மேற்கத்தையவர்களின் சம்பள பட்டியலில் எம்மவரும்?- ஹரீஸ் காட்டம்



மேற்கத்தையவர்களின் சம்பள பட்டியலில் இருப்பவர்கள் எமது தாய் மண்ணை காட்டிக்கொடுத்தும், மண்ணின் மகிமைகளை கொச்சைப்படுத்தியும் முறைகேடாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் : எச்.எம்.எம். ஹரீஸ் (எம்.பி)

நூருல் ஹுதா உமர்-
மேற்கத்தையவர்களின் சம்பள பட்டியலில் நிறைய அரசியல்வாதிகள், அதிகாரிகள் இந்த நாட்டில் இருந்து கொண்டிருக்கிறார்கள். அதில் முஸ்லிம் சமூகமும் விதிவிலக்கல்ல. முஸ்லிம் சமூகத்தின் உயர்ந்த திறமைசாலிகள் என்று அடையாளப்படுத்தப்படுபவர்கள் மேற்கத்தையவர்களின் சம்பள பட்டியலில் இருந்து கொண்டு தான் வாழும் எமது மண்ணை காட்டிக்கொடுத்தும் ஊரின் மகிமைகளை கொச்சைப்படுத்திக் கொண்டும், ஊடகங்களில் வந்து தாய் மண்ணையே காட்டிக்கொடுத்துக் கொண்டும், தென்கிழக்கு பிராந்தியத்தில் புகழ் பூத்த ஊரின் மகிமைகளையும், தேவைகளையும் பற்றி மோசமான வார்த்தைகளை கொண்டு கொச்சைபடுத்தி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை இலுமினாட்டி வர்க்கமாகவே பார்க்கவேண்டியுள்ளது. அந்த இலுமினாட்டி வர்க்கத்தினர் மாதாமாதம் சம்பள பட்டியல் (Payroll) இருந்து கொண்டு எமது கிழக்கு பிராந்திய எதிர்கால சந்ததிகளை நாசமாக்கும் பணியையே சரியாக செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தாய்மண்ணையும், கிழக்கு பிராந்தியத்தையும் மேற்கத்தைய சக்திகளுக்கு காட்டிக்கொடுப்பதுடன் நாட்டுக்கு எதிராக செயற்படும் சக்திகளுடன் கரம் கோர்த்து இலுமினாட்டிகளாக மாறி "பசுத்தோல் போத்திய புலிகளாக" சமூகத்தில் உலா வந்துகொண்டிருக்கிறார்கள் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.


இன்று (10) கல்முனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்த நாட்டுமக்கள் தான் விரும்பும் தலைவரை தெரிவு செய்ய முடியாது. சுதந்திரமாக தான் விரும்பியது போன்று வாழ முடியாது. நாம் நினைத்தது போன்று இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது. என்ற நிலையே இருக்கிறது. எமது நாடு தெற்காசியாவின் இந்து சமுத்திரத்தில் முக்கிய இடத்தில் இருந்து கொண்டிருக்கிறது. அதனால் அந்நிய சக்திகளின் ஆதிக்கம் எமது நாட்டில் அதிகமாகவே இருக்கிறது. ரஷ்ய- அமெரிக்க பனிப்போர் நடந்தபோது பசுபிக் சமுத்திரத்தை யார் தக்கவைப்பது என்று அதிகார மையத்துக்கான போராட்டம் பலமாக இருந்தது. அதே போன்று இப்போது சீன- அமெரிக்க வல்லரசு போட்டிக்காக இந்து சமுத்திரம் அதிகார மையமாக்கப்பட போட்டிகள் எழுந்துள்ளது.


அதனால் இந்துசமுத்திரத்தை கையகப்படுத்த பாதுகாப்பு ரீதியாக கேந்திரமுக்கியத்தும் வாய்ந்த இந்து சமுத்திரத்தின் முத்தான நமது நாடு இப்போது அவர்களின் பிடிக்குள் இருக்கவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. அதனால் தான் விரும்பியவர்களின் கையில் ஆட்சி இருக்கவேண்டும் என்பதாக உலகளாவிய மற்றும் கீழத்தேய நாடுகள் நினைக்கிறார்கள். எமது நாட்டின் அரசாங்கம் அவர்களுக்கு சார்பாக இயங்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். அதற்காக அவர்கள் முழுமையான நிகழ்ச்சிநிரலுடன் எமது நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.


எமது நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை நிமிடத்திற்கு நிமிடம் மாறலாம். அதனை அடிப்படையாக கொண்டு 2017 இல் அமெரிக்கா 02 லட்சம் ஏக்கர் காணிகளை எம்.சி.சி. ஒப்பந்தத்தின் ஊடாக கிழக்கிலிருந்து மன்னார் வரை கையப்படுத்த இருந்தது. ஏதோ சில எதிர்ப்புக்களினால் அது கைவிடப்பட்டது. இன்று மீண்டும் தெற்காசிய பாதுகாப்பு கேந்திரநிலையத்தை எப்படி உருவாக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அதிகார பழிவாங்கல் அரசியலை கைவிட்டு தனிநபர்ஆளுமை (Face value) அரசியலை நோக்கி இன்று பழிவாங்கல் அரசியலிலிருந்து விலகி கணக்கு (calculation) பார்த்து அரசியல் காய் நகர்த்துவதிலும், மூலோபாய அரசியல் (strategic Politics) காய் நகர்த்துவதிலும் அரசியல் சென்று கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் தான் அடுத்த வருடம் நாம் ஜனாதிபதி தேர்தலை சந்திக்க போகிறோம்.


நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து இருக்கும் இந்த நிலையில் அதை கட்டியெழுப்பும் தலைமையை உருவாக்குவது பற்றி நாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது எமது நாட்டுக்கு ஜனாதிபதியாக மக்களின் வாக்குகளினால் ஒருவர் தெரிவாவதை விட தத்தமது நாடுகளுக்கு விருப்பமான ஒருவர் ஆட்சியில் அமர்வதையே மேற்கத்தைய நாடுகளும், அந்நியநாடுகளும் ஆசிய நாடுகளும் விரும்புகிறது. கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் இப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வல்லமை கொண்டவர் என்பதில் மாற்று கருத்துக்களுக்கு இடமில்லை- என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :