ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் அமைதியாக இருந்த முஸ்லிம் பிரதேசங்களில் மீண்டும் வன்முறைகள் தலைதூக்கி இருப்பதையே அண்மையில் நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலும் நடக்கும் விடயங்கள் சுட்டிக்காட்டுகின்றன. முஸ்லிம் சமூகத்தில் தொடர்ந்து மோதல்கள் உருவாகும் வரை நாம் காத்திருக்க முடியாது. எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கு மத, அரசியல், சிவில் தலைவர்கள் பாரபட்சமின்றி நடுநிலையோடு செயல்பட வேண்டும் என ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினரும், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலிலூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையின் தென்மாகாணத்தில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதலின் போது பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு நீதிமன்ற நடவடிக்கையின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தேசிய பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் இடம்பெற்று ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் பிரதேசத்தில் இருந்த இறைநேசர் ஒருவரின் ஸியாரம் ஒன்றும் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு உடைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் எடுத்துக்காட்டுவது என்னவென்றால் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் அமைதியாக இருந்த முஸ்லிம் பிரதேசங்களில் மீண்டும் வன்முறைகள் தலைதூக்கி இருப்பதையே சுட்டிக்காட்டுகின்றன. முஸ்லிம் சமூகத்தில் தொடர்ந்து மோதல்கள் உருவாகும் வரை நாம் காத்திருக்க முடியாது. எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கா விட்டால் மனிதாபிமானமற்ற முறையில் அடக்கி ஒடுக்கும் மாற்று சிந்தனைகளும், சட்டவிரோத எண்ணங்களும் வளர வாய்ப்புள்ளது. பின்னர் அதை அதிகார பேராசை கொண்ட புவிசார் அரசியல் சதிகாரர்கள் அதைப் பயன்படுத்தி நாட்டை சீரழிக்க எத்தனிப்பர். இவ்வாறான சம்பவங்களில் முஸ்லிம் சமூகத்தின் இளைஞர்களை பலிகடா ஆக்காமல் இருப்பது முஸ்லிம் சமூகத்தின் மத, அரசியல் மற்றும் சிவில் தலைவர்களின் பொறுப்பாகும்.
இந்த மோதல்களின் அடிப்படை காரணம் என்ன என்பதையும் நாம் உடனடியாக கண்டறிய வேண்டும். ஏனென்றால், கண்ணுக்குத் தெரியாத ஒரு அதிகாரபலம் அவர்களின் லட்சியங்களை நிறைவேற்றுவதற்காக நம்மைப் பிரிக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. இவ்வாறான செயற்பாடுகள் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த மோதல்களை நிறுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக தலையிட்டு விசாரணை செய்து சட்டத்தை பலப்படுத்தி வேண்டும் என்பதே அமைதியான இஸ்லாத்தை பின்பற்றும் இலங்கை முஸ்லிங்ளின் உண்மையான விருப்பமாகும் என்று தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment