அஸ்ஹர் இப்றாஹிம்-
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு நுளம்பு பரவுவதற்கான சூழல் ஏற்பட்டு வருவதாகவும், அதற்கேற்ற சூழலை வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்தார்.
தற்போது பரவலாக இடைவிட்ட மழை பொழிய ஆரம்பித்துள்ளதால், இந்த காலநிலை டெங்கு நுளம்பு பெருகுவதற்கு உசிதமான சூழலை ஏற்படுத்தக் கூடும். இதனால் பொது மக்கள் மிகவும் விழிப்பாகவும் அவதானமாகவும் இருக்க வேண்டியது அவசியமாகின்றது.
சுகாதார வைத்திய அதிகாரி காரியாலங்கள் மூலமாக ஒவ்வொரு பிரதேசத்திலும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், சுகாதார வைத்திய அதிகாரிகள், சமூக மட்ட பொது அமைப்புகள், கிராம மட்ட விழிப்புணர்வு குழுவினர்,சிரேஷ்ட பிரஜைகள், விளையாட்டுக் கழகங்கள் ஆகியவற்றை ஒன்றிணைத்து வீடு வீடாகச் சென்று டெங்கு நுளம்பின் தாக்கம் பற்றியும் அதிலிருந்து விடுபட வேண்டிய வழிமுறைகள் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் அதிபர்கள் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்போடு பாடசாலை சூழலை டெங்கு நுளம்பற்ற பிரதேசமாக பேண வேண்டும்.
இவ்வாறான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு பெரிதும் வேண்டப்படுவதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment