இரண்டாம் மொழி பாடநெறியானது ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் இருந்து இன்று வரை விறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் சிங்கள எழுத்துக்கள், சிங்கள மொழி ஆடல் பாடல்கள், கலந்துரையாடல்கள், சிங்கள மொழி பேசுபவர்களிடமிருந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம், சமூக ஒன்றுகூடல், வெளிக்களப் பயணம் போன்ற பல செயற்பாடுகள் எழுத்தாணி கலைப் பேரவை மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சிங்கள , தமிழ் மொழி மூல பாடநெறியின் ஒரு கட்டமாக சமூக ஒன்றுகூடலானது இரு மொழி பேசும் சமூகத்தினருக்கு இடையில் நல்லிணக்கத்தையும் அவர்களின் மரபு முறைமைகளையும் அறிந்து கொள்வதற்காக தமிழ் மொழி பேசும் நாம் சகோதர மொழி பேசும் நண்பர்களை மட்டுமின்றி அவர்களது குடும்பத்தையும் சந்திக்கும் நிகழ்வானது எழுத்தாணி அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிங்கள மொழி கற்கும் தமிழ் மொழியினரும் தமிழ் மொழி கற்கும் சிங்கள மொழியினரும் தெரிவு செய்யப்பட்டு சிங்கள மொழி பேசும் நண்பர்களை சந்திக்க பயணத்தை ஆரம்பித்தனர். அந்த வகையில் நானும் எனக்காக தெரிவு செய்யப்பட்ட சகோதரியின் வீட்டுக்கு செல்ல ஆரம்பித்தேன். திருகோணமலை நகரிலிருந்து புறப்பட்டு கன்னியா வீதி வழியாக சென்று மஹதில்வெவ (Mahadelvewa) எனும் இடத்தை அடைந்தேன். அங்கிருந்து எனக்காக தெரிவு செய்யப்பட்ட எம்.எம்.மியுரி அசங்கிகா சகோதரியின் வீட்டிற்கு சென்றடைந்தேன்.
சகோதரியின் வீட்டுக்கு சென்றதும் என்னை முதல்முறையாக பார்த்தது போல் இல்லாமல் நீண்ட காலம் பழகிய ஒரு உறவைப் போல் வீட்டுக்குள்ளே அனைவரும் வரவேற்றார்கள். அங்கே இருக்கையில் அமர வைத்தது மட்டுமின்றி அவர்களுக்கே உரித்தான விருந்தோம்பல் சிறப்பாக முதலில் தண்ணீரை குடிப்பதற்கு தந்தார்கள்.
அதன் பின்பு எழுத்தாணி அமைப்பினால் வழங்கப்பட்ட அன்பளிப்பு பொதியினை கொடுத்து அவர்களின் குடும்பத்துடன் சேர்ந்து புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டேன். சிறிது நேர கலந்துரையாடலின் பின் காலை உணவினை சாப்பிட தயாரானோம். அவர்களது பாரம்பரிய உணவான பாற்சோறும் கட்டை சம்பலும் காலை உணவாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.
நான் கல்வி பயின்ற சிங்கள வாக்கியங்களை புரியும் படி கதைத்து ஓரளவு அக்குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் பேசிக்கொண்டேன். சகோதரியின் குடும்பத்தில் அம்மா, அப்பா, இரண்டு தங்கைகள், சகோதரியியையும் சேர்த்து மொத்தமாக ஐந்து பேர் இருக்கின்றார்கள். சகோதரியின் அம்மா வீட்டிலிருந்து தனது வேலைகளை செய்து எல்லோரையும் அன்பாக பார்த்துக் கொள்கிறார்கள். சகோதரியின் அப்பா பாலர் பாடசாலையில் ஆசிரியராக பணி புரிகின்றார். ஒரு தங்கை தரம் ஒன்பதில் கல்வி பயில்பவராகவும் இரண்டாவது தங்கை தரம் ஐந்தில் கல்வி பயில்பவராகவும் இருக்கின்றார்கள்.
சகோதரியின் குடும்பத்தின் கடைசி பெண் பிள்ளையாக தரம் ஐந்தில் கல்வி பயிலும் சகோதரியிடம் கலந்துரையாடினேன். குட்டி சகோதரியிடம் நீ வருங்காலத்தில் என்னவாக வர ஆசைப்படுகின்றாய் என்று கேள்வி எழுப்பியவுடன் சற்றும் கூட தாமதிக்காமல் நான் ஒரு நடன ஆசிரியராக வரவேண்டும் என்று தனது பதிலை ஆணித்தரமாக உறக்க சொன்னாள். அந்த சிறுபராயத்தில் இருந்தே தனக்கென ஒரு இலக்கை வைத்துக் கொள்ளும் குட்டி சகோதரிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
அதன் பின்பு அவர்களது வீட்டின் அருகில் இருக்கும் விகாரைக்கும் அழைத்துச் சென்றார்கள். விகாரையில் இருக்கும் முக்கியமான அனைத்து இடங்களும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக காட்சியளித்தது.
விகாரையில் இருக்கும் மதகுருவிடம் அழைத்து சென்று அறிமுகப்படுத்தியது மட்டுமின்றி பிரித் ஓதிய நூலையும் எனது கையில் மதகுரு மூலம் கட்டிவித்தார்கள்.
விகாரையில் நான்கு சிறிய மத குருமார்களும் ஒரு பெரிய மத குருவும் இருக்கின்றார்கள். பின்பு அங்கிருந்து சகோதரியின் வீட்டுக்கு எல்லோரும் சென்றோம். மறுபடியும் சிறிய கலந்துரையாடலின் பின்பு மதிய உணவை எல்லோரும் சேர்ந்து உட்கொண்டோம். மதிய உணவாக சோறும் குளத்து மீன் கறியும் அதனுடன் மரக்கறிகளும் இருந்தது. மதிய உணவாக இல்லாமல் பெரியதொரு விருந்தோம்பலாக இருந்தது.
மதிய உணவை முடித்த பின்பு சகோதரியின் தந்தையிடம் கலந்துரையாடினேன். அவருடன் நடந்த கலந்துரையாடலில் நான் பெற்றுக்கொண்ட விடயம் யாதெனில் நமது நாட்டில் நிறைய பிரச்சனைகள், யுத்தங்கள் நடந்தது நாம் அனைவரும் அறிந்ததே. அப் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் மொழி புரிந்துணர்வு இல்லாமையே ஆகும். அதாவது நல்லிணக்கம் இல்லாமலும், அம் மொழியை உணர்வு பூர்வமாக புரிந்து கொள்ளாமையே ஆகும். சிறந்த சிந்தனைகளும் , சிறப்பான தெளிவூட்டல்களுமே ஒரு நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல உதவும்.
சகோதரியின் வீட்டிலிருந்து புறப்படும் போது சகோதரியின் அன்பு பரிசாக பலாப்பழம் ஒன்றை தந்து வழியனுப்பி வைத்தார்கள். அப்பலாப்பழத்தின் சிறப்பு என்னவெனில் இரு பலாப்பழங்களும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இணைந்திருப்பதே ஆகும்.
பலாப்பழம் எவ்வாறு ஒன்று சேர்ந்து இணைந்து இருக்கின்றதோ அதுபோல் நாமும் இனம் மதம் மொழி வேறுபாடு பாராமல் அனைவரிடமும் ஒற்றுமையாக இருப்போம் என்பதை இதன் மூலம் உணரக்கூடியதாக இருக்கும். இவ் இணைந்த பலாப்பழத்தை உதாரணமாக எடுத்து பார்த்தோமானால் சிங்கள மொழியும் தமிழ் மொழியும் இணைந்து இருப்பதாக எடுத்துக்கொண்டு இரு மொழியையும் பாரபட்சம் பாராமல் உணர்வு பூர்வமாக கற்க வேண்டும் என்கின்ற எண்ணம் எம் எல்லோர் மனதிலும் வரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
குடும்ப அங்கத்தவர்களுடன் மேலும் ஐந்து அங்கத்தவர்கள் இணைக்கப்பட்டது இவ் சமூக ஒன்றுகூடலினால் மட்டுமே சாத்தியமானது என்பது குறிப்பிடத்தக்கது. அச் சாத்தியமானது எழுத்தாணி அமைப்பின் மூலமே என்பதை இதன் மூலம் நான் ஆணித்தரமாக கூறிக்கொள்கின்றேன்.
இப் பாடநெறியின் அடுத்த கட்டமாக திருகோணமலையில் இருந்து கண்டிநோக்கிய வெளிக்களப் பயணம் அமைந்தது. ஊடகத்துறையில் நீண்ட கால அனுபவங்களை பெற்று இன்றுவரை மனம் தளராது உண்மையை மட்டுமே உரக்கச் சொல்லி சேவையாற்றிக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர்கள் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு இதன் மூலம் கிடைத்தது.
மொழியானது எவ்வளவு தூரம் முக்கியம் என்பதை நாம் ஊடகவியலாளர்களிடம் இருந்தே கற்றுக் கொள்ள வேண்டும். காரணம் ஊடகவியலாளர்கள் தமது செய்திகளை மக்களுக்கு வழங்கும் போது அச்செய்தியின் உண்மைத்தன்மை எந்த அளவுக்கு உறுதியானது என்பதை எடுத்துக் கூற வேண்டும். உண்மைத் தன்மை இருக்க வேண்டுமென்றால் இரண்டாம் மொழியில் புலமை பெற்றிருக்க வேண்டும். ஒரு தகவலானது சரி வர மக்களின் மத்தியில் சென்றடைய மொழியறிவு இன்றியமையாததொன்றாகும்.
சிரேஷ்ட ஊடகவியலாளரொருவர் கருத்து தெரிவிக்கையில்
அரச அலுவலகங்களில் கடமை புரியும் போது பல சிங்கள கடிதங்கள் என் மேசைக்கு வரும். அதைப் படிக்கத் தெரியாமல் பல தடவைகள் நான் சிரமப்பட்டு இருக்கின்றேன் பிறகு எனது முயற்சியின் பலனாக சிங்கள மொழியை கற்றதன் பின்னர் சிங்கள சகோதரர்களுக்கு கூட எழுதிக் கொடுக்கும் அளவுக்கு என்னை மாற்றிக் கொண்டேன் எனக் கூறினார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐ.எம்.ஜீ.வி.இலங்கன் திலக தமது அனுபவப் பகிர்வை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். அதாவது இரண்டாம் மொழியினை தாம் கற்றுக்கொண்டது கடைகளில் எழுதி போடப்பட்ட பலகைகளில் இருக்கும் எழுத்துக்களை வாசித்தும் ஓரளவுக்கு எழுதியும் பழகி தனது இரண்டாம் மொழியின் மீது உள்ள தீரா காதலால் மொழியை இலகுவாக கற்றுக் கொண்டார். மேலும் அவர் கூறுகையில் தமிழர்கள் ஆச்சரியப்படும் வகையில் தான் தமிழ் பேசுவதாகவும் தன்னுடைய கடைக்கு வருபவர்களுக்கு தமிழ் மொழி மூலமே கணக்கு எழுதி கொடுப்பதாகவும் கூறினார்.
பல ஊடகவியலாளர்கள் பலவாக கருத்துக்களை தெரிவித்த போதிலும் இவரை மட்டும் மையப்படுத்தியது ஏனென்றால் இவரை போல் தான் நானும் வீதி வழியாக செல்லும் போது போடப்பட்டிருக்கும் விளம்பரப் பலகைகள், துண்டு பிரசுரங்கள், பேருந்துகளில் எழுதப்பட்டிருக்கும் வசனங்கள் என ஒன்றும் விடாது வாசித்துவிட்டே செல்வேன். இன்னும் என்னால் முழுமையான பயிற்சியை மேற்கொண்டு எனது தாய்மொழி போலவே இரண்டாம் மொழியிலும் எழுதவும் வாசிக்கவும் கதைக்கவும் சிறந்த சிந்தனைகளை செயற்படுத்தி இன நல்லிணக்கத்துக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் வித்திட என்னால் முடிந்தவற்றை செய்வேன் என இப்பாடநெறியின் மூலம் கூறிக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.
ஊடகவியலாளர்கள் தமது அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருக்கும் வேளையில் இடை நடுவே எமது நிகழ்ச்சிகளும் அரங்கை இன்னும் மெருகேற்றின.மேலும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கான நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது. அதன் பின்பு வரலாற்று சிறப்புமிக்க மாத்தளை முத்துமாரியம்மன் கோவிலுக்கு சென்றடைந்தோம். இலங்கையில் இந்த ஆலயமே ஐந்து தேர்களைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி 108 அடி உயரமான இராஜகோபுரமும் அமைந்துள்ளது. தொன்று தொட்டு வரும் அதன் சிறப்புகளையும் மகிமைகளையும் சகோதர மொழி பேசும் உறவுகளுக்கு எடுத்து சொல்லக்கூடியதாக இப் பயணம் அமைந்தது.
தமிழ், சிங்கள மொழி பேசும் மக்களிடையே நல்லதொரு உறவுப் பாலமாக அமைவது மொழி அறிவேயாகும்.மொழியை கற்றறிவதன் மூலம் இரு மக்களின் மத்தியிலும் புரிந்துணர்வுடன் கூடிய இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும். அதுவே நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாத காரணமாக இருக்கும் என்பது எனது கருத்து.
மொழி என்பதை நமது தேவைக்காக படிக்காமல் அதனை உணர்ந்து ஒரு உணர்வுபூர்வமாக நாம் கற்றோமானால் மக்களுக்கு இடையிலான புரிந்துணர்வானது சிறப்பாக இருக்கும் என்பது எனது இன்னுமொரு கருத்தாக அமைகின்றது. மொழி மூலமே இன நல்லிணக்கத்துக்கு வித்திடலாம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.
இப்பாடநெறியில் வளவாளர்களாக நியமிக்கப்பட்ட அனைத்து வளவாளர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்வதோடு மட்டும் நின்று விடாது இப் பாடநெறியின் பெரும் பங்கானது வளரவாளர்களையே சாரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. எனக்கு இவ் வாய்ப்பினை ஏற்படுத்தி தந்த எழுத்தாணி கலைப் பேரவைக்கும், விரித்திக்கும், தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிவசுப்பிரமணியம் சுரேந்திரன்
திருகோணமலை
0 comments :
Post a Comment