோரம் பேணல் திணைக்கள கிழக்கு மாகாண பொறியியலாளர் எம். துளசி தாசன் கலந்து கொண்டு கரையோரம் பேணல் திணைக்களம் இவ் விடயம் தொடர்பில் இதுவரை முன்னெடுத்துள்ள வேலைதிட்டங்கள் தொடர்பிலும், எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் சபைக்கு விளக்கினார்.
இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், முன்னாள் இராஜங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கலாநிதி ஏ.எம். ஜமீல், சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எச். நிஷார்தீன், கரையோரம் பேணல் திணைக்கள சாய்ந்தமருது பிரதேச அதிகாரிகள், சாய்ந்தமருது பிரதேச செயலக அதிகாரிகள், சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி அமைப்பின் நிர்வாகிகள், மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த கலந்துரையாடலின் போது துரிதகெதியில் இப்பணியை முன்னெடுக்க தேவையான விடயங்கள் தொடர்பில் சபையோரால் ஆழமாக ஆராயப்பட்டதுடன், இப்பணியை முன்னெடுக்க தேவையான நிதியை பெறுவது தொடர்பிலும், திட்டவரைபை வரைவது தொடர்பிலும் கலந்துரையாடி நிலையான தீர்மானங்களை எடுக்க தேவையான நடவடிக்கையை பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அரச உயர் மட்டங்களை தொடர்பு கொண்டு எடுத்தார். இந்த பிரச்சினைக்கு ஒரு குழுவாக இணைந்து செயற்பட்டு தீர்வை காண இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment