அஸ்ஹர் இப்றாஹிம்-
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல பகுதிகளிலுமுள்ள பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லையினால் வாகன சாரதிகளும் பாதசாரிகளும் பாடசாலை மாணவர்களும் பெண்களும் முதியவர்களும் பலவிதமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
கட்டாக்காலி மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவோர் ஆய்ந்தோய்ந்து பாராமல் தமது பராமரிப்பிலுள்ள மாடுகளை விளைச்சல் நிலங்களிலும் மக்கள் பயன்படுத்தும் பாதைகளிலும் குறிப்பாக பிரதான வீதிகளில் விடுவதனால் ஆபத்தான பல சம்பவங்கள் அண்மைக்காலங்களில் இடம்பெற்றுள்ளன.
வீதியில் பயணிக்கும் மோட்டார் சைக்கிளுக்கு முன்னால் இவை திடீரென பாய்வதால் விபத்துக்குள்ளாகி பலர் உயிரிழந்துள்ளதுடன் , அங்கவீனர்களாகவும் இந்த பிரதேசத்தில் பலர் வாழ்ந்து வருகின்றனர்.
மாடுகள் கழிக்கும் மலத்தினால் பலவிதமான சுகாதார சீர்கேடுகள் இடம்பெறுவதுடன் மலத்தில் வழுக்கி விபத்துக்களும் சம்பவித்துள்ளன.
மாநகர சபைகளாலும் ஏனைய பிரதேச சபைகளினாலும் இவ்விடயம் தொடர்பாக பலமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் தொடர்ச்சியான நிலையான திட்டமொன்று வகுக்கப்படாமையினால் தொடர்ந்தும் இக் கட்டாக்காலிகள் பிரதான வீதிகளிலேயே திரிகின்றன.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்துமாறு பிரதேச மக்கள் கேட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment